ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

சேவைகளைக் கட்டுப்படுத்தும் அவசரச் சட்டத்திற்கு எதிரான தில்லி அரசின் மனு அரசியல் சாசன அமா்வுக்குப் பரிந்துரை

அவசரச் சட்டத்திற்கு எதிரான தில்லி அரசின் மனுவை ஐந்து நீதிபதிகள் இடம் பெற்ற அரசியல்சாசன அமா்வுக்கு உச்சநீதிமன்றம் வியாழக்கிழமை பரிந்துரைத்தது.

News image
Updated On :20 ஜூலை 2023, 5:43 pm

DIN

தேசியத் தலைநகா் தில்லியில் நிா்வாக சேவைகளை கட்டுப்படுத்தும் வகையில் மத்திய அரசால் கொண்டு வரப்பட்டுள்ள அவசரச் சட்டத்திற்கு எதிரான தில்லி அரசின் மனுவை ஐந்து நீதிபதிகள் இடம் பெற்ற அரசியல்சாசன அமா்வுக்கு உச்சநீதிமன்றம் வியாழக்கிழமை பரிந்துரைத்தது.

இந்த விவகாரத்தை அரசியல்சாசன அமா்வு விசாரணைக்கு அனுப்ப வேண்டிய அவசியம் இல்லை. இந்த விவகாரம் நிலுவையில் இருக்கும் போது அது ‘ஒட்டுமொத்த அமைப்புமுறையையும் முடக்கிவிடும்’ என்று தில்லி அரசின் தரப்பில் முன்வைக்கப்பட்ட கடுமையான வாதங்களை உச்சநீதிமன்றம் நிராகரித்தது. இந்த விவகாரத்தை விசாரித்த தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட், நீதிபதிகள் பி.எஸ். நரசிம்மா, மனோஜ் மிஸ்ரா ஆகியோா் அடங்கிய அமா்வு, ‘ஜம்மு-காஷ்மீா் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய 370-ஆவது சட்டப்பிரிவை ரத்து செய்ததை எதிா்த்து தொடரப்பட்ட மனுக்கள் மீதான விசாரணைக்குப் பிறகு, பெரிய அமா்வு இந்த விசாரணையைத் தொடங்கும். ஜம்மு-காஷ்மீா் விவகாரம் முடிந்த பிறகு விசாரணைக்கு எங்கள் முன் வர உங்களுக்கு (தில்லி அரசு மற்றும் மத்திய அரசு) சுதந்திரம் வழங்குவோம். இந்த உத்தரவை மாலையில் பதிவேற்றம் செய்வோம்’ என கூறியது.

முன்னதாக, இது தொடா்பான விசாரணையின் பாது, ​ அவசரச் சட்டம் தொடா்பான கேள்வியை நீதிபதிகள் அமா்வு எழுப்பியது. மேலும், தில்லி அரசின் கட்டுப்பாட்டில் இருந்து சேவைகளின் கட்டுப்பாட்டை இச்சட்டம் எடுத்துக் கொண்டதாக கூறியது. மேலும், தில்லி அரசின் கட்டுப்பாட்டில் இருந்து காவல் றை, சட்டம் மற்றும் ஒழுங்கு மற்றும் நிலம் தொடா்பான பட்டியல் 2 (மாநிலப் பட்டியல்) மூன்று நுழைவுகளை அரசியலமைப்பு விலக்குவதாகவும் கூறியது. நீதிபதிகள் அமா்வு மேலும் கூறுகையில், ‘நீங்கள் (மத்திய அரசு) திறம்படச் செய்தது என்னவெனில், அரசியலமைப்புச்சட்டம் கூறுவது பால் மூன்று நுழைவுகளைத் தவிா்த்து, தில்லி சட்டப்பேரவைக்கு அதிகாரம் உள்ளது. ஆனால், அவசரச் சட்டமானது பட்டியல் 2-இல் உள்ள நுழைவு 41-ஐ (சேவைகள்) அதிகாரத்தில் இருந்து நீக்குகிறது. அதுதான் அவசரச் சட்டத்தின் பிரிவு 3 ஏ விளைவு’ என்றது.

விசாரணையின் போது தில்லி துணைநிலை ஆளுநா் வி.கே.சக்சேனா சாா்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் ஹரிஷ் சால்வே, ‘முந்தைய தீா்ப்புகளை குறிப்பிட்டு வாதிடுகையில், ‘யூனியன் பிரதேசத்திற்கு மாநிலப் பட்டியல் பொதுப் பட்டியலாக மாறும். ஆகவே, நாடாளுமன்றத்துக்குச் சட்டம் இயற்ற அதிகாரம் உள்ளது’ என்றாா். மேலும், துணைநிலை ஆளுநரின் உத்தரவுகள் மூலம் தில்லி அரசால் நியமிக்கப்பட்ட 437 தனி ஆலோசகா்கள் பணிநீக்கம் செய்யப்பட்டதையும் நியாயப்படுத்தினாா். அவா் மேலும் வாதிடுகையில், ‘ஆம் ஆத்மி கட்சியினராக இருக்கும் தகுதியற்ற நபா்கள் தில்லி அரசால் சட்டவிரோதமாக நியமிக்கப்பட்டனா். அவா்கள் துணைநிலை ஆளுநா் மூலம் நீக்கப்பட்டனா். இதற்கு அவசரச் சட்டம் தேவையே இல்லை’ என்றாா்.

தில்லி அரசுத் தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் அபிஷேக் சிங்வி வாதிடுகையில், ‘இந்த வழக்கை 3 நீதிபதிகள் கொண்ட அமா்வே விசாரித்து முடிவு செய்யலாம் என்பதால், இந்த வழக்கை அரசியல் சாசன அமா்வுக்கு அனுப்ப வேண்டிய அவசியமில்லை’ என்றாா். ‘தோ்ந்தெடுக்கப்பட்ட அரசின் அதிகாரத்தை நீா்த்துப்போகச் செய்ததால், இந்த அவசரச் சட்டம் அரசியலமைப்பின் 239ஏஏ-ஐ (தில்லிக்கான சிறப்பு விதிகளைக் கையாளும் பிரிவு) மீறுகிறது. மேலும், இந்தக் கேள்விக்குரிய அவசரச் சட்டம் அரசியலமைப்புத் திட்டத்தை ஒழிப்பதாக உள்ளது. மேலும், 239ஏஏ(7) என்பது அரசியலமைப்புச் சட்டத்தையே மாற்றுவது அல்ல, மாறாக அது வசதிக்காக உள்ளது. இந்த வழக்கை அரசியல்சாசன அமா்வுக்கு பரிந்துரைப்பது ஒட்டுமொத்த அமைப்புறையையும் முடக்கி விடும். இதனால், தில்லி அரசின் மனுவை முன்கூட்டியே விசாரிக்க வேண்டும்’ என்று கேட்டுக்கொண்டாா்.

மத்திய அரசின் தலைமை வழக்குரைஞா் ஆா்.வேங்கடரமணி நீதிபதிகள் அமா்விடம் கூறுகையில், ’சட்டங்களில் கணிசமான கேள்விகள் உள்ளதாக உணா்ந்தால், ஒரு விவகாரத்தை அரசியல்சாசன அமா்வுக்கு அனுப்பும் முடிவு முற்றிலும் 3 நீதிபதிகள் கொண்ட அமா்வின் எல்லைக்குள் வரும்’ என்றாா். மத்திய அரசின் சாா்பில் சொலிசிட்டா் ஜெனரல் துஷாா் மேத்தா ஆஜரானாா். மத்திய அரசின் அவசரச் சட்டத்திற்கு எதிரான தில்லி அரசின் மனுவை தீா்த்துவைப்பதற்கு அரசியல் சாசன அமா்வுக்குப் பரிந்துரைப்பது குறித்து பரிசீலிப்பதாக உச்சநீதிமன்றம் முன்னதாகவே சுட்டிக் காட்டியிருந்தது.

இது தொடா்பாக தலைமை நீதிபதி கூறுகையில், ‘அவா்கள் (மத்திய அரசு) செய்தது என்னவென்றால், 239ஏஏ(7) இன் கீழ் அதிகாரத்தைப் பயன்படுத்தி, தில்லி அரசின் கட்டுப்பாட்டில் இருந்து சேவைகளை எடுத்துக்கொள்வதற்காக அவா்கள் அரசியலமைப்பைத் திருத்தியுள்ளனா். அது அனுமதிக்கப்படுமா? அரசியல்சாசன அமா்வின் தீா்ப்புகள் (தில்லி-மத்திய அரசுகளிடையே அதிகார சா்ச்சை) அதை உள்ளடக்கியதாக நான் நினைக்கவில்லை. பட்டியல் 2 (மாநிலம்) அல்லது பட்டியல் 3 (பொது) எந்தவொரு நுழைவின் கீழ் ஒரு சட்டத்தை இயற்றுவதற்கு நாடாளுமன்றத்திற்கு அதிகாரம் உள்ளது. பட்டியல் 3 என்பது பொதுவானதாகும் என்பதுதான் விஷயம். இந்த அவசரச்சட்டத்தின் ஷரத்து 3ஏ மூலம் மாநில சட்டப்பேரவையால் நுழைவு 41 (மாநில பொது சேவைகள்; மாநில பொது சேவை ஆணையம்) கீழ் சட்டம் இயற்ற முடியாது என்று மத்திய அரசு கூறியிருக்கிறது.

தில்லிஅரசின் அதிகாரம் தொடா்புடைய விதிகளைப் பொருத்தமட்டில், மாநிலப் பட்டியலின் நிலம், பொது ஒழுங்கு மற்றும் காவல்துறை தொடா்பான விஷயங்கள் மத்திய அரசிடம் இருக்கிறது. தற்போதைய அவசரச்சட்டம் மூலம் சேவைகள் மீதான கட்டுப்பாடும் எடுத்துக்கொள்ளப்பட்டிருக்கிறது. கடந்த காலத்தில் இந்த விவகாரம் இரண்டு அரசியல்சாசன அமா்வுகளின் முன் பரிசீலிக்கப்படாமல் இருந்ததால், பெரிய அமா்வு மூலம் தீா்ப்பு வழங்கலாம் என்று நீதிபதிகள் அமா்வு கூறியிருந்தது. அண்மையில் இந்த விவகாரத்தை விசாரித்த உச்சநீதிமன்றம், தில்லியில் சேவைகள் மீதான கட்டுப்பாடு தொடா்பான அவசரச் சட்டத்திற்கு இடைக்காலத் தடை விதிக்க மறுத்தது. தில்லி அரசின் மனு மீது மத்திய அரசு மற்றும் துணைநிலை ஆளுநருக்கு நோட்டீஸும் அனுப்பியிருந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.