தங்கம் விலை சவரனுக்கு ரூ. 480 குறைந்தது!தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

திமுக எம்.பி. செந்தில்குமார் கருத்தால் மக்களவையில் அமளி

ஐந்து மாநிலத் தேர்தல் முடிவுகள் குறித்து திமுக எம்.பி. செந்தில்குமார் கூறிய கருத்துக்கு மக்களவையில் பாஜக உறுப்பினர்களும் அமைச்சர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

News image
Updated On :6 டிசம்பர் 2023, 9:39 pm

ஐந்து மாநிலத் தேர்தல் முடிவுகள் குறித்து திமுக எம்.பி. செந்தில்குமார் கூறிய கருத்துக்கு மக்களவையில் பாஜக உறுப்பினர்களும் அமைச்சர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் ஏற்பட்ட அமளியால் கேள்வி நேரம் புதன்கிழமை ஒத்திவைக்கப்பட்டது.

இந்த விவகாரத்தில் திமுக எம்.பி. செந்தில்குமார் மீது முதல்வர் மு.க.ஸ்டாலின் ஒழுங்கு நடவடிக்கை எடுத்துள்ளார் என மக்களவையில் திமுக குழுத் தலைவர் டி.ஆர்.பாலு தெரிவித்தார்.

ஜம்மு-காஷ்மீர் மறுசீரமைப்பு திருத்த மசோதா விவாதத்தில் டிச. 5}ஆம் தேதி பங்கேற்று பேசிய தருமபுரி மக்களவைத் தொகுதி திமுக உறுப்பினர் செந்தில்குமார், ஹிந்தி பேசும் மாநிலங்களில் பாஜக வெற்றி பெறுவது குறித்து குறிப்பிட்டபோது கௌ மூத்ரா (கோ மூத்ரா) என்ற வார்த்தையைப் பயன்படுத்தினார். அந்த வார்த்தை பின்னர் அவைக் குறிப்பிலிருந்து செவ்வாய்க்கிழமை இரவு நீக்கப்பட்டது.

இந்த விவகாரம் சமூக வலைதளங்களில் எழுப்பப்பட்ட பின்னர் செந்தில்குமார் அன்றைய தினமே மன்னிப்பு கேட்டுக்கொண்டார். ஆனால், இந்த விவகாரம் மக்களவையில் புதன்கிழமை எதிரொலித்தது. கேள்வி நேரத்தின்போது டி.ஆர்.பாலு கேள்வி கேட்க எழுந்தபோது, பாஜக உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர்.

நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி, அமைச்சர் பியூஷ் கோயல் ஆகியோர் "முதலில், நேற்று அவருடைய கட்சி (திமுக)உறுப்பினர் பேசிய பேச்சுக்கு மன்னிப்பு கேட்க வேண்டும்' என்றனர். அதற்கு டி.ஆர்.பாலு, "இது கேள்வி நேரம், கேள்வி கேட்க அனுமதியுங்கள்' என்றார். தொடர்ந்து இருதரப்பிலும் குறுக்கீடுகள் எழுந்தன. அமைச்சர் பிரகலாத் ஜோஷி, "வடக்கு- தெற்கு எனப் பேசி நீங்கள் நாட்டை பிளவுபடுத்த முயற்சிக்கிறீர்கள்" என்றார். தொடர்ந்து அமைச்சர் பியூஷ் கோயல், "நீங்கள் (திமுக) மன்னிப்பு கோர வேண்டும்' எனக் கூற அவையில் கூச்சல், குழப்பம் ஏற்பட்டது. பின்னர், சுமார் 11.40 மணியளவில் அவை ஒத்திவைக்கப்பட்டது. அவை பகல் 12 மணியளவில் மீண்டும் கூடியபோதும் அவசர முக்கியத்துவம் வாய்ந்த பிரச்னை தொடர்பான விவாதத்தில் தமிழக புயல் நிவாரணம் தொடர்பாக டி.ஆர்.பாலு பேச எழுந்தார்.

அப்போது நாடாளுமன்ற விவகாரத் துறை இணையமைச்சர் மற்றும் பாஜக உறுப்பினர்கள் பிரச்னையை எழுப்பி, "திமுக எம்.பி. கூறிய கருத்தை டி.ஆர்.பாலுவும், ராகுல் காந்தியும் ஏற்றுக் கொள்கிறீர்களா?' எனக் கேள்வி எழுப்பினர்.

பின்னர், டி.ஆர். பாலு விளக்கம் அளித்தார். அவர் கூறுகையில், "திமுக உறுப்பினர் செந்தில்குமார் கூறிய கருத்துகள் ஏற்புடையது அல்ல. திமுக தலைவர் மு.க. ஸ்டாலினும் இதை மிகவும் தீவிரமாக கவனத்தில் எடுத்துக்கொண்டு உறுப்பினர் செந்தில்குமாரை எச்சரித்துள்ளார். செந்தில்குமார் ஒழுங்கு நடவடிக்கையை எதிர்கொண்டுள்ளார். அவையிலும் மன்னிப்புக் கேட்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மன்னிப்பு கோருவார்' என்றார்.

தொடர்ந்து அவையில் செந்தில்குமார் பேசுகையில், "நான் கவனக்குறைவாகப் பேசியது அவை உறுப்பினர்கள், சில தரப்பினரின் உணர்வுகளைப் புண்படுத்திருந்தால் நான் கூறியவற்றை திரும்பப் பெறுகிறேன். இதற்காக வருத்தம் தெரிவிக்கிறேன்' என்றார்.

இயற்கைப் பேரிடராக அறிவிக்க வலியுறுத்தல்: முன்னதாக, தமிழகத்தில் ஏற்பட்டுள்ள புயல் பாதிப்புகள் குறித்து டி.ஆர்.பாலு பேசினார். அப்போது, தமிழகம் முழுவதும், 1.2 கோடிக்கும் அதிகமான மக்கள் புயலால் பாதிக்கப்பட்டுள்ளனர். 47 ஆண்டுகளுக்குப் பிறகு, இப்படிப்பட்ட வெள்ளம் தற்போது ஏற்பட்டுள்ளது. இதை இயற்கைப் பேரிடராக மத்திய அரசு அறிவித்து நிவாரண நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தினார். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.