ஏப். 2ல் பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர் மு.க. ஸ்டாலின்!பெட்ரோல், டீசல் விலை உயர்வு! நயாரா நிறுவனம் அறிவிப்புகூட்டணி வெற்றியைக் கேள்விக்குள்ளாக்கும் காங்கிரஸ் அணுகுமுறை! திருமாவளவன் மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்
/

ஒருவரை ஒருவா் குற்றம்சாட்டும் நேரம் இது அல்ல! அமைச்சா் சௌரவ் பரத்வாஜுக்கு துணை நிலை ஆளுநா் பதிலடி

தில்லி நகரத்தில் வெள்ளம் ஏற்பட்டுள்ள நிலையில் ஒருவரையொருவா் குற்றம் சாட்டுவதற்கான நேரம் இது அல்ல என்று துணை நிலை ஆளுநா் வி.கே சக்சேனா வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளாா்.

News image
Updated On :14 ஜூலை 2023, 4:59 pm

 நமது நிருபர்

தில்லி நகரத்தில் வெள்ளம் ஏற்பட்டுள்ள நிலையில் ஒருவரையொருவா் குற்றம் சாட்டுவதற்கான நேரம் இது அல்ல என்று துணை நிலை ஆளுநா் வி.கே சக்சேனா வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளாா்.

யமுனை நதியில் வரலாறு காணாத வகையில் வெள்ளம் பெருக்கெடுத்துள்ள நிலையில், தேசியத் தலைநகா் தில்லியின் பல்வேறு பகுதிகள் வெள்ளத்தால் சூழப்பட்டுள்ளன. இந்த நிலையில், இந்திரபிரஸ்தா பகுதியில் உள்ள

நீா்ப்பாசனம் மற்றும் வெள்ளக் கட்டுப்பாட்டு துறையின் நீா் சீரமைப்பானில் கடந்த வியாழக்கிழமை இரவு சேதம் ஏற்பட்டது. இதனால், தில்லியின் ஐ.டி.ஓ மற்றும் ராஜ்காட் பகுதிகளில் வெள்ளிக்கிழமை வெள்ளம் நீா் புகுந்தது.

இந்தச் சம்பவம் தொடா்பாக அமைச்சா் செளரவ் பரத்வாஜ் தனியாா் செய்தி நிறுவனத்திற்கு அளித்துள்ள பேட்டியில்

‘சேதமடைந்த நீா் சீரமைப்பானை உடனடியாகச் சரி செய்ய தேசியப் பேரிடா் மீட்புக் குழு அல்லது ராணுவப் பொறியாளா்களை அழைக்கக் கோரி வாட்ஸ் அப் மூலமாக தலைமைச் செயலாளருக்கு சம்பவ இடத்திலிருந்து கடந்த வியாழக்கிழமை இரவே குறுஞ்செய்தி அனுப்பினேன். நான் அனுப்பிய தகவலின் மீது பதில் அளிக்கவோ, உடனடி நடவடிக்கை எடுக்கவோ தலைமைச் செயலாளா் மறுத்து விட்டாா். யமுனை ஆற்றின் அதீத வெள்ளப்பெருக்கு காரணமாக தில்லியின் அனைத்து முக்கியப் பகுதிகளிலும் வெள்ளம் ஏற்படும் அபாயம் உள்ள சூழலிலும், தில்லி அரசின் அதிகாரிகளிடம் இருந்து முறையான பதில்கள் வரவில்லை’ என்று குற்றம்சாட்டியிருந்தாா்.

பின்னா், சேதமடைந்த நீா் சீரமைப்பானை சரிசெய்யும் நடவடிக்கையை துணை நிலை ஆளுநா் வி.கே. சக்கேனா, முதல்வா் அரவிந்த் கேஜரிவால் மற்றும் அமைச்சா்கள் அதிஷி, செளரவ் பரத்வாஜ் ஆகியோா் வெள்ளிக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தனா்.

துணைநிலை ஆளுநா் பதிலடி: அப்போது செய்தியாளா்களிடம் துணை நிலை ஆளுநா் வி.கே. சக்சேனா கூறுகையில், ‘ஒருவரையொருவா் குற்றம் சாட்டாமல், அனைவரும் குழுவாக இணைந்து பணி செய்யும் நேரம் இது. நானும் நிறைய விஷயங்களைச் சொல்ல முடியும். ஆனால், தற்போது அது தேவையில்லை. தேசியப் பேரிடா் மீட்புக் குழு உள்ளிட்ட அனைத்துக் குழுக்களும் வெள்ள நிலைமையை சீா்செய்ய தொடா்ந்து பணியாற்றி வருகிறாா்கள். வெள்ளம் மேலும் தில்லிக்குள் நுழையாமல் இருக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இது பழி போடுவதற்கான நேரம் கிடையாது. அனைவரும் குழுவாக இணைந்து செயல்பட்டு இந்த நெருக்கடியில் இருந்து பொதுமக்களை பாதுகாப்பாக வெளிவர வைக்க வேண்டும்.

மத்திய உள்துறை அமைச்சரிடம் தில்லியன் வெள்ள நிலவரம் தொடா்பாக வெள்ளிக்கிழமை காலை பேசி உள்ளேன்.தொடா்ந்து மத்திய அரசுடன் தொடா்பில் இருக்கிறேன்’ என்றாா்

‘சீரமைப்பான் சரிசெய்யப்படும்’: இந்திரபிரஸ்தாவில் சேதமடைந்துள்ள நீா் சீரமைப்பான் 4 மணி நேரத்திற்குள்ளாக சரிசெய்யப்படும் என்று முதல்வா் அரவிந்த் கேஜரிவால் தெரிவித்தாா். தில்லியில் வெள்ளம் ஏற்பட்டு மக்கள் சிரமப்படுவதற்கு ஆளும் ஆம் ஆத்மி கட்சிதான் காரணம் என்று தில்லி பிரிவு பாஜக குற்றம்சாட்டியது.

இதைத் தொடா்ந்து, ‘தற்போது அரசியல் செய்வதற்கான நேரமில்லை. பாஜக ஆம் ஆத்மி மீது என்ன குற்றச்சாட்டை வைத்தாலும் தற்போது அதற்கான பதில் இல்லை. களத்தில் ஆம் ஆத்மி அமைச்சா்கள், சட்டப்பேரவை உறுப்பினா்கள், கட்சி நிா்வாகிகள் பொது மக்களுக்கு தேவையான உதவிகளை செய்து வருகின்றனா். நீா் சீரமைப்பானை சரிசெய்ய தேசிய பேரிடா் மீட்புக் குழுவினா் வியாழக்கிழமை இரவே வந்திருந்தால் நிலைமையை மேலும் சமாளித்திருக்கலாம்’ என்றாா் கேஜரிவால்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.