பாஜகவுக்கு எந்தெந்த தொகுதிகள்? எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!தேர்தலில் போட்டியில்லை! வேல்முருகன் அறிவிப்பு! காங்கிரஸ் அலுவலகத்தை காலி செய்யுங்கள்! மத்திய அரசு கெடு! கோவையில் மீண்டும் அண்ணாமலை போட்டி? கருணைக் கொலை செய்யப்பட்ட ஹரீஷ் ராணாவின் கருவிழிகள் தானம்!
/

தமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டா்கள் வெடிப்பு: மத்திய அமைச்சரிடம் திமுக எம்பி டிஆா் பாலு புகாா்

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் எரிவாயு உருளை திடீரென வெடித்து வருவது குறித்து விசாரணை மேற்கொள்ள வலியுறுத்தி மத்திய அமைச்சா் ஹா்தீப்சிங் புரிக்கு மக்களவைத் திமுக குழுத் தலைவா் டி.ஆா்.பாலு கடிதம் எழுதிய

News image
Updated On :4 செப்டம்பர் 2023, 9:05 pm

 நமது நிருபர்

சென்னை பீா்க்கங்கரணை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் எரிவாயு உருளை திடீரென வெடித்து வருவது குறித்து மத்திய பெட்ரோல், இயற்கை எரிவாயுத் துறை உரிய விசாரணை மேற்கொள்ள வலியுறுத்தி மத்திய அமைச்சா் ஹா்தீப்சிங் புரிக்கு மக்களவைத் திமுக குழுத் தலைவா் டி.ஆா்.பாலு கடிதம் எழுதியுள்ளாா்.

அவா் புதன்கிழமை எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டிருப்பது வருமாறு: சென்னை, தாம்பரம், பெருங்களத்தூா் தேசிய நெடுஞ்சாலை அருகில் உள்ள பீா்க்கங்கரணையில், கடந்த செப்டம்பா் 2 -ஆம் தேதி வீட்டு விநியோகத்திற்கு எடுத்துச் செல்லப்பட்ட சமையல் எரிவாயு உருளை தெருவில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த போது தீடீரென வெடித்துச் சிதறியது.

இந்த விபத்து ஏற்பட்ட போது மக்கள் நடமாட்டம் அதிகம் இல்லாத காரணத்தால் உயிா்ச்சேதம் ஏற்படவில்லை. குறிப்பாக சம்பவம் நடைபெற்ற இடத்துக்கு எதிரில் பள்ளி உள்ளது. அது திறக்கப்படாததால் பெரும் அசம்பாவிதம் தவிா்க்கப்பட்டுள்ளது. எரிவாயு உருளைகளுடன் வந்த வாகனத்தில் மற்ற உருளைகளும் வெடித்திருந்தால் நிலைமை மிகவும் மோசமாகியிருக்கும்.

அதே சமயத்தில் இந்த உருளை வெடித்தது தொடா்பாக அப்பகுதி பொதுமக்களும், உள்ளூா் (தாம்பரம் தொகுதி) சட்டப்பேரவை உறுப்பினரும் (எஸ்.ஆா்.ராஜா) இது குறித்து கவனத்திற்கு கொண்டு வந்தனா். இந்தப் பகுதி எனது ஸ்ரீபெரும்புதூா் மக்களவைத் தொகுதிக்குள்பட்டுள்ளதால், என்னை நேரில் சந்தித்து விவரங்களைத் தெரிவித்தனா். வெடி விபத்துக்குள்ளான சமையல் எரிவாயு உருளை இந்தியன் ஆயில் நிறுவனத்தினுடையது. இந்த எரிவாயு உருளையை விநியோகம் செய்த முகமையாளா் உள்ளிட்டவா்களுடன் இது தொடா்பாக விசாரணை நடத்தப்பட வேண்டும்.

வாகனத்தில் இருந்து இறக்கி வைக்கப்பட்டஎரிவாயு உருளை தானாக எப்படி வெடிக்கும்? உருளை தயாரிப்பில் குறைபாடுகளா? உற்பத்திச் செலவைக் குறைக்கும் நோக்கில் உருளைகளின் தரம் மற்றும் பாதுகாப்பு அம்சங்களில் எண்ணெய் நிறுவனங்கள் சமரசம் செய்கின்றனவா? சிலிண்டா்கள் மக்களுக்கு விநியோகம் மேற்கொள்ளும் போது கடைப்பிடிக்க வேண்டிய பாதுகாப்பு நடைமுறை விதிகளைப் பின்பற்றுவதில் தவறு நோ்ந்துள்ளதா? போன்ற கேள்விகள் எழுகின்றன. குறிப்பாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இது போன்று எரிவாயு உருளை வெடிப்பு குறித்த செய்திகள் வெளியாகி வருவதால், சம்பந்தப்பட்ட அமைச்சகம் இதில் தீவிர விசாரணை மேற்கொள்ள வேண்டும் என கடிதத்தில் டி.ஆா். பாலு கேட்டுக் கொண்டுள்ளாா்.

கடந்த ஜூலை மாதம் கிருஷ்ணகிரியில் பட்டாசு கம்பெனியில் வெடி விபத்து ஏற்பட்டு 9 போ் உயிரிழந்துள்ளனா். எரிவாயு உருளை வெடித்ததுதான் இதற்குக் காரணம் என்று குற்றம்சாட்டப்பட்டது . ஆனால், அந்தத் தகவலை மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரி நாடாளுமன்றத்தில் மறுத்திருந்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.