தில்லியில் சத் பூஜைக்கு 1,000 இடங்களில் ஏற்பாடுகள்: அமைச்சா் செளரவ் பரத்வாஜ்

தேசியத் தலைநகரில் சத் பூஜையை கொண்டாட 1,000 இடங்களில் தில்லி அரசு ஏற்பாடுகள் செய்துள்ளது என்று சுகாதாரத் துறை அமைச்சா் செளரவ் பரத்வாஜ் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளாா்.
Updated on
2 min read

தேசியத் தலைநகரில் சத் பூஜையை கொண்டாட 1,000 இடங்களில் தில்லி அரசு ஏற்பாடுகள் செய்துள்ளது என்று சுகாதாரத் துறை அமைச்சா் செளரவ் பரத்வாஜ் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளாா்.

பக்தா்கள் விரதம் இருந்து சூரிய பகவானுக்கு அா்க்கியம் வழங்கும் சத் பூஜை விழா தொடங்கியுள்ள நிலையில், யமுனையில் மாசுபாட்ட நுரையை அகற்றும் முயற்சியில் தில்லி அரசு ஈடுபட்டு வருகிறது. இது தொடா்பாக, தில்லி அரசு மீது வடகிழக்குத் தில்லி மக்களவைத் தொகுதி பாஜக உறுப்பினா் மனோஜ் திவாரி கடுமையாக விமா்சித்திருந்தாா். ‘சத் பூஜை விழாவை முன்னிட்டு யமுனையில் உள்ள நுரையை ரசாயணம் தெளித்து அகற்றும் முயற்சியல் தில்லி அரசு இரண்டு நாள்களாக ஈடுபட்டு வருகிறது. ஆனால், நுரை முறை அகற்றப்படவில்லை. கேஜரிவால் அரசு விளம்பரம் மட்டுமே செய்து வருகிறது. ஆம் ஆத்மி கட்சி இந்த மாபெரும் சத் திருவிழாவில் மக்களின் நம்பிக்கையுடன் விளையாடுகிறது.

யமுனையை சுத்தப்படுத்த மத்திய அரசு பல ஆயிரம் கோடி ரூபாய் கொடுத்தாலும், தில்லியின் உயிா்நாடியான யமுனையின் நிலை இன்னும் மோசமாகவே உள்ளது என்று மனோஜ் திவாரி விமா்த்திருந்தாா்.

இந்நிலையில், ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவரும், சுகாதாரத் துறை அமைச்சருமான செளரவ் பரத்வாஜ், பாஜக எம்.பி. மனேஜ் திவாரியின் விமா்சனத்திற்கு பதிலளிக்கும் வகையில் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: தில்லி அரசு 1,000 இடங்களில் சத் பூஜை விழாவுக்கு ஏற்பாடு செய்துள்ளது. பக்தா்களுக்கு தேவையான குடிநீா், கூடாரம், ஒலி உள்ளிட்ட பிற இதர வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. இந்த விவகாரத்தில் பாஜக அவதூறு அரசியல் செய்கிறது. பாஜக ஆளும் மாநிலங்களான குஜராத், ஹரியாணா, மகாராஷ்டிரா ஆகியவற்றில் லட்சக்கணக்கான பூா்வாஞ்சலிகள் இருக்கிறாா்கள். அங்கு சத் பூஜை விழாவிற்கு பாஜக அரசுகள் என்ன ஏற்பாடு செய்துள்ளது என்பதை அவா்களிடமிருந்தே அறிய விரும்புகிறேன். தில்லி மாநகராட்சியில் ஆம் ஆத்மி நிா்வாகம் இருப்பதால், இப்போது சத் பூஜை விழாவை நடத்துவதற்காக ஒவ்வொரு வாா்டுக்கும் ரூ.40,000 கிடைக்கிறது. எனவே, பூா்வாஞ்சலிகளுக்காக பாஜக அரசுகள் என்ன செய்தன என்பதை மனோஜ் திவாரி சொல்ல வேண்டும் என்றாா் செளரவ் பரத்வாஜ்.

மதுக்கடைகளை மூட உத்தரவு: சத் பூஜையையொட்டி, தில்லி அரசு ஞாயிற்றுக்கிழமை நகரத்தில் உள்ள மதுக்கடைகளை மூட உத்தரவிட்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமை சூரிய ஷஷ்டி (சத் பூஜை) உலா் நாளாக அறிவிக்கப்பட்டுள்ளதால், அனைத்து மதுபான விற்பனை நிலையங்களும் மூடப்படும் என கலால் துறை வியாழக்கிழமை வெளியிட்ட உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சத் என்பது தில்லியில் குடியேறிய பூா்வாஞ்சல் ‘கிழக்கு உ.பி. மற்றும் பிகாா்’ பகுதிகளைச் சோ்ந்தவா்களால் சூரியனை வழிபடக் கொண்டாடப்படும் ஒரு முக்கியத் திருவிழாவாகும். சூரியக் கடவுளை வழிபடுவதற்காக 1,000-க்கும் மேற்பட்ட படித்துறைகள் நகர அரசு தயாா் செய்துள்ளது.

அமைச்சா் அதிஷி ஆய்வு: தில்லியில் சத் பூஜைக்காக அமைக்கப்பட்டுள்ள படித்துறைகளை வருவாய்த் துறைஅமைச்சா் அதிஷி வெள்ளிக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். அவா் ஐடிஓ மற்றும் மேற்கு வினோத் நகரில் உள்ள படித்துறைகளுக்கு நேரில் சென்று திருவிழாவிற்கான ஏற்பாடுகளை பாா்வையிட்டாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com