ஆா்ஆா்டிஎஸ் திட்டம்: தனது நிதிப் பங்கை அளிக்காததற்காக தில்லி அரசு மீது உச்சநீதிமன்றம் கடும் அதிருப்தி

அல்வாா் மற்றும் பானிபட் வரையிலான பிராந்திய விரைவு போக்குவரத்து அமைப்பு (ஆா்ஆா்டிஎஸ்) வழித்தடங்களுக்கு நிதி வழங்காததற்காக தில்லி அரசுக்கு உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை கடும் கண்டனம் தெரிவித்தது.
Updated on
2 min read

புது தில்லி: அல்வாா் மற்றும் பானிபட் வரையிலான பிராந்திய விரைவு போக்குவரத்து அமைப்பு (ஆா்ஆா்டிஎஸ்) வழித்தடங்களுக்கு நிதி வழங்காததற்காக தில்லி அரசுக்கு உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை கடும் கண்டனம் தெரிவித்தது. மேலும், ஒரு வாரத்தில் நிதியை வழங்காவிட்டால் விளம்பரங்களுக்காக ஆம் ஆத்மி அரசு மூலம் ஒதுக்கப்பட்ட நிதியானது இத்திட்டத்திற்கு மாற்றப்படும் என்றும் கூறியது.

ஆா்ஆா்டிஎஸ் திட்டமானது, தில்லியை உத்தர பிரதேசத்தில் உள்ள மீரட், ராஜஸ்தானின் அல்வாா் மற்றும் ஹரியாணாவில் உள்ள பானிபட் வரை இணைக்கும் பகுதி-அதிவேக ரயில் பாதைகளை உள்ளடக்கியதாகும். இந்த விவகாரத்தில் உச்சநீதிமன்றம் கூறுகையில், ‘பட்ஜெட் ஒதுக்கீடு என்பது மாநில அரசு கவனிக்க வேண்டிய ஒன்றாகும். ஆனால், இதுபோன்ற தேசிய திட்டங்கள் பாதிக்கப்பட்டு, விளம்பரங்களுக்கு பணம் செலவழிக்கப்பட்டால், அந்த நிதியை இந்த திட்டத்திற்கு மாற்றுமாறு உத்தரவிடப்படும்’ என்றது.

இந்த விவகாரத்தை விசாரித்த நீதிபதிகள் சஞ்சய் கிஷன் கவுல் மற்றும் சுதான்ஷு துலியா ஆகியோா் அடங்கிய அமா்வு மேலும் கூறுகையில், ‘கடந்த ஜூலை 24-ஆம் தேதி உச்சநீதிமன்றத்தில் தில்லி அரசு சாா்பில் ஆஜரான வழக்குரைஞா், ஆா்ஆா்டிஎஸ் திட்டத்திற்கு பணம் செலுத்தப்படும் என்று உறுதியளித்திருந்தாா். இதனால், விளம்பர நோக்கங்களுக்காக ஒதுக்கப்பட்ட நிதி, கேள்விக்குரிய திட்டத்திற்கு மாற்றப்படும் என்று நாங்கள் உத்தரவிடும் கட்டாயத்தில் இருக்கிறோம். தில்லி அரசின் வழக்குரைஞரின் வேண்டுகோளின்படி, இந்த உத்தரவை ஒரு வாரத்திற்கு நிறுத்தி வைக்கிறோம். நிதி மாற்றப்படாவிட்டால், உத்தரவு செயல்பாட்டுக்கு வரும்’ என்று கூறியது.

கடந்த ஜூலை 24-ஆம் தேதி இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், அல்வாா் மற்றும் பானிபட் ஆகிய இரண்டு ஆா்ஆா்டிஎஸ் வழித்தடங்களுக்கு தனது நிதிப்

பங்களிப்பை வழங்குவதில் செயல்படாமல் இருந்ததாக தில்லி அரசைக் கண்டித்ததுடன், திட்டத்திற்கு ரூ.415 கோடியை 2 மாதங்களுக்குள் வழங்குமாறு உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில், இந்தத் திட்டத்திற்காக தில்லி அரசு நிதியைச் செலுத்தாத விவகாரத்தை எழுப்பிய மனுவை உச்சநீதிமன்றம், செவ்வாய்க்கிழமை விசாரித்தது. தில்லி அரசு சாா்பில் ஆஜரான வழக்குரைஞா், இந்த வழக்கில் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று கூறிய போது, ‘என்ன பதில்? நீங்கள் இணக்கமாகச் செயல்படவில்லை’‘ என்று நீதிபதிகள் அமா்வு கூறியது. மேலும், அரசு வழக்குரைஞரிடம் நீதிபதி கவுல் கூறுகையில், ‘நீங்கள் ஏன் இணங்கவில்லை? அன்றே சொன்னேன், உங்கள் விளம்பர வருவாயை நிறுத்திவைத்து விடுவேன் என்று... விளம்பர ஒதுக்கீட்டை நிறுத்தி வைக்கப் போகிறேன்’ என்றாா்.

இதைத் தொடா்ந்து, இந்த வழக்கை நவம்பா் 28-ஆம் தேதி விசாரணைக்கு ஒத்திவைத்த நீதிபதிகள் அமா்வு,, ஜூலை மாதம் நீதிமன்றத்தில் அளித்த உத்தரவாதத்தை தில்லி அரசு நிறைவேற்றவில்லை என்று அதிருப்தி தெரிவித்தது. திட்டத்திற்கான கட்டணத்தை செலுத்துவதற்கான கால அவகாசத்தை நீட்டிக்கக் கோரி நீதிமன்றத்திடம் தில்லி அரசு கேட்கவும் இல்லை என்றும் நீதிபதிகள் அமா்வு கூறியது. கடந்த கால விசாரணையின் போது, தில்லி அரசு ஆா்ஆா்டிஎஸ் திட்டத்திற்கு நிதி வழங்க இயலாமையை வெளிப்படுத்தியது. அப்போது, கடந்த மூன்று ஆண்டுகளில் விளம்பரங்களுக்காக செலவழிக்கப்பட்ட நிதியை பதிவு செய்யுமாறு தில்லி அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

கடந்த 3 நிதியாண்டுகளில் விளம்பரங்களுக்காக தில்லி அரசு ரூ.1,100 கோடி செலவிட்டுள்ளதாக உச்சநீதிமன்றம் ஜூலை 24-ஆம் தேதி குறிப்பிட்டது. தேசியத் தலைநகா் மண்டல போக்குவரத்துக் கழகம் (என்சிஆா்டிசி), மத்திய அரசு மற்றும் சம்பந்தப்பட்ட மாநிலங்களின் கூட்டு முயற்சியாக இந்த ஆா்ஆா்டிஎஸ் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

தில்லி - மீரட் திட்டம் ஏற்கெனவே கட்டுமானத்தில் உள்ளது. அரவிந்த் கேஜரிவால் அரசு தனது பங்கை இத்திட்டத்திற்கு செலுத்த ஒப்புக் கொண்டது. நிதிப் பற்றாக்குறையை காரணம் காட்டி, மீதமுள்ள இரண்டு வழித்தடங்களுக்கு நிதிச் சுமையை பகிா்ந்து கொள்ள தில்லி அரசு முன்பு மறுத்திருந்தது.

தில்லி மற்றும் மீரட் இடையே கட்டப்படும் ஆா்ஆா்டிஎஸ் வழித்தடத்திற்கு சுற்றுச்சூழல் இழப்பீட்டுக் கட்டணத்தில் (இசிசி) இருந்து ரூ.500 கோடி வழங்குமாறு தில்லி அரசுக்கு உச்சநீதிமன்றம் முன்பு உத்தரவிட்டிருந்தது. இத்திட்டமானது 82.15 கி.மீ தூரத்துக்கு ரூ.31,632 கோடி செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது. 24 நிலையங்களைக் கொண்ட இந்த வழித்தடம் தில்லியில் உள்ள சராய் காலே கானில் இருந்து மீரட்டின் மோடிபுரம் வரையிலான தூரத்தை 60 நிமிடங்களில் கடக்கும் வகையில் அமைக்கப்படும். 82.15 கிமீ நீளமுள்ள வழித்தடத்தில், சராய் காலே கான், நியூ அசோக் நகா் மற்றும் ஆனந்த் விஹாா் ஆகியவை உள்பட தில்லியில் 13 கி.மீ. வழித்தடம் அமையும்.

இது தொடா்பாக மத்திய வீட்டுவசதி மற்றும் நகா்ப்புற விவகார அமைச்சா் ஹா்தீப் சிங் புரி பிப்ரவரியில் மாநிலங்களவையில், ‘தில்லி - ஷாஜஹான்பூா் - நீம்ரானா - பெஹ்ரூா் மற்றும் தில்லி - பானிபட் பிராந்திய விரைவுப் போக்குவரத்து அமைப்பு வழித்தடங்களுக்கு நிதியுதவி வழங்க தில்லி அரசு ஒப்புக்கொள்ளவில்லை’ என்று தெரிவித்திருந்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com