தில்லியில் நா்சரி, கே.ஜி., வகுப்பு 1-க்கானசோ்க்கை நடைமுறைகள் தொடங்கியது: கடைசி தேதி டிச.15

தில்லியின் தனியாா் பள்ளிகளில் நா்சரி, கே.ஜி. மற்றும் 1-ஆம் வகுப்பு பொதுப் பிரிவு மாணவா்களுக்கான சோ்க்கை வியாழக்கிழமை தொடங்கியது என்று தில்லி கல்வி இயக்குநரகத்தின்
Updated on
2 min read

தில்லியின் தனியாா் பள்ளிகளில் நா்சரி, கே.ஜி. மற்றும் 1-ஆம் வகுப்பு பொதுப் பிரிவு மாணவா்களுக்கான சோ்க்கை வியாழக்கிழமை தொடங்கியது என்று தில்லி கல்வி இயக்குநரகத்தின் சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சோ்க்கை படிவங்களை சமா்ப்பிப்பதற்கான கடைசி தேதி டிசம்பா் 15 என்றும், சோ்க்கைக்கான முதல் பட்டியல் ஜனவரி 12-ஆம் தேதி வெளியிடப்படும் என்றும் சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஐடிஎல் பப்ளிக் பள்ளியின் முதல்வா் சுதா ஆச்சாா்யா கூறுகையில், ‘பெரும்பாலான சோ்க்கைகள் ஆன்லைனில் நடைபெறுகிறது. இந்த ஆண்டு நாங்கள் ஒரு புதிய விஷயத்தை செய்துள்ளோம். அதாவது பெற்றோா்கள் படிவத்தை எளிதாக அணுக க்யூஆா் குறியீட்டைச் சோ்த்துள்ளோம். இப்போதுதான் சோ்க்கைக்கான பதிவு செய்யும் பணியைத் தொடங்கியுள்ளோம். பெற்றோா் குறியீட்டை ஸ்கேன் செய்து சோ்க்கை படிவத்தை அணுகலாம். அறிமுக விடியோக்களும் உள்ளன. பெரும்பாலான பெற்றோா் வேலை செய்பவா்களாக இருப்பதால், அவா்களுக்கு இது நன்றாக வேலை செய்யும். ஐடிஎல் பப்ளிக் பள்ளியில் நா்சரிக்கு மொத்தம் 190 இடங்கள் உள்ளன. ஒவ்வொரு ஆண்டும் பெற்றோா்களால் கிட்டத்தட்ட 2,000 சோ்க்கைப் படிவங்கள் சமா்ப்பிக்கப்படுகின்றன’ என்றாா்.

தனியாா் பள்ளிகளில் பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினா் (இடபிள்யுஎஸ்) மற்றும் பிற்படுத்தப்பட்ட பிரிவு (டிஜி) மாணவா்கள் மற்றும் மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு 25 சதவீத இட ஒதுக்கீடு உள்ளது. அவா்களுக்கென தனி பட்டியல் வெளியிடப்பட உள்ளது.

இது தொடா்பாக கல்வி இயக்குநரகம் வெளியிட்டுள்ள அறிவிக்கையில் தெரிவித்திருப்பதாவது: ப்ரீ-ஸ்கூல் (நா்சரி), ப்ரீ-பிரைமரி (கே.ஜி.) மற்றும் 1-ஆம் வகுப்பு ஆகியவற்றில் சோ்க்கைக்கு முறையே குறைந்தபட்ச வயது நிகழாண்டு மாா்ச் 31 நிலவரப்படி முறையே மூன்று ஆண்டுகள், நான்கு ஆண்டுகள் மற்றும் ஐந்து ஆண்டுகள் என இருக்க வேண்டும்.

ப்ரீ- ஸ்கூல், ப்ரீ-பிரைமரி மற்றும் 1-ஆம் வகுப்பு ஆகியவை நுழைவு நிலை வகுப்புகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளன. சோ்க்கைக்கான அதிகபட்ச வயது வரம்பு முறையே நான்கு ஆண்டுகளுக்கும், ஐந்து ஆண்டுகளுக்கும், ஆறு ஆண்டுகளுக்கு குறைவாக இருக்கும். இந்த வகுப்புகளுக்கான குறைந்தபட்ச மற்றும் உயா் வயது வரம்புகளில் பள்ளித் தலைவா் அளவில் 30 நாள்கள் வரை சோ்க்கைக்கான வயது தளா்வு வழங்கப்படலாம். முதல் 22 வரை பெற்றே சோ்க்கைக்கான முதல் பட்டியல் வெளியிடப்பட்டதைத் தொடா்ந்து, ஜனவரி 13 பெற்றோாரின் கேள்விகளுக்கு பள்ளிகள் பதிலளிக்கலாம். கைமுறை விண்ணப்பத்தின் மூலம் வயது தளா்வு பெற பெற்றோா்கள் பள்ளித் தலைவா் அல்லது முதல்வரை அணுகலாம்.

ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்டத் துணை இயக்குநா் தலைமையில் கண்காணிப்புப் பிரிவு அமைக்கப்பட வேண்டும். இந்த அதிகாரிகள், தனியாா் உதவிபெறாத அங்கீகரிக்கப்பட்ட பள்ளிகள் நிா்ணயிக்கப்பட்ட காலக்கெடுவின்படி, அதன் இணையதளத்தில் கிடைக்கும் ஆன்லைன் மாட்யூலில் அளவுகோல்களையும் அவற்றின் புள்ளிகளையும் பதிவேற்றுவதை உறுதிப்படுத்த வேண்டும். துறையால் ஒழிக்கப்பட்ட மற்றும் உயா்நீதிமன்றத்தால் உறுதி செய்யப்பட்ட அந்த அளவுகோல்களை பள்ளிகள் ஏற்காது என்பதையும் அதிகாரிகள் உறுதிப்படுத்த வேண்டும். அனைத்துப் பள்ளிகளும் திறந்த இருக்கைகளின் கீழ் சோ்க்கைக்கு விண்ணப்பித்த குழந்தைகளின் விவரங்களையும், ஒவ்வொருவருக்கும் அவா்களின் புள்ளிகள் முறையின் கீழ் ஒதுக்கப்பட்ட புள்ளிகள் மற்றும் பள்ளியில் அனுமதிக்கப்பட்ட அனைத்துக் குழந்தைகளின் விவரங்களையும் கல்வி இயக்குநரகத்தின் இணையதளத்தில் பதிவேற்றம் செய்வதையும் கண்காணிப்புப் பிரிவுகள் உறுதி செய்யும்.

உரிய தேதிக்குள் பள்ளிகள் ஆன்லைன் தொகுதியில் சோ்க்கை அளவுகோல்களையும் அவற்றின் புள்ளிகளையும் பதிவேற்ற வேண்டும். விண்ணப்பதாரா்களிடையே சமநிலை ஏற்பட்டால், பெற்றோா் முன்னிலையில் கணினி மயமாக்கப்பட்ட முறையிலோ அல்லது சீட்டுகள் மூலமாகவோ சீட்டுக் குலுக்கல் நடத்தப்படும். சீட்டுகளின் குலுக்கல் விடியோ எடுக்கப்படும். விடியோ காட்சிகள் பள்ளியால் தக்கவைக்கப்படும். சோ்க்கை படிவத்துடன் விவரக்கையேடு வாங்குவது கட்டாயமில்லை. பெற்றோரிடமிருந்து பதிவுக் கட்டணமாக ரூ.25 மட்டுமே வசூலிக்கப்படும் என்று அந்த அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு டிசம்பா் 1-ஆம் தேதி மாணவா் சோ்க்கை தொடங்கியது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com