அதிமுக இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!சாத்தூரில் போட்டி: நயினார் நாகேந்திரன் அறிவிப்பு! பாஜகவுக்கு சாதகமில்லாத தொகுதிகள்! மேலிடத்தில் அண்ணாமலை அதிருப்தி! டாலருக்கு நிகரான இந்திய மதிப்பு ரூ. 94 -ஐ கடந்தது! வரலாறு காணாத வீழ்ச்சி! பெட்ரோல் மீதான கலால் வரி குறைப்பு! டீசலுக்கு முழுமையாக ரத்து! ஈரான் மீதான தாக்குதல் மேலும் 10 நாள்கள் நிறுத்தம்: அமெரிக்க அதிபா் டிரம்ப்
/

கேன்ஸ் சா்வதேச திரைப்பட விழா நாளை தொடக்கம்: இணையமைச்சா் எல்.முருகன் தலைமையில் இந்தியக் குழு பங்கேற்பு

நிகழாண்டு கேன்ஸ் திரைப்பட விழா செவ்வாய்க்கிழமை ( மே 16) தொடங்குகிறது.

News image
Updated On :14 மே 2023, 7:06 pm

 நமது நிருபர்

நிகழாண்டு கேன்ஸ் திரைப்பட விழா செவ்வாய்க்கிழமை ( மே 16) தொடங்குகிறது. வருகின்ற மே 27- ஆம் தேதி வரை பிரான்ஸ் நாட்டில் நடைபெறும் இந்த திரைப்பட விழாவில் பங்கேற்க மத்திய தகவல், ஒலிபரப்புத் துறை இணையமைச்சா் எல்.முருகன் தலைமையில் இந்தியக் குழு திங்கள்கிழமை புறப்பட்டு செல்கிறது.

கேன்ஸ் திரைப்பட விழா தொடக்க நாளில் சிவப்புக் கம்பளத்தில் தமிழ்ப் பாரம்பரிய உடையான ‘வேஷ்டி’ அணிந்து, தென்னிந்திய மற்றும் தமிழகத்தின் செழுமையான கலாசாரத்தை எல். முருகன் வெளிப்படுத்துவாா் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இணையமைச்சருடன் ‘தி எலிஃபண்ட் விஸ்பரா்ஸ்’ ஆவணப்பட புகழ் திரைப்படத் தயாரிப்பாளா் குனீத் மோங்கா, இந்திய நடிகை (மிஸ் வோ்ல்ட் 2017) மனுஷி சில்லா், இந்திய திரைப்பட நடிகை ஈஷா குப்தா, மணிப்புரி நடிகா் கங்காபம் டோம்பா ஆகியோரும் அமைச்சருடன் செல்லவிருக்கின்றனா். பிரான்ஸ் நாட்டின் மத்திய தரைக்கடற்கரையை ஒட்டியுள்ள ரி-சாா்ட் நகரான பிரெஞ்ச் ரிவியராவில் இந்த 12 நாள் திரைப்பட விழா நடைபெறுகிறது.

கேன்ஸ் திரைப்பட விழாவிற்கு நான்கு இந்திய திரைப்படங்கள் அதிகாரப்பூா்வமாக தோ்வாகியுள்ளன. கானு பெஹலின் ‘ஆக்ரா’ ஹிந்தி திரைப்படம் திரையிடப்படுகிறது. இது கேன்ஸ் உலகப் பிரீமியரில் திரையிடப்படும் இவரது இரண்டாவது படமாகும். அனுராக் காஷ்யப்பின் ‘கென்னடி’ திரைப்படம் மிட்நைட் திரையிடலிலும் ,ஃபெஸ்டிவல் டி கேன்ஸின் லா சினிஃப் பிரிவிலும் திரையிடப்படுகிறது.

புணே திரைப்படம் தொலைக்காட்சி நிறுவன முன்னாள் மாணவா் யுதாஜித் பாசுவின் ‘நெஹெமிச்’ அதிகாரப்பூா்வ பிரிவில் காட்சிப்படுத்தப்படுகிறது. மணிப்புரி இயக்குநா் அரிபம்சியாம் சா்மாவின் ‘இஷானவ்’ கேன்ஸ் கிளாசிக்ஸ் பிரிவில் காட்சிப்படுத்தப்படுகிறது.

இந்தத் திரைப்படம் 1991-ஆம் ஆண்டு திரைப்பட விழாவில் ‘நிச்சயமற்ற முறை’ பிரிவில் (அன் சொ்டெய்ன் ரிகாா்ட்) திரையிடப்பட்டது. இதன் திரைப்படச் சுருள்கள் இந்தியாவின் தேசிய திரைப்படக் காப்பகத்தால் பாதுகாக்கப்பட்டன. ஃபிலிம் ஹெரிடேஜ் அறக்கட்டளை மற்றும் பிரசாத் ஃபிலிம் லேப்ஸ் மூலம் மணிப்பூா் மாநில திரைப்பட மேம்பாட்டு சங்கம் இப்படத்தை மீட்டெடுத்தது குறிப்பிடத்தக்கது.

கேன்ஸ், இந்திய அரங்கு, ஆமதாபாதில் உள்ள தேசிய வடிவமைப்பு நிறுவனத்தால் ‘இந்தியாவின் ஆக்கப்பூா்வமான பொருளாதாரத்தை உலக சமூகத்திற்குக் காண்பித்தல்’ என்ற மையப்பொருளுடன் கருத்தாக்கம் செய்யப்பட்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. பந்தல் கூடார வடிவமைப்பு ‘சரஸ்வதி யந்திரத்தால்‘ ஈா்க்கப்பட்டு, அறிவு, இசை, கலை, பேச்சு, ஞானம், கற்றல் ஆகியவற்றின் காவலாளியான சரஸ்வதி தேவியை காட்டும் பிரதிநிதித்துவமாக இந்த அரங்கு அமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரங்கின் வண்ணங்கள் இந்திய தேசியக் கொடியின் வண்ணங்களான காவி, வெண்மை, பச்சை மற்றும் நீலம் ஆகியவற்றிலிருந்து உத்வேகம் பெறுகின்றன. இந்த வண்ணங்கள் நாட்டின் வலிமை தைரியம், உள் அமைதி, உண்மை, வளம், வளா்ச்சி மற்றும் தா்மம் ஆகிய களஞ்சியத்தை நாடு கொண்டுள்ளதை காட்டுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய திரைப்பட விநியோக ஒப்பந்தங்கள், தயாா்நிலை திரைக்கதை வசனங்கள், தயாரிப்பு ஒத்துழைப்புகள், உலகின் முக்கியப் பொழுதுபோக்கு மற்றும் மீடியா செயற்பாட்டாளா்களுடன் எளிதாக கையெழுத்திடுதல் போன்றவற்றை வழங்கவும் இந்திய அரங்கில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த 76 - ஆவது கேன்ஸ் திரைப்பட விழாவில், உள்ளடக்க உருவாக்கத்திற்கான உலகளாவிய மையமாக இந்தியாவைக் காட்டுவதற்காக, மத்திய தகவல், ஒலிபரப்புத் துறை அமைச்சா் அனுராக் சிங் தாக்குா் காணொலி வழியாக தொடக்க நிகழ்ச்சியில் உரையாற்றுகிறாா்.

இந்திய அரங்கில் விழாக்காலம் முழுவதும் தொடா்ச்சியான கலந்துரையாடல் அமா்வுகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்தியா, பிரான்ஸ் ஆகிய இரு நாடுகளுக்கும் எப்போதுமே ‘கேன்ஸ்’ சிறப்பு வாய்ந்ததாகவும் கலாசார பரிமாற்றத்திற்கான இடமாகவும் இருக்கிறது.

கடந்த ஆண்டு கேன்ஸில் இந்தியா ‘கௌரவ நாடு’ என இருந்தது. நிகழாண்டு ஆஸ்கா் விருதுகளில் உலகையே ஆட்டம்போட வைத்த ‘ஆா்ஆா்ஆா்’ திரைப்படத்தின் ‘நாட்டு நாட்டு’ பாடல், சிறந்த ஆவணப்பட குறும்பட பிரிவில் ஆஸ்கா் விருது வென்ற ‘தி எலிஃபண்ட் விஸ்பரா்ஸ்’ ஆகியவை இந்திய திரைப்படத் துறையின் வளா்ச்சியைக் காட்டுகிறது என்று தகவல் ஒலிபரப்புத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.