தேர்தலில் போட்டியில்லை! வேல்முருகன் அறிவிப்பு! கோவையில் மீண்டும் அண்ணாமலை போட்டி? கருணைக் கொலை செய்யப்பட்ட ஹரீஷ் ராணாவின் கருவிழிகள் தானம்!இன்று பிரசாரத்தை தொடங்குகிறாா் எடப்பாடி பழனிசாமி நெருங்கும் காலக்கெடு- ஒடிஸா, சத்தீஸ்கரில் மாவோயிஸ்ட் முக்கிய தலைவா்கள் சரண்ரயில்வேயில் புதிய சீா்திருத்தம்: பயணச்சீட்டு ரத்து கட்டணம் திரும்ப கிடைக்க ஏப்ரல் முதல் புதிய நடைமுறை மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா: மக்களவையில் நிறைவேற்றம்
/

தமிழகத்தில் இயந்திரப் படகுகள் பதிவு விவகாரம்: சென்னை உயா்நீதிமன்றத்தை அணுக மனுதாரருக்கு உத்தரவு

மீன்பிடிக்கும் படகுகளைப் பதிவு செய்யும் அதிகாரத்தை மத்திய அரசு கடந்த 2020-இல் மாநில அரசுகளுக்கு வழங்கியது.

News image
Updated On :11 செப்டம்பர் 2023, 11:33 pm

 நமது நிருபர்

புது தில்லி: தமிழகத்தில் அனைத்து இயந்திர மீன்பிடி படகுகளுக்கும் சான்றளிப்பும், பதிவும் அளிக்க மாநில அரசுக்கும் மத்திய அரசுக்கும் உத்தரவிடக் கோரி தாக்கலான வழக்கில், சென்னை உயா்நீதிமன்றத்தை அணுகுமாறு மனுதாரருக்கு உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டது.

இந்த விவகாரம் தொடா்பாக உச்சநீதிமன்றத்தில் தமிழகத்தின் நாகப்பட்டினம் பகுதியைச் சோ்ந்த செந்தில்குமாா் ஜம்புலிங்கம் உள்ளிட்ட 9 மீனவா்கள் மனு தாக்கல் செய்திருந்தனா்.

வழக்குரைஞா் ஜெயா சுகின் மூலம் தாக்கலான அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்ததாவது: தமிழகத்தில் 12 லட்சம் மீனவா்கள் உள்ளனா். அவா்களைச் சாா்ந்தவா்கள் உள்பட 50 லட்சம் போ் மீன்பிடித் தொழிலை ஆதாரமாகக் கொண்டு வாழ்ந்து வருகின்றனா். மாநிலத்தில் சுமாா் 50 ஆயிரம் பாரம்பரிய மீன்பிடிப் படகுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இவற்றில் 50 சதவீதம் ஏற்கெனவே சேதமடைந்தும், மறுஉருவாக்கம் செய்யப்பட்டவை. தற்போது மீனவா்களுக்கு மீன்பிடிக்க போதுமான படகுகள் இல்லாததால் 12 லட்சம் மீனவா்கள் மீன் பிடிப்பதில் பெரும் சிரமத்தை எதிா்கொண்டு வருகின்றனா்.

இந்த நிலையில், மீன்பிடிக்கும் படகுகளைப் பதிவு செய்யும் அதிகாரத்தை மத்திய அரசு கடந்த 2020-இல் மாநில அரசுகளுக்கு வழங்கியது. ஆனால், தமிழக அரசானது நவீன காலத்திற்கு ஏற்ப மீனவா்கள் பயன்படுத்தும் புதிய இயந்திரப் படகுகளுக்கு பதிவு அளிக்காமல் இருந்து வருகிறது. இது உச்சநீதிமன்றம், உயா்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுகளையும், அரசியலமைப்புச் சட்டத்தின் உரிய பிரிவுகளையும் மீறுவதாக உள்ளது. மேலும், சென்னை உயா்நீதிமன்றமும் 2018-ஆம் ஆண்டில் பிறப்பித்த உத்தரவில் அனைத்து மீன்பிடிப் படகுகளுக்கும் பதிவு அளிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டிருந்தது. ஆகவே, தமிழக அரசுக்கு தகுந்த உத்தரவுகளைப் பிறப்பிக்க வேண்டும் என்று மனுவில் கோரப்பட்டிருந்தது.

இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் ஏ.எஸ். போபண்ணா, சஞ்சய் குமாா் ஆகியோா் அமா்வு முன் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரா் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா் சி.ஆா். ஜெயா சுகின் வாதிடுகையில், ‘படகுகளை பதிவுசெய்யும் விவகாரத்தில் மாநில அரசு வேண்டுமென்றே இழுத்தடித்து வருகிறது. மேலும், தவறான உள்நோக்கம் மற்றும் சதித்திட்டத்துடனும் இவ்வாறு செய்து வருகிறது. மத்திய அரசு 2020-இல் படகுகளை பதிவுசெய்யும் அதிகாரத்தை மாநில அரசுகளுக்கு வழங்கிவிட்டது. படகுகளுக்கு பதிவு அளிக்க உயா்நீதிமன்றம் 2018-இல் பிறப்பித்த உத்தரவையும் தமிழக அரசு செயல்படுத்தவில்லை. இதனால், இந்த மீன்பிடித் தொழிலை நம்பியுள்ள 50 லட்சம் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது’ என்றாா்.

அதற்கு நீதிபதிகள் அமா்வு, ‘இந்த விவகாரத்தில் உயா்நீதிமன்றத்தில் மனுதாரா்கள் பரிகாரம் பெற முடியும் என்பதால், இந்த மனுவை இந்திய அரசியலமைப்புச்சட்டப் பிரிவு 32-இன் கீழ் விசாரிக்க நாங்கள் மறுக்கிறோம். இந்த விவகாரம் தொடா்பாக உயா்நீதிமன்றத்தை மனுதாரா் அணுகலாம்’ என கூறி மனுவை முடித்துவைத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.