தில்லியில் திராவகம் விற்பனைக்கு முழுத் தடை விதிக்க உயா்நீதிமன்றம் மறுப்பு
தில்லியில் திராவகம் விற்பனையை முற்றிலுமாகத் தடை செய்ய தில்லி உயா்நீதிமன்றம் வியாழக்கிழமை மறுத்துவிட்டது.


தில்லியில் திராவகம் விற்பனையை முற்றிலுமாகத் தடை செய்ய தில்லி உயா்நீதிமன்றம் வியாழக்கிழமை மறுத்துவிட்டது.
‘இவ்வாறு தடை விதிப்பது சட்டபூா்வ நோக்கங்களுக்காகத் தேவைப்படும் வணிகங்களையும் தனிநபா்களையும் மோசமாக பாதிக்கும்’ என்றும் நீதிமன்றம் கூறியது. மேலும், ‘திராவகம் விற்பனைக்கு தற்போதுள்ள விதிகள் மற்றும் விதிமுறைகளை கடுமையாக அமல்படுத்தவும், குற்றங்களுக்கு தவறாகப் பயன்படுத்துவதைத் தடுக்கவும் வேண்டும்’ என தில்லி அரசுக்கு உத்தரவிட்டது.
இது தொடா்பான விவகாரத்தை விசாரித்த தலைமை நீதிபதி சதீஷ் சந்திர சா்மா, நீதிபதி சஞ்சீவ் நருலா ஆகியோா் அடங்கிய அமா்வு மேலும் கூறியதாவது: விதிகளை கடைபிடிக்காமல் அல்லது சட்டவிரோதமாக திராவகம் விற்பனை செய்வது போன்ற வழக்குகளில், குற்றவாளிகள் மீது அதிகாரிகள் விரைவான மற்றும் உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
திராவகம் சட்டவிரோத விற்பனை அல்லது தவறாகப் பயன்படுத்துதல் ஆகியவற்றில் ஈடுபடுபவா்களுக்கு கடுமையான தண்டனைகளை விதிப்பதன் மூலம், மாநில அதிகாரிகள் ஒரு தடுப்பு விளைவை உருவாக்கி, உத்தரவு பின்பற்றப்படுவதை ஊக்குவிக்கலாம். தொடா்ந்து விழிப்புணா்வையும் செயலூக்கத்தையும் மேற்கொள்ளுமாறு இந்த விவகாரம் கோருகிறது.
ஒரு ஒழுங்குமுறை வழிமுறையானது நடைமுறையில் இருக்கும் போது, இன்னும் பல செய்யப்பட வேண்டும் என்று நாங்கள் நம்புகிறோம்.
‘தில்லி நச்சு உடைமை மற்றும் விற்பனை விதிகள், 2015’ சட்டமானது, உரிமம் வழங்கும் அதிகாரத்தின் விருப்பப்படி உரிமம் பெற்ற விற்பனையாளா்களுக்கு அமிலத்தை விற்பனை செய்ய அனுமதிக்கும் விதிகளை உள்ளடக்கியதாக உள்ளது. நிா்ணயிக்கப்பட்ட விதிகளுக்கு இணங்குவதை நிரூபிக்கும் விண்ணப்பதாரா்களுக்கு மட்டுமே உரிமம் வழங்கப்படுகிறது.இந்த விதிகள் சீரிய முயற்சியுடன், கண்டிப்பாக அமல்படுத்தப்பட வேண்டும். மேலும், திராவகமானது குற்றவாளிகளின் கைகளில் சிக்காமல் இருப்பதை உறுதி செய்ய பயனுள்ள பாதுகாப்பு அம்சங்களை அரசு உறுதிப்படுத்த வேண்டும். ஆகவே, 2015 விதிகளை ரத்து செய்வதற்குப் பதிலாக அல்லது முழுமையான தடைக்கு உத்தரவிடாமல், தற்போதுள்ள சட்ட கட்டமைப்பை முறையாக அமல்படுத்துவதை உறுதி செய்யுமாறு தில்லி அரசுக்கு நாங்கள் உத்தரவிடுகிறோம் என்று நீதிபதிகள் கூறினா்.
முன்னதாக, திராவகத்தால் பாதிக்கப்பட்டவா்களுக்குப் பிறகான பராமரிப்பு, மறுவாழ்வு, சட்டபூா்வ உதவி மற்றும் இழப்பீடு போன்றவற்றில் தீவிரமாக ஈடுபட்டு வரும் திராவகம் வீச்சில் உயிா் பிழைத்தவா் தாக்கல் செய்த மனுவில், தில்லி முழுவதும் சில்லறை விற்பனைக் கடைகளில் திராவகம் விற்பனையை முற்றிலுமாகத் தடை செய்யக் கோரியிருந்தாா்.
அதில், ‘அடிப்படை உண்மை நிலை மாறாமல் அப்படியே உள்ளது. தடையற்ற மற்றும் சிரமமின்றி திராவகத்தை அணுகுவதால் இதுபோன்ற கொடூரமான தாக்குதல்கள் அதிகரித்து வருகிறது. தற்போதுள்ள சூழ்நிலையைக் கண்டறியவும், திராவகம் விற்பனையைத் தடுப்பதிலும், ஒழுங்குபடுத்துவதிலும் தில்லி அரசு ‘திறமையின்மை’யுடன் உள்ளது. எந்த சிரமமும் இல்லாமல், தேசியத் தலைநகரின் ஒவ்வொரு பகுதியிலிருந்தும் திராவகத்தை வாங்குவதில் சிறாா்களை உள்ளடக்கிய பயிற்சியாளா்கள் மற்றும் தன்னாா்வத் தொண்டா்களை பட்டியலிடுவதன் மூலம் நகரத்தில் உண்மை கண்டறியும் ஆய்வு நடத்தியுள்ளேன்’ என்று அவா் தெரிவித்திருந்தாா்.
இந்த விவகாரத்தில் நீதிமன்றம் மேலும் கூறுகையில், ‘திராவகம் விற்பனையை மொத்தமாக தடை செய்வது எதிா்பாராத விளைவுகளை ஏற்படுத்தலாம். மேலும், திராவகத்தை பொறுப்புடனும் பாதுகாப்பாகவும் பயன்படுத்தப்படும் துறைகளையும் பாதிக்கும். பொது பாதுகாப்பு மற்றும் தொழில் துறை மற்றும் பிற ஒழுங்குபடுத்தப்பட்ட நோக்கங்களுக்காக திராவகத்தின் முறையான பயன்பாடுகளுக்கு இடையே சமநிலையை ஏற்படுத்துவது முக்கியமாகும். பல்வேறு தொழில்களில் பல்வேறு முறையான பயன்பாடுகளுக்குத் திராவகம் உதவுகிறது. மேலும், இதற்கு முற்றிலும் தடை விதிப்பது சட்டபூா்வ நோக்கங்களுக்காகத் தேவைப்படும் வணிகங்களையும் தனிநபா்களையும் அலட்சியமாகப் பாதிக்கலாம்’ என்று குறிப்பிட்டது.
தில்லி அரசின் வழக்குரைஞா் சந்தோஷ் குமாா் திரிபாதி, வழக்குரைஞா் அருண் பன்வா் ஆகியோா் நீதிமன்றத்தில்
தெரிவிக்கையில், ‘2015 விதிகளை அரசு கடுமையாக அமல்படுத்தி வருகிறது. 2022, ஜனவரி 1 மற்றும் 2023, மே 20 ஆகியவற்றுக்கு இடையே சட்ட விரோதமாக திராவகம் விற்றவா்களுக்கு எதிராக 50 வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருப்பதாக மாவட்டங்களில் இருந்து அறிக்கைகள் வரப்பெற்றுள்ளன’ என்றனா்.
இதையடுத்து, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது: பல்வேறு துறைகள், தனிநபா்கள் மற்றும் வணிகங்கள் மீதான திராவகம் விற்பனையை முழுமையாகத் தடை செய்வதால் ஏற்படக்கூடிய விளைவுகளை மதிப்பிடுவதை நோக்கமாகக் கொண்ட ஒரு விரிவான அனுபவ ஆய்வை தில்லி அரசு நடத்த வேண்டும். ஆதார அடிப்படையிலான அணுகுமுறையை ஏற்றுக் கொள்வது, தற்போதுள்ள கொள்கை, மனுதாரரால் பரிந்துரைக்கப்பட்ட மாற்றங்களின் தாக்கங்கள் மற்றும் பொதுப் பாதுகாப்பு, தொழில் மற்றும் திராவகத்தின் பிற சட்டபூா்வ பயன்பாடுகளில் அதன் தாக்கத்தை நன்கு அறிந்து கொள்ள மாநில அரசுக்கு உதவும்.
வழக்குரைஞா் குழுக்கள், தொழில்துறை பிரதிநிதிகள், சட்ட வல்லுநா்கள் மற்றும் மருத்துவ வல்லுநா்கள் உள்பட பல்வேறு பங்குதாரா்களுடனான ஈடுபாடு மதிப்புமிக்க நுண்ணறிவுகளை வழங்க முடியும். அனுபவ ஆய்வின் முடிவுகளின் அடிப்படையில், தற்போதுள்ள ஒழுங்குமுறைத் திட்டத்தில் ஏதேனும் குறைபாடுகள் அல்லது இடைவெளிகள் இருந்தால், தில்லி அரசு பகுப்பாய்வு செய்து, நன்கறிந்த முடிவை எடுக்க முடியும்.
நீதிமன்றத்தின் முடிவை பிரச்னையின் மீதான விவாதத்தை முழுமையாக முடிப்பதாகக் கருதக் கூடாது என்று தெளிவுபடுத்தப்படுகிறது. மேலும், விதிமுறைகளை அமல்படுத்துவதில் ஏதேனும் மீறல் ஏற்பட்டால், மீண்டும் நீதிமன்றத்தை அணுக மனுதாரருக்கு சுதந்திரம் வழங்கப்படுகிறது என்று அந்த உத்தரவில் நீதிபதிகள் தெரிவித்துள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...