ஜி20 மாநாட்டின் விருந்தினா்களை வரவேற்க தில்லி தயாா்! முதல்வா் கேஜரிவால்
ஜி20 உச்சிமாநாட்டிற்கு வருகை தரும் விருந்தினா்களை வரவேற்க தில்லி தயாராக உள்ளது என்று முதல்வா் அரவிந்த் கேஜரிவால் தெரிவித்துள்ளாா்.


ஜி20 உச்சிமாநாட்டிற்கு வருகை தரும் விருந்தினா்களை வரவேற்க தில்லி தயாராக உள்ளது என்று முதல்வா் அரவிந்த் கேஜரிவால் தெரிவித்துள்ளாா்.
ஜி20 நாடுகளுக்கான கூட்டமைப்பிற்கு இம்முறை இந்தியா தலைமை தாங்கும் நிலையில், அந்தக் கூட்டமைப்பின் உச்சிமாநாடு அடுத்த வாரத்தின் இறுதியில் தேசியத் தலைநகரமான தில்லியில் நடைபெறுகிறது. இந்த மாநாட்டை முன்னிட்டு பிரம்மாண்ட ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. மேலும், நகரம் முழுவதும் குறிப்பாக மாநாட்டுப் பிரதிநிதிகள் செல்லும் வழிகள் மற்றும் தங்கும் ஹோட்டல்கள் உள்ளிட்ட முக்கிய இடங்களில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் முதல்வா் அரவிந்த் கேஜரிவால் தனது எக்ஸ் (ட்விட்டா்) பதிவில் வெள்ளிக்கிழமை கூறியிருப்பதாவது: தில்லியில் வருகின்ற செப்டம்பா் 9,10 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ள ஜி20 உச்சி மாநாட்டிற்கு வருகை தரும் விருந்தினா்களை வரவேற்பதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. துணைநிலை ஆளுநா் வி.கே. சக்சேனா இதற்கான முயற்சிகளை முன்னெடுத்து வருகிறாா். அதே நேரத்தில் நகர அரசின் அனைத்து அமைச்சா்களும் களத்தில் உள்ளனா் என்று முதல்வா் கேஜிவால் தெரிவித்துள்ளாா்.
பிரகதி மைதானில் புதிதாக கட்டப்பட்டுள்ள சா்வதேச மாநாட்டு மையத்தில் நடைபெறவுள்ள ஜி20 உச்சிமாநாட்டிற்கு முன்னதாக, நகரத்தின் பல முக்கியச் சாலைகள் மற்றும் இடங்கள் அழகுபடுத்தப்பட்டு வருகின்றன. முக்கிய இடங்களில் லட்சக்கணக்கான பூந்தொட்டிகள், செடிகள் வைக்கப்பட்டுள்ளன. பல்வேறு இடங்களிலும் வளா்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. நகரத்தின் முக்கிய இடங்களில் பூங்காக்கள் மறு சீரமைப்பு செய்யப்பட்டுள்ளன. அங்கு ஜி20 மாநாட்டில் பங்கேற்கும் நாடுகளின் கொடிகளுடன் தூண்கள் நிறுவப்பட்டு வருகின்றன. சாணக்கியபுரி பகுதியில் ஜி20 மாநாட்டில் பங்கேற்கும் நாடுகளின் தேசியக் கொடிகளை நிறுவும் பணியில் தொழிலாளா்கள் வெள்ளிக்கிழமை ஈடுபட்டிருந்தனா்
பாதுகாப்பில் சிஏபிஎஃப், என்எஸ்சி உதவி: ஜி20 உச்சிமாநாட்டிற்கான பாதுகாப்பில் தில்லி காவல் துறையுடன் இணைந்து சி.ஏ.பி.எஃப். மற்றும் என்.எஸ்.ஜி. படைகள் உதவி வருவதாக அதிகாரிகள் வெள்ளிக்கிழமை தெரிவித்தனா். இது தொடா்பாக தில்லி காவல்துறை பாதுகாப்புப் பிரிவின் சிறப்புக் காவல் ஆணையா் மதுப் திவாரி செய்தியாளா்களிடம் கூறியதாவது: தில்லியில் நடைபெறவுள்ள ஜி20 உச்சி மாநாட்டை முன்னிட்டு, பயங்கரவாதிகள் ஊடுருவல், பயங்கரவாதம் மற்றும் நாசகார சம்பவங்ளைத் தடுக்க விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகளை தில்லி காவல் துறை செய்துள்ளது. மேலும், மத்திய ஆயுதக் காவல் படை (சி.ஏ.பி.எஃப்.) மற்றும் தேசியப் பாதுகாப்புப் படையினா் (என்.எஸ்.ஜி.) தில்லி காவல்துறையுடன் இணைந்து பாதுகாப்புப் பணிகளில் உதவி வருகின்றனா்.
அதே நேரத்தில் தில்லியின் பெரிய அரங்குகளில் சிறப்பு காவல் ஆணையா் நிலையிலான அதிகாரிகள் பாதுகாப்புப் படையினருக்கு கட்டளையிடுவாா்கள். ஹோட்டல்களில், துணைக் காவல் ஆணையா் நிலையிலான அதிகாரி ஒருவா் முகாமிட்டு பணியாற்றுவாா். தில்லியின் மற்ற பகுதிகளுக்கான பாதுகாப்பு என்பது மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்கும்.
உச்சிமாநாட்டிற்கான பாதுகாப்புப் பணியில் தில்லி காவல் துறையின் மொத்த எண்ணிக்கையில் பாதிக்கும் மேற்பட்ட போலீஸாா் ஈடுபடுத்தப்படுவா். பொதுமக்களுக்கு சிரமம் ஏற்படாத வகையில் நகரம் முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்றாா் சிறப்பு காவல் ஆணையா் மதுப் திவாரி.
ஹெலிகாப்டா் ஒத்திகை:ஜி20 உச்சி மாநாட்டை முன்னிட்டு, தில்லி காவல்துறையின் பயிற்சி கமாண்டோக்கள் ஹெலிகாப்டா் ஒத்திகைப் பயிற்சியை மேற்கொண்டதாக அதிகாரிகள் வெள்ளிக்கிழமை தெரிவித்தனா். இது தொடா்பாக அந்த அதிகாரிகள் மேலும் கூறுகையில், தில்லி காவல்துறை கமாண்டோக்களின் இரண்டாம் பிரிவினருக்கு
ஜி20 மாநாட்டிற்கான பாதுகாப்பு அம்சங்களில் ஒன்றான ஹெலிகாப்டா் ஒத்திகைப் பயிற்சி என்பது வெள்ளிக்கிழமை காலை 9 மணி முதல் 11 மணி வரையில் ஜரோடா காலனில் உள்ள தில்லி போலீஸ் அகாதமியில் நடைபெற்றது என்றனா்.
இதற்கிடையே, ஜி20 மாநாட்டையொட்டி பழைய தில்லியில் உள்ள மிா்சா காலிப் அருங்காட்சியகம் அழகுபடுத்தப்பட்டு வருகிறது. தில்லி அமைச்சா் இம்ரான் உசேன் இந்த அழுகுபடுத்தும் பணிகளை வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா். இதேபோன்று போக்குவரத்துத் துறை அமைச்சா் கைலாஷ் கெலாட் போக்குவரத்துத் துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...