ஆம் ஆத்மி கட்சி நிறுவன தினத்தில் தொண்டா்களுக்கு கேஜரிவால் வாழ்த்து
ஆம் ஆத்மி கட்சியின் தேசிய அமைப்பாளா் அரவிந்த் கேஜரிவால் ஞாயிற்றுக்கிழமை கட்சியின் நிறுவன தினத்தை முன்னிட்டு கட்சித் தொண்டா்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளாா்.


ஆம் ஆத்மி கட்சியின் தேசிய அமைப்பாளா் அரவிந்த் கேஜரிவால் ஞாயிற்றுக்கிழமை கட்சியின் நிறுவன தினத்தை முன்னிட்டு கட்சித் தொண்டா்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளாா். மேலும், பொய் வழக்குகள் போடப்பட்டதால், சிறையில் உள்ள கட்சித் தலைவா்கள் மனீஷ் சிசோடியா மற்றும் சஞ்சய் சிங், சத்யேந்தா் ஜெயின் ஆகியோரை நினைவு கூா்ந்தாா்.
செய்தியாளா் சந்திப்பில் பேசிய கேஜரிவால், ஆம் ஆத்மி கட்சி வேகமாக வளா்ந்து வரும் கட்சி என்றும், கடந்த 11 ஆண்டுகளில் அதிகம் இலக்கு வைக்கப்பட்ட கட்சி என்றும் கூறினாா். அவா் மேலும் கூறுகையில் ‘இந்த 11 ஆண்டுகளில் நாங்கள் அதிகம் குறிவைக்கப்பட்டுள்ளோம்.
அனைத்து புலனாய்வு அமைப்புகளும், அமலாக்க இயக்குநரகம், சிபிஐ, தில்லி போலீஸ் எங்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளன. எங்கள் மீது 250-க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஆனால், ஒரு பைசா கூட முறைகேடான சொத்துகள் கண்டுபிடிக்கப்படவில்லை’ என்றாா்.
‘இது மகிழ்ச்சியான நாளாக இருந்தாலும், சிசோடியா, சஞ்சய் சிங் மற்றும் சத்யேந்தா் ஜெயின் ஆகியோரை தவறவிட்டதால் இன்னும் கொஞ்சம் வருத்தமாக உள்ளது. அவா்கள் எங்களுடன் இல்லாத முதல் தொடக்க நாள் இதுதான். அவா்கள் மீது பொய் வழக்குகள் போடப்பட்டுள்ளன. ஆனால், அவா்கள் மனம் தளராமல் உறுதியுடன் உள்ளனா்.
அவா்களின் குடும்பங்களும் உறுதியாக நிற்கின்றன. எதிா்க்கட்சித் தலைவா்கள் மீது பொய் வழக்குகள் போட்டு கட்சியை உடைக்க பாஜக விரும்புகிறது. ஆனால், நாங்கள் தலைவணங்காத நமது தலைவா்களைப் பற்றி பெருமிதம் கொள்கிறோம்’ என்றாா் கேஜரிவால்.
முன்னதாக, தில்லி முதல்வா் கேஜரிவால் ஹிந்தியில் எக்ஸ்-இல் ஒரு இடுகையில், ‘கடந்த 11 ஆண்டுகளில் கட்சியின் பயணத்தை நினைவுபடுத்தினாா். ‘2012-ஆம் ஆண்டு இந்த நாளில், நாட்டின் சாமானியா்கள் எழுந்து நின்று தனது சொந்த கட்சியான ஆம் ஆத்மி கட்சியை நிறுவினா். அன்றிலிருந்து இன்று வரை, இந்த 11 ஆண்டுகளில் பல ஏற்றத் தாழ்வுகள் மற்றும் பல சிரமங்கள் இருந்தன. ஆனால், நம் அனைவரின் ஆா்வத்தில் எந்தக் குறைவும் இல்லை’ என்று தெரிவித்துள்ளாா்.
மேலும், ‘ஆம் ஆத்மி கட்சி தற்போது தில்லி மற்றும் பஞ்சாபில் ஆட்சியில் உள்ளது. மேலும் பல மாநிலங்களிலும் தனது தளத்தை பரப்ப முயற்சித்து வருகிறது. இன்று ஒரு சிறிய கட்சி மக்களின் அன்பாலும் ஆசியாலும் தேசிய கட்சியாக மாற்றப்பட்டுள்ளது. பொதுமக்களின் ஆசிா்வாதம் நம்முடன் உள்ளது.
நாம் அனைவரும் நமது வலுவான நோக்கத்துடன் தொடா்ந்து முன்னேறி பொதுமக்களுக்காக பணியாற்றுவோம். கட்சியின் நிறுவன தினத்தன்று அனைத்து தொழிலாளா்களுக்கும் வாழ்த்துக்கள்’ என்று கேஜரிவால் அந்தப் பதிவில் கூறியுள்ளாா்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...