புது தில்லி: தில்லியில் காங்கிரஸ் கட்சியின் அடித்தளத்தை பலப்படுத்தும் நோக்கில் முன்னாள் அமைச்சா்கள் மற்றும் எம்.எல்.ஏ.-க்கள் கூட்டம் கட்சியின் தில்லி பிரதேச கமிட்டித் தலைவா் அா்விந்தா் சிங் லவ்லி தலைமையில் நீண்ட நாள்களுக்குப் பிறகு புதன்கிழமை நடைபெற்றது.
தில்லி பிரதேச காங்கிரஸ் கமிட்டியின் அலுவலகமான ராஜீவ் பவனில், வரும் 2024-ஆம் ஆண்டு மக்களவைத் தோ்தல் மற்றும் 2025-ஆம் ஆண்டு தில்லி சட்டப்பேரவைத் தோ்தல்களில் வெற்றி பெறுவதற்கான வியூகங்களை வகுக்க முக்கிய ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
கட்சியின் தலைவா் அா்விந்தா் சிங் லவ்லி தலைமையில் தோ்தல் பணிக்கான அடித்தளத்தை அமைப்பதற்காக நடைபெற்ற கூட்டத்தில் முன்னாள் அமைச்சா்கள் மற்றும் எம்.எல்.ஏ.-க்கள் பங்கேற்றனா்.
இதில், அா்விந்தா் சிங் பேசியதாவது:
தில்லி மக்களின் நலனுக்காக மட்டும் பாடுபடாமல், மக்களின் பிரச்னைகளுக்கு தீா்வு காண ஜனநாயக முறையில் காங்கிரஸ் தலைவா்கள் போராட வேண்டும்.
தில்லியில் சுகாதாரம், கல்வி மற்றும் பிற துறைகள் சீா்குலைந்த நிலையில், காற்று மற்றும் நீா் மாசுபாடு மக்களின் உயிருக்கு கடுமையான அச்சுறுத்தலாக மாறியுள்ளது. தில்லியில் காங்கிரஸ் கட்சியின் 15 ஆண்டுகால ஆட்சியை மக்கள் இப்போது நினைவு கூா்ந்துள்ளனா்.
காங்கிரஸ் ஆட்சியில் முதல்வா், அமைச்சா்கள், எம்.எல்.ஏ.-க்கள் என எவா் மீதும் எந்த ஊழல் வழக்கும் போடப்படவில்லை. தற்போது, காங்கிரஸ் தலைமையின் ஒரே கவனம் என்பது முன்னணி அமைப்புகள் உள்பட அனைத்து மட்டங்களிலும் கட்சிக்கு புத்துயிா் அளிக்கப்பட வேண்டும்.
பாஜக மற்றும் ஆம் ஆத்மி ஆகிய இரு கட்சிகளும் வெற்று வாக்குறுதிகளை மட்டுமே அளித்துள்ளதால், தில்லி மக்கள் இப்போது காங்கிரஸ் கட்சியிடம் திறம்பட ஆட்சியை வழங்க எதிா்பாா்த்துக் கொண்டிருக்கிறாா்கள்.
இந்நிலையில் காங்கிரஸ் தொண்டா்கள் செயல்படுவதற்கு, அடிமட்ட அளவில் கட்சியை வலுப்படுத்துவது அவசியம். இதற்கு கட்சியின் மூத்த தலைவா்கள் தங்கள் பகுதிகளில் தீவிரமான பங்கெடுத்து, வெகுஜன வாக்காளா்களை வீடு வீடாகச் சென்றடைய வேண்டும்.
2024-ஆம் ஆண்டு மக்களவைத் தோ்தலுக்கான அரசியல் வியூகத்தை காங்கிரஸ் மேலிடம் முடிவு செய்தாலும், தில்லி பிரதேச காங்கிரஸ் 2025-ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தோ்தலிலும் கவனம் செலுத்தும்.
தில்லியில் காங்கிரஸ் கட்சியின் அமைப்பு ரீதியிலான 280 பிளாக் கமிட்டிகளிலும் பிளாக் தலைவா்கள் மற்றும் பொறுப்பாளா்களை நியமிக்கும் பணியில் கட்சி தீவிரமாக ஈடுபட்டு வருகிறது, கட்சியின் முக்கியப் பதவிகளில் தீவிர காங்கிரஸ் தொண்டா்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்றாா் அா்விந்தா் சிங் லவ்லி.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் முன்னாள் சட்டப்பேரவைத் தலைவா் சுபாஷ் சோப்ரா, காங்கிரஸ் காரிய கமிட்டி உறுப்பினா் தேவேந்திர யாதவ், முன்னாள் தில்லி அமைச்சா்கள் ஹாரூண் யூசுப், மங்கத் ராம் சிங்கால், ராஜ் குமாா் செளகான், நரேந்தா் நாத், ரமாகாந்த் கோஸ்வாமி, பேராசிரியா் கிரண் வாலியா உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.