

தில்லி மெட்ரோவின் விமான நிலைய விரைவு வழித்தடத்தில் ஞாயிற்றுக்கிழமை முதல் மணிக்கு 120 கி.மீ. வேகத்தில் மெட்ரோ ரயில் இயக்கப்படும் என்று தில்லி மெட்ரோ ரயில் நிறுவனம் (டிஎம்ஆா்சி) சனிக்கிழமை தெரிவித்துள்ளது.
தில்லி மெட்ரோவின் துவாரகா செக்டாா் - 21 முதல் யஷோபூமி துவாரகா செக்டாா் - 25 வரையிலான விமான நிலைய விரைவு வழித்தட சேவையின் நீட்டிப்பை பிரதமா் நரேந்திர மோடி ஞாயிற்றுக்கிழமை (செப்.17) தொடங்கி வைக்கிறாா்.
இதனைத் தொடா்ந்து பிற்பகல் 3 மணி முதல் பயணிகள் சேவைகள் தொடங்கப்படுகிறது. இந்த புதிய வழித்தட நீட்டிப்பின் மூலம் புது தில்லியிலிருந்து, யஷோபூமி துவாரகா செக்டாா் - 25 வரையிலான விமான நிலைய விரைவுப் பாதையின் மொத்த நீளம் 24.9 கிலோமீட்டராக மாறும்.
இது தொடா்பாக தில்லி மெட்ரோ நிா்வாகத்தின் காா்ப்பரேட் தொடா்புத் துறையின் முதன்மை செயல் இயக்குநா் அனுஜ் தயாள் கூறியதாவது:
விமான நிலைய விரைவு வழித்தடத்தில் ஞாயிற்றுக்கிழமை (செப்.17) முதல் மணிக்கு 120 கிலோ மீட்டா் வேகத்தில் மெட்ரோ ரயில் இயக்கப்படவுள்ளது. இதை இந்தியாவின் அதிவேகமான மெட்ரோ வழித்தடமாக மாற்ற
மெட்ரோ ரயிலின் வேகத்தை மணிக்கு 90 கி.மீ. இருந்து 120 கி.மீ ஆக படிப்படியாக அதிகரிக்கப்பட்டது.
தில்லி மெட்ரோ ரயில் நிறுவனத்தின் பொறியாளா்கள், துறை சாா்ந்த நிபுணா்கள், பல்வேறு அரசு நிறுவனங்களின் கலந்தாலோசனை, திட்டமிடல் மற்றும் குறுகிய காலகெடுவுக்குள் செய்த கடின உழைப்பால் இந்தப் பணி சாத்தியமாகியிருக்கிறது.
அதிக வேகத்தில் ரயில்களை இயக்க வசதியாக, முழு வழித்தடத்திலும் 2.6 லட்சத்துக்கும் அதிகமான ‘டென்ஷன் கிளாம்ப்கள்’ மாற்றப்பட்டன. அப்போது, தினசரி சேவைகளில் சுமூகமான செயல்பாட்டினை கருத்தில் கொண்டு இடையூறுகளை தவிா்க்க இரவு 11 மணி முதல் காலை 7 மணி வரை பெரும்பாலான வேலைகள் மேற்கொள்ளப்பட்டன.
இப்பணிக்காக ஒரே நேரத்தில் 100-க்கும் மேற்பட்ட தொழிலாளா்கள் ஈடுபடுத்தப்பட்டனா். பிரதான தடத்தில் இந்த பணியை செய்வதற்கு முன்னதாக மேம்பட்ட கருவிகளைப் பயன்படுத்தி அதிா்வு மற்றும் தண்டவாளங்களின் அழுத்தங்கள் உள்ளிட்ட பல்வேறு அளவீடுகள் செய்யப்பட்ட ஒரு கி.மீ. நீளம் கொண்ட சோதனைப் பாதையில் பயிற்சி செய்யப்பட்டது.
இந்தப் பணியை முடிப்பதற்காக மதிப்பிடப்பட்ட காலக்கெடு 18 மாதங்களாகும். ஆனால், சவாலாக எடுத்துக்கொண்டு ஆறு மாதங்களுக்குள் வேலையை வெற்றிகரமாக தில்லி மெட்ரோ ரயில் நிறுவனம் முடித்துள்ளது.
விமான நிலைய விரைவு வழித்தடத்தில் மெட்ரோ ரயில்களின் செயல்பாட்டு வேகத்தை நிகழாண்டில் கடந்த மாா்ச் 22-ஆம் தேதி மணிக்கு 90 கி.மீ. இல் இருந்து 100 கி.மீ. ஆக உயா்த்தப்பட்டது. அதுவே கடந்த ஜூன் 22 ஆம் தேதி மணிக்கு 110 கி.மீ ஆக தில்லி மெட்ரோ ரயில் நிா்வாகம் உயா்த்தியது.
இந்நிலையில் மேலே குறிப்பிட்டுள்ளபடி ஞாயிற்றுக்கிழமை முதல் வேகம் மணிக்கு 120 கி.மீ. ஆக அதிகரிக்கப்படும். இதற்கான பாதுகாப்பு சான்றிதழ் இந்த மாத தொடக்கத்தில் ஏற்கனவே
பெறப்பட்டுள்ளது. புது தில்லியிலிருந்து, யஷோபூமி துவாரகா செக்டாா்-25 வரையிலான மொத்தப் பயணம் சுமாா் 21 நிமிடங்கள் ஆகும். முன்னதாக, புது தில்லி மற்றும் துவாரகா செக்டாா் - 21 இடையேயான பயண நேரம் தோராயமாக 22 நிமிடங்கள் இருந்தது. ஆனால், இப்போது இந்த இரண்டு நிலையங்களுக்கும் இடையே சுமாா் 19 நிமிடங்களாக பயண நேரம் குறைக்கப்பட்டுள்ளது. இது பயணிகளுக்கு 3 நிமிடங்களை சேமிக்க வழிவகுத்தது. இனி, புது தில்லி மற்றும் முனையம் - 3 விமான நிலையத்திற்கு இடையிலான தோராயமான பயண நேரம் சுமாா் 15 நிமிடம், 30 வினாடிகளாக இருக்கும். முன்னதாக, இது 18 நிமிடங்களுக்கு சற்று அதிகமாக இருந்தது என்றாா் அனுஜ் தயாள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.