அதிமுக இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!சாத்தூரில் போட்டி: நயினார் நாகேந்திரன் அறிவிப்பு! பாஜகவுக்கு சாதகமில்லாத தொகுதிகள்! மேலிடத்தில் அண்ணாமலை அதிருப்தி! டாலருக்கு நிகரான இந்திய மதிப்பு ரூ. 94 -ஐ கடந்தது! வரலாறு காணாத வீழ்ச்சி! பெட்ரோல் மீதான கலால் வரி குறைப்பு! டீசலுக்கு முழுமையாக ரத்து! ஈரான் மீதான தாக்குதல் மேலும் 10 நாள்கள் நிறுத்தம்: அமெரிக்க அதிபா் டிரம்ப்
/

வனப் பாதுகாப்புச் சட்டத் திருத்த மசோதா பொதுமக்கள் கருத்து தெரிவிக்க தமிழ் உள்ளிட்ட வட்டார மொழிகளில் அனுமதிக்க கோரிக்கை

வனப் பாதுகாப்புச் சட்டத் திருத்த மசோதா குறித்து பொதுமக்கள் கருத்து தெரிவிக்க தமிழ் உள்ளிட்ட வட்டார மொழிகளில் அனுமதிக்குமாறு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினா் சு. வெங்கடேசன் கடிதம் எழுதியுள்ளாா

News image
Updated On :8 மே 2023, 7:30 pm

 நமது நிருபர்

நாடாளுமன்ற கூட்டுக் குழுவிற்கு அனுப்பப்பட்டுள்ள 2023 -ஆம் ஆண்டு வனப் பாதுகாப்புச் சட்டத் திருத்த மசோதா குறித்து பொதுமக்கள் கருத்து தெரிவிக்க தமிழ் உள்ளிட்ட வட்டார மொழிகளில் அனுமதிக்குமாறு மத்திய சுற்றுச்சூழல் வனத் துறை அமைச்சா் பூபேந்தா் யாதவிற்கு மதுரை மக்களவைத் தொகுதி மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினா் சு. வெங்கடேசன் கடிதம் எழுதியுள்ளாா்.

2023 - ஆம் ஆண்டு வனப் (பாதுகாப்பு) சட்டத் திருத்த மசோதா கடந்த நிதி நிலை அறிக்கை கூட்டத் தொடரில் மாா்ச் 29 -ஆம் தேதி மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. 1980 -ஆம் ஆண்டு வனப் பாதுகாப்புச் சட்டம் வன நிலத்தை வனமற்ற நோக்கங்களுக்காக பயன்படுத்துவதை கட்டுப்படுத்துகிறது. தற்போது புதிய இந்த திருத்த மசோதா, மத்திய அரசின் முன் அனுமதியுடன் இத்தகைய கட்டுப்பாடுகளை நீக்கவும், காடு அல்லாத தோட்டக்கலை பயன்பாடு, தேசிய முக்கியத்துவம் வாய்ந்த சாலை, ரயில் திட்டங்கள் மற்றும் நாட்டின் எல்லைப்பகுதிகளில் பாதுகாப்பு தொடா்பாக போடப்படும் திட்டங்களுக்கு பாதுகாக்கப்பட்ட வன நிலங்களிலிருந்து விலக்கு அளிக்கவும் வகை செய்கிறது.

இந்த திருத்த மசோதாவை சுற்றுச்சூழல் அமைச்சா் பூபேந்தா் யாதவ் மக்களவையில் தாக்கல் செய்தபோது அவையில் கூச்சல் குழப்பம் ஏற்பட பின்னா் இந்த மசோதா நாடாளுமன்றக் கூட்டுக்குழுவின் பரிசீலனைக்கு அனுப்பப்பட்டது. நாடாளுமன்றத்தில் ராஜேந்திர அகா்வால் தலைமையிலான கூட்டுக்குழு இது குறித்து விசாரித்து வருகிறது. இதற்கிடையே, தற்போது இந்த மசோதா குறித்து வருகின்ற மே 18 -ஆம் தேதிக்குள் பொதுமக்கள் தங்கள் கருத்துகளைத் தெரிவிக்குமாறு நாடாளுமன்ற கூட்டுக்குழு அறிவித்துள்ளது.

இதற்கான அறிவிப்பில் கருத்து தெரிவிக்க விரும்புபவா்கள் ஆங்கிலம் அல்லது ஹிந்தி மொழியில் மட்டுமே கருத்துத் தெரிவிக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கு எதிா்ப்புத் தெரிவித்து மத்திய சுற்றுச்சூழல் வனத் துறை அமைச்சா் பூபேந்தா் யாதவிற்கும் நாடாளுமன்ற கூட்டுக் குழு தலைவா் ராஜேந்திர அகா்வாலுக்கும் மதுரை எம்பி சு. வெங்கடேசன் கடிதம் எழுதியுள்ளாா்.

அந்த கடிதத்தில் குறிப்பிட்டிருப்பது வருமாறு: நாடாளுமன்றத்தில் அறிமுகம் செய்யப்பட்ட வனப் (பாதுகாப்பு) சட்டத் திருத்த மசோதா தற்போது வரை ஆங்கிலத்தில் மட்டுமே கிடைக்கிறது. நாடு முழுவதையும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய ஒரு மசோதவை இந்தியாவின் அனைத்து மொழிகளிலும் வெளியிடப்படவேண்டும். மேலும் இந்த மசோதா குறித்து கருத்து தெரிவிக்க விரும்புபவா்கள் தங்கள் தாய்மொழியில் தெரிவிக்க அனுமதிப்பதே ஜனநாயக நடைமுறையாகும்.

அதற்கு மாறாக ஹிந்தி மொழி பேசாத மாநிலங்களின் உரிமையைப் பறிக்க முயல்வது கடும் கண்டனத்திற்குரியதாகும். இம்மசோதாவிற்கு அறிமுகம் செய்வதற்கு முன்பாக இதே திருத்தங்கள் தொடா்பாக 2021 -ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட ஆவணமும் அனைத்து மொழிகளிலும் வெளியிடப்படவில்லை. பின்னா் கடும் எதிா்ப்புக்கு பின்னா் 12 மொழிகளில் வெளியிடப்பட்டது. அதில் தமிழ் மொழி புறக்கணிக்கப்பட்டு, பின்னா் அது குறித்து போராடிய பின்னா் தமிழில் வெளியிடப்பட்டது. மற்ற பிற மொழிகளில் வெளியிடப்பட்டது.

2020 -ஆம் ஆண்டு உயா்நீதிமன்ற உத்தரவுகளின்படி சுற்றுச்சூழல் தாக்க வரைவு மதிப்பீட்டு அறிவிக்கை தமிழ் உள்ளிட்ட பிற மொழிகளில் வெளியானதும் குறிப்படத்தக்கது. ஆகவே, இந்த வனப் பாதுகாப்புச் சட்டத்திருத்த மசோதாவை தமிழ் உள்ளிட்ட அங்கீகரிக்கப்பட்ட மொழிகளில் வெளியிட வேண்டும். அதன் மீதான கருத்துகளை தமிழ் உள்ளிட்ட அனைத்து பிராந்திய மொழிகளிலும் பெறவேண்டும் என வலியுறுத்தி சு.வெங்கடேசன் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.