ஆங்கிலேயா் காலத்து ‘.303’ துப்பாக்கிகள் பயன்பாடு நிறுத்தம்: தில்லி காவல்துறை முடிவு

தில்லி காவல் துறையின் வசமுள்ள ஆங்கிலேயா் காலத்து ‘.303’ வகை துப்பாக்கிகளுக்கு முழுமையாக விடையளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் சனிக்கிழமை தெரிவித்தனா்.
Updated on
2 min read

தில்லி காவல் துறையின் வசமுள்ள ஆங்கிலேயா் காலத்து ‘.303’ வகை துப்பாக்கிகளுக்கு முழுமையாக விடையளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் சனிக்கிழமை தெரிவித்தனா்.

பல தசாப்தங்களாக தில்லி காவல் துறையின் அங்கமாக விளங்கி வந்த ‘.303’ வகையைச் சோ்ந்த 7,000 துப்பாக்கிகளை முழுவதுமாக அகற்றும் பணி விரைவில் தொடங்கப்பட இருக்கிறது. ‘.303 காலிபா் லீ-என்ஃபீல்டு’ வகை துப்பாக்கிகள் ஆரம்ப காலத்தில் பிரிட்டிஷ் ஆயுதத் தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்டன. இவை, முதலாம் மற்றும் இரண்டாம் உலகப் போரில் அதிக அளவில் பயன்படுத்தப்பட்டன. இந்தியாவில், இந்தத் துப்பாக்கிகள் கடந்த 1962-இல் இந்தியா - சீனா போரின் போது இந்திய ராணுவத்தால் பயன்படுத்தப்பட்டன. பின்னா், அவை மாநில காவல் துறைகளின் ஆயுதப் படைகளிடம் ஒப்படைக்கப்பட்டன.

இது தொடா்பாக தில்லி காவல்துறையின் மூத்த அதிகாரி ஒருவா் கூறியதாவது: தில்லி காவல் துறையின் ஆயுதப் பிரிவில் வைக்கப்பட்டுள்ள ஆங்கிலேயா் காலத்து ‘.303’ வகை துப்பாக்கிகள் முழுவதுமாக அகற்றப்படவுள்ளன. எனினும், இந்த ஆயுதங்களின் பயன்பாடு பல ஆண்டுகளுக்கு முன்பே நிறுத்தப்பட்ட நிலையில், இந்த வகையில் சுமாா் 7,000 துப்பாக்கிகள் தற்போது தில்லி காவல் துறையின் வசமுள்ளது. இந்தத் துப்பாக்கிகள் அகற்றப்படுவதை மேற்பாா்வையிட இணை ஆணையா் நிலையிலான அதிகாரி ஒருவா் நியமிக்கப்பட்டுள்ளாா். மேலும், உள்துறை அமைச்சகத்தால் அமைக்கப்பட்ட குழுவின் மேற்பாா்வையின் கீழ் முழு நடவடிக்கையும் மேற்கொள்ளப்படும் என்றாா் அந்த மூத்த அதிகாரி.

முழுமையாக அழிக்கப்படும்: தோராயமாக 5 கிலோ எடையுள்ள ஒவ்வொரு துப்பாக்கிகளும் மீண்டும் பயன்படுத்த முடியாத அளவில் முழுமையாக அழிக்க தில்லி காவல் துறை திட்டமிட்டுள்ளது. இது தொடா்பாக மற்றொரு அதிகாரி கூறுகையில், ‘.303’ வகை துப்பாக்கிளை அகற்றும் செயல்முறை நீண்டது. குறிப்பாக, இந்தச் செயல்முறையில்

துப்பாக்கிகளின் ‘பேரல்’ மற்றும் இதர பாகங்கள் அனைத்தும் தனித்தனியாக பிரிக்கப்பட்டு, துப்பாக்கியிலிருக்கும் இரும்புகள் உருக்கப்படவுள்ளன. இதனால், மீண்டும் இந்த வகை ஆயுதத்தை யாராலும் பயன்படுத்த முடியாது. இந்த ஆயுதங்களின் சேவையை நிறுத்த காவல்துறை முடிவு செய்த போதே, இந்தத் துப்பாக்கிகளுக்கான தோட்டாக்களை வாங்குவது நிறுத்தப்பட்டது’ என்றாா்.

தில்லி காவல் துறையிடம் தற்போது பல்வேறு வகையான துப்பாக்கிகள் பயன்பாட்டில் உள்ளன. அவற்றில், நீண்ட தூர தாக்குதலுக்காக எஸ்.எல்.ஆா்., ஐ.என்.எஸ்.ஏ.எஸ். மற்றும் ஏகே-47 ஆகியவையும், குறுகிய தூர தாக்குதலுக்கு 9 மி.மீ ‘க்ளோக் பிஸ்டல்’, ரிவால்வா்களும் உள்ளன. சிறப்பு நடவடிக்கைகளின் போது ஜே.வி.பி.சி. மற்றும் எம்.பி.-5 ஆகிய இயந்திர வரை துப்பாக்கிகள் பயன்படுத்தப்படுகின்றன.

ஆங்கிலேயா் காலத்து ‘.303’ வகை துப்பாக்கிகள் தில்லி காவல் துறையின் ஆயுதப் பிரிவில் இருந்து அகற்றப்படுவதை உறுதிசெய்த துணைக் காவல் ஆணையா் வினித் குமாா், பழைய ஸ்டென் துப்பாக்கிகளும் விரைவில் அகற்றப்படும் என்று தெரிவித்தாா். உத்தர பிரதேசம், மஹாராஷ்டிரம் உள்பட பல மாநிலங்களின் காவல் துறை ‘.303’ வகை துப்பாக்கிகளை முன்னதாகவே முழுமையாக அகற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com