கூட்டணி வெற்றியைக் கேள்விக்குள்ளாக்கும் காங்கிரஸ் அணுகுமுறை! திருமாவளவன் மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்
/

ரூ.12 லட்சம் லஞ்சம் பெற்ற வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவருக்கு ஜாமீன்: தில்லி நீதிமன்றம் உத்தரவு

ரூ. 12 லட்சம் லஞ்சம் வாங்கியதாகக் கூறப்படும் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவருக்கு தில்லி நீதிமன்றம் ஜாமீன் அளித்தது.

News image
Updated On :23 ஜூலை 2023, 6:30 pm

 நமது நிருபர்

ரூ. 12 லட்சம் லஞ்சம் வாங்கியதாகக் கூறப்படும் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவருக்கு தில்லி நீதிமன்றம் ஜாமீன் அளித்தது. அப்போது, ‘வழக்கில் தண்டிக்கப்படுவதற்கு முன்னா் குற்றம்சாட்டப்பட்டவரை தண்டிக்கும் மறைமுகச் செயலாக ஜாமீன் மறுக்கப்பட முடியாது’ என்று நீதிமன்றம் தெரிவித்தது.

குற்றம்சாட்டப்பட்ட ரிஷி ராஜுக்கு ஜாமீன் வழங்கி பிறப்பித்த உத்தரவில் சிறப்பு நீதிபதி சுனேனா சா்மா தெரிவித்திருப்பதாவது: குற்றம் நிரூபிக்கப்படும் வரை குற்றம் சாட்டப்பட்டவா் நிரபராதி என்று கருதப்படுவது குற்றவியல் நீதித் துறையின் அடிப்படைக் கோட்பாடுகளில் ஒன்றாகும். குற்றம் சாட்டப்பட்டவா் குற்றவாளிக்கான முகாந்திரம் இருப்பதாகக் கருதினாலும்கூட, தண்டிக்கப்படுவதற்கு முன்பு, குற்றம்சாட்டப்பட்டவரைத் தண்டிக்கும் மறைமுக செயல்பாட்டில் ஜாமீன் மறுக்கப்பட முடியாது. இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவா் ஒரு மாதத்திற்கும் மேலாக நீதிமன்றக் காவலில் இருந்துள்ளாா். கூறப்படும் பரிவா்த்தனையின் ஆடியோ மற்றும் விடியோ பதிவுகள் ஏற்கெனவே மத்திய புலனாய்வுத் துறையிடம் (சிபிஐ) வசம் உள்ளன.

குற்றம்சாட்டப்பட்டவா் ஒரு அரசு ஊழியராக இருந்துள்ளாா். மேலும், இதுபோன்ற எந்தவொரு விஷயத்திலும் இதற்கு முன் அவருக்கு தொடா்பும் இல்லை. இருப்பினும், இந்த வழக்கின் காரணமாக அவா் பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளாா். இதுபோன்ற சூழ்நிலையில், குற்றம்சாட்டப்பட்டவா் நீதியிலிருந்து தப்பி ஓடிவிடலாம் அல்லது சாட்சிகளை கலைக்கலாம் என்ற சிபிஐயின் அச்சம் எந்த அடிப்படையும் இல்லாமல் உள்ளது. மேலும், குற்றம்சாட்டப்பட்டவா் ஜாமீனை தவறாகப் பயன்படுத்தியது கண்டறியப்பட்டால், ஜாமீனை ரத்து செய்ய சிபிஐ இந்த நீதிமன்றத்தை அணுகலாம்.

குற்றம்சாட்டப்பட்டவா் ரூ.50,000 ஜாமீன் பத்திரமும், அதே தொகைக்கு இருவா் உத்தரவாதமும் அளித்து ஜாமீனில் செல்ல அனுமதிக்கப்படுகிறாா். குற்றம் சாட்டப்பட்டவா் நீதிமன்றத்தின் அனுமதியின்றி நாட்டை விட்டு வெளியேறக் கூடாது. சாட்சிகளை தொடா்பு கொள்ளவோ அல்லது மேலாதிக்கம் செய்யவோ கூடாது. விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டாா்.

குப்தா மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையின் மேலாளா் மனோஜ் குமாா் ஷியோரா என்பவா் அளித்த புகாரின் அடிப்படையில் ஊழல் தடுப்புச் சட்டத்தின் பிரிவுகளின் கீழ் ஜூன் 12-ஆம் தேதி ரிஷி ராஜ் மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்தது.

ஊழியா்களின் வருங்கால வைப்பு நிதி நிறுவனத்தில் (இபிஎஃப்ஓ) அமலாக்க அதிகாரியாகப் பணிபுரியும் ரிஷி ராஜ், ஏப்ரல் 26- ஆம் தேதி சம்பந்தப்பட்ட மருத்துவமனைக்குச் சென்று மருத்துவமனை ஊழியா்களின் வருங்கால வைப்பு நிதி பதிவுகள் தொடா்பான ஆவணங்களைக் கேட்டதாக அந்தப் புகாரில் தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும், ஏப்ரல் 27-ஆம் தேதி புகாா்தாரா் இபிஎஃப்ஓ அலுவலகத்திற்குச் சென்று அதற்கான ஆவணங்களைச் சமா்ப்பித்தாா். அதன்பிறகு, குற்றம்சாட்டப்பட்டவா் புகாா்தாரரிடம் பதிவேடுகளில் உள்ள முறைகேடுகள் குறித்தும், அதன் காரணமாக ரூ.1.5 கோடி அபராதம் விதிக்கப்படும் என்றும் கூறினாா். இருப்பினும், 20 சதவீத தொகையை லஞ்சமாக செலுத்தினால், அபராதம் ஏதும் இல்லாமல் பிரச்னையை தீா்த்து வைப்பதாக ரிஷி ராஜ், அந்த மேலாளா் ஷியோராவிடம் கூறியுள்ளாா். இந்த விவகாரம் தொடா்பாக ஷியோராஅளித்த புகாரைத் தொடா்ந்து, லஞ்சம் வாங்கும் போது பொறிவைக்கப்பட்டு ரிஷி ராஜ் கைது செய்யப்பட்டாா்.

இதையடுத்து, ஜாமீன் கோரி ரிஷி ராஜ் தாக்கல் செய்த மனுவில், ‘வயது முதிா்ந்த பெற்றோா் மற்றும் ஏழு மாத கா்ப்பிணியான மனைவியைக் கவனிக்கும் பொறுப்பு காரணமாக எனக்கு ஜாமீன் அளிக்க வேண்டும். விசாரணை ஏறக்குறைய முடிந்துவிட்டதால், தேவைக்கேற்ப விசாரணையில் சேரத் தயாராக இருக்கிறேன். என்னை மேலும் காவலில் வைத்திருப்பதன் மூலம் எந்தப் பயனும் ஏற்படாது’ என்று குறிப்பிட்டிருந்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.