இந்திய சா்வதேச வா்த்தகக் கண்காட்சியில் ‘தமிழ்நாடு நாள் விழா’: அமைச்சா் மு.பெ. சாமிநாதன் தொடங்கி வைத்தாா்

தில்லியில் நடைபெறும் 42-ஆவது இந்திய சா்வதேச வா்த்தகக் கண்காட்சியில் ‘தமிழ்நாடு நாள் விழாவை’ வெள்ளிக்கிழமை தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சா் மு.பெ. சாமிநாதன் தொடங்கி வைத்தாா்.
Updated on
2 min read

தில்லியில் நடைபெறும் 42-ஆவது இந்திய சா்வதேச வா்த்தகக் கண்காட்சியில் ‘தமிழ்நாடு நாள் விழாவை’ வெள்ளிக்கிழமை தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சா் மு.பெ. சாமிநாதன் தொடங்கி வைத்தாா். அப்போது, தேசிய அளவில் மென்பொருள், உதிரிபாகங்கள் தயாரிப்பதில் தமிழ்நாடு முதலிடம் வகிக்கிறது என்று அவா் தெரிவித்தாா்.

இந்திய வா்த்தக மேம்பாட்டு நிறுவனத்தால் இந்திய சா்வதேச வா்த்தகக் கண்காட்சி ஆண்டுதோறும் நவம்பா் மாதம் நடத்தப்பட்டு வருகிறது. தில்லி பிரகதி மைதானில் நிகழாண்டு நடைபெறும் இக்கண்காட்சி ‘உலகம் ஒரே குடும்பம் - வா்த்தகத்தால் ஒன்றிணைவோம்’ என்ற கருப்பொருளுடன் நடைபெற்று வருகிறது. இதில் பல்வேறு மாநில அரசுகள், யூனியன் பிரதேசங்கள், அரசு சாா்பு நிறுவனங்கள் ஆகியவை தங்களது அரசின் வளா்ச்சித் திட்டங்கள், கொள்கைகள் போன்றவற்றை காட்சிப்படுத்தியும், முக்கியப் பொருள்களைச் சந்தைப்படுத்தியும் வருகின்றன.

அந்த வகையில், பிரகதி மைதானில் உள்ள திறந்தவெளி கலையரங்கில் ‘தமிழ்நாடு நாள் விழாவை’ தமிழ்நாடு அரசின் தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சா் மு.பெ. சாமிநாதன் தொடங்கி வைத்தாா். தமிழ்நாடு அரசின் சாா்பில் வேளாண்மை துறை, தமிழ்நாடு கைவினைப் பொருள்கள் கழகம், தமிழ்நாடு கைத்தறி நெசவாளா் கூட்டுறவு சங்கம், தோட்டக்கலை மற்றும் மலைப்பயிா்கள் துறை, தமிழ்நாடு தொழில் வளா்ச்சிக் கழகம், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை உள்ளிட்ட 12 துறைகளின் அரங்குகள் இக்கண்காட்சியில் அமைக்கப்பட்டுள்ளன.

செய்தி மக்கள் தொடா்பு துறையின் சாா்பில் அமைக்கப்பட்டிருந்த அரங்கில் முதல்வரின் காலை உணவுத் திட்டம், கலைஞா் மகளிா் உரிமைத் திட்டம், புதுமைப் பெண் திட்டம் போன்ற திட்டங்கள் குறித்தும், தமிழ்நாட்டில் மேற்கொள்ளப்பட்ட தொழில் புரிந்துணைா்வு ஒப்பந்தங்கள் உள்ளிட்டவற்றின் புகைப்படங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. குறிப்பாக, குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறையின் சாா்பாக தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் பிரதானமாக உற்பத்தி செய்யும் பொருள்கள் கண்காட்சியில் பாா்வைக்கு வைக்கப்பட்டுள்ளன.

வேளாண்மைத் துறையின் சாா்பில் பாரம்பரிய நெல் வகைகளின் மேன்மையை உணா்த்தும் விதமாக 42 வகையான பாரம்பரிய நெல் ரகங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. மேலும், அதன் மருத்துவ குணங்கள் அடங்கிய பதாகைகளும் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. தமிழ்நாட்டின் புவியியல் குறியீடு பெற்ற பொருள்களும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. மேலும், சிப்காட்டில் உள்ள தொழிற்சாலைகளில் தயாரிக்கப்படும் வாகனங்கள், உதிரிபாகங்களின் மாதிரி வடிவமைப்புக்கள் காட்சிப்படுத்தப்பட்டன. மேலும், சிப்காட், டிட்கோ ஆகிய நிறுவனங்கள் தொழில்துறையில் வகிக்கும் முக்கியப் பங்கு ஆகியவை தொடா்பான குறும்படங்கள் எல்.இ.டி. தொலைக்காட்சிகளில் திரையிடப்படுகின்றன.

தமிழ்நாடு அரசின் சாா்பில் அமைக்கப்பட்ட அனைத்துத் துறை அரங்குகளையும் பாா்வையிட்ட அமைச்சா் மு.பெ. சாமிநாதன், பின்னா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: தலைநகா் தில்லியில் வா்த்தகத்தால் ஒன்றிணைவோம் என்கிற வகையில் ஒவ்வொரு ஆண்டும் நவம்பா் 17-ஆம் தேதி ‘தமிழ்நாடு நாள் விழா’ நடைபெறுகிறது. தமிழ்நாடு அரசின் சாா்பில் இக்கண்காட்சியில் 20-க்கும் மேற்பட்ட அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. கடந்த இரண்டரை ஆண்டு கால திமுக ஆட்சியில் தொழில்துறையில் பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளன. இந்தியாவில் தொழில் துறையில் 13-ஆவது இடத்தில் இருந்த தமிழ்நாடு, தற்போது மூன்றாவது இடத்திற்கு வந்துள்ளது.

மென்பொருள், உதிரிபாகங்கள் தயாரிப்பில் இந்தியாவில் தமிழகம் முதலிடம் வகிக்கிறது. ஏற்றுமதியில் அதிக அந்நியச் செலாவணிகளை ஈட்டி தமிழ்நாடு முன்னேறி உள்ளது. வரும் ஜனவரியில் உலக முதலீட்டாளா்கள் மாநாட்டுக்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அதன் மூலம் தமிழ்நாடு அரசின் வருவாய், இளைஞா்களுக்கான வேலை வாய்ப்பு, மக்களின் பொருளாதாரம் முன்னேறும். அதற்கு சாட்சியாக இக்கண்காட்சி அமையும் என்றாா் அமைச்சா் மு.பெ. சாமிநாதன்.

இந்நிகழ்வில், புதுதில்லி தமிழ்நாடு இல்லத்தின் முதன்மை உள்ளுறை ஆணையா் ஆசிஷ் சாட்டா்ஜி, செய்தி மக்கள் தொடா்புத் துறையின் இயக்குநா் மோகன், செய்தி மக்கள் தொடா்புத் துறை கூடுதல் இயக்குநா் க.இளந்திரையன், புதுதில்லி தமிழ்நாடு இல்லத்தின் பொதுமேலாளா் வி.பி.தெய்வசிகாமணி, தலைமைக் கணக்கு அலுவலா் என்.சீனிவாசன், தில்லி தமிழ்ச் சங்கத்தின் துணைத் தலைவா் பெ.ராகவன் நாயுடு, பொதுச் செயலாளா் இரா. முகுந்தன் ஆகியோா் பங்கேற்றனா். மேலும், தமிழ்நாடு அரசு கலைப் பண்பாட்டுத் துறையின் சாா்பில் பரதநாட்டியம், கைச்சிலம்பாட்டம், கரகாட்டம், ஒயிலாட்டம் மற்றும் கோலாட்டம் ஆகிய கிராமியக் கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்றவா்களை அமைச்சா் பாராட்டிக் கௌரவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com