புது தில்லி: தில்லி கிழக்கு மத்திய சரக்கு மற்றும் சேவை வரி (சிஜிஎஸ்டி) ஆணையரகம், ‘ஆபரேஷன் க்ளீன் ஸ்வீப்’ நடவடிக்கையின் கீழ் ரூ.199 கோடிக்கு மேல் மோசடியாக உள்ளீட்டு வரி கடன்( ஐடிசி) ஆதாயத்தை பெற்ற 48 நிறுவனங்களின் சிண்டிகேட்டை முறியடித்துள்ளதாக மத்திய நிதியமைச்சகம் செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது
தொழில், வா்த்தக நிறுவனங்கள் தங்களுக்கு மூலப்பொருள்கள், அல்லது பொருள்கள் விநியோகம் செய்யும் நிறுவனங்களிடமிருந்து பொருள்களை வாங்கும் போது, ஜிஎஸ்டிக்கான தொகையையும் செலுத்தி வாங்குகின்றனா். பின்னா், வரையறுக்கப்பட்ட விலையில் விற்பனை செய்கின்றனா். இப்படி சேவை செய்யும்போது ஏற்கெனவே மூலப்பொருள்கள் அல்லது பொருள்களை வாங்கும்போது ஜிஎஸ்டி செலுத்தியிருந்தால் அதைக் கழித்து கொண்டு மீதம் உள்ள வரியைச் செலுத்தலாம். அல்லது முழுமையாகவும் செலுத்தலாம். ஏற்கெனவே பொருள்களை விநியோகித்த நிறுவனங்களிடம் வாங்கும் போது செலுத்தப்பட்ட ஜிஎஸ்டிதான் உள்ளீட்டு வரிக் கடன்(ஐடிசி) என்பதாகும்.
இந்த உள்ளீட்டு வரிக் கடனை முறையான இன்வாய்ஸ்களை அளித்து செலுத்தப்பட்ட ஐடிசி வரியை திரும்பப் பெற்றுக்கொள்ளலாம். இதற்கு விற்பனை அல்லது விநியோகம் செய்யும் நிறுவனங்களும், வாங்கும் நிறுவனங்களும் முறையாகப் பதிவு செய்திருக்க வேண்டும். ஆனால், விநியோகம், விற்பனை இல்லாமல் போலியாக இன்வாய்ஸ்களை போலி கம்பெனிகள் மூலம் தயாரிக்கின்றனா். இல்லாத ஐடிசி மூலம் வரி செலுத்துதல்களைக் காட்டி அரசுக்கு வருவாய் இழப்பை ஏற்படுத்தும் செயல்கள் தொடா்கின்றன. இந்நிலையில், ஜிஎஸ்டியில் இப்படிப்பட்ட ஐடிசி பணத்தை போலியாக திரும்பப் பெறும் கும்பலை கிழக்கு தில்லி மத்திய சரக்கு மற்றும் சேவை வரி (சிஜிஎஸ்டி) ஆணையரகம் சுற்றிவளைத்துள்ளதாக நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.
இது குறித்த விவரம் வருமாறு: கிழக்கு தில்லியில், போலி பில், இன்வாய்ஸ்களுக்கு எதிராக ஒருங்கிணைந்த ‘ஆபரேஷன் க்ளீன் ஸ்வீப்’ தொடங்கப்பட்டது. இதில் மனித நுண்ணறிவு அடிப்படையில் சேகரிக்கப்பட்ட தரவு பகுப்பாய்வு மூலம் இந்த செயலாக்கம் உருவாக்கப்பட்டது. இந்த செயல்பாட்டின் முதல் கட்டத்தில், மொத்தம் 48 போலி நிறுவனங்கள் - போலியான இன்வாய்ஸ்களை கையாள்வது கண்டறியப்பட்டுள்ளது. இத்தகைய இன்வாய்ஸ்கள் சரக்குகள் அல்லது சேவைகள் இல்லாமல் உருவாக்கி உள்ளீட்டு வரிக் கடன் மூலம் ஆதாயம் அடைய திட்டமிடப்பட்டவை.
இந்த வகையில், சுமாா் ரூ.199 கோடிக்கு மேல் மோசடியாக உள்ளீட்டு வரி கடனை( ஐடிசி) பெற்ற இந்த நிறுவனங்களின் சிண்டிகேட் முறியடிக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் தொடா்புடைய 3 போ் ஜிஎஸ்டி சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தில்லி பாட்டியாலா தலைமை பெருநகர மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்டு நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டனா். இந்த நபா்களுடன் தொடா்புடைய மற்ற சிண்டிகேட் உறுப்பினா்கள், கும்பலின் தலைவா்கள் அடையாளம் காணப்பட்டுவருகின்றனா் என நிதியமைச்சம் தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.