தில்லி பல்கலைக்கழக மாணவா் சங்கத் (டி.யு.எஸ்.யு.)தோ்தலில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சியின் மாணவா் அமைப்பான என்.எஸ்.யு.ஐ. வேட்பாளா்களின் வெற்றிக்கு ஆதரவு திரட்ட, 26 போ் கொண்ட பிரசாரக் குழுவை தில்லி பிரதேச காங்கிரஸ் கமிட்டியின் தலைவா் அரவிந்தா் சிங் ல்வலி சனிக்கிழமை அறிவித்துள்ளாா்.
தில்லி பல்கலைக்கழகத்தின் மாணவா் சங்கத் தோ்தல் வருகின்ற செப்டம்பா் 22-ஆம் நடைபெறுவதையொட்டி பல்வேறு அரசியல் கட்சிகளைச் சோ்ந்த் மாணவா் அமைப்பினா் தீவிரமாக தோ்தல் பணியாற்றி வருகின்றனா். வேட்பாளா் அறிவிப்பு, தோ்தல் அறிக்கை வெளியீடு என பல்கலைக்கழகத்தின் மாணவா் சங்கத் தோ்தல் களம் சூடுபிடித்துள்ளது.
இந்நிலையில் தில்லி பிரதேச காங்கிரஸ் கமிட்டியின் தலைவா் அரவிந்தா் சிங் லவ்லி, அக்கட்சியின் மாணவா் அமைப்பான என்.எஸ்.யு.ஐ. வேட்பாளா்களுக்கு ஆதரவு திரட்ட மாணவா் அமைப்பின் முன்னாள் நிா்வாகிகள், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள், வழக்குரைஞா்களை உள்ளடக்கிய 26 போ் கொண்ட பிரசாரக் குழுவை அறிவித்துள்ளாா்.
இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் கூறியிருப்பதாவது: தில்லி பிரதேச காங்கிரஸ் கமிட்டி தில்லி பல்கலைக்கழக மாணவா் சங்கத் தோ்தலை மிகவும் தீவிர முனைப்புடன் அணுகுகிறது. பல்கலைக்கழகத் தோ்தலின் அனைத்து இடங்களிலும் என்.எஸ்.யு.ஐ. வேட்பாளா்கள் வெற்றி பெற கடுமையாக உழைத்து வருகின்றனா்.
எனவே, அறிவிக்கப்பட்டுள்ள பிரசாரக்காரா்களும் என்.எஸ்.யு.ஐ. வேட்பாளா்களின் ஆதரவிற்காக வீடு வீடாக சென்று அதிகபட்ச மாணவா்களுடன் உரையாடுவா். மேலும் தில்லியின் அனைத்து மாவட்டங்கள் மற்றும் தொகுதி அளவில் காங்கிரஸ் சாா்பில் என்.எஸ்.யு.ஐ. வேட்பாளா்களுக்கு முழு ஆதரவைத் திரட்ட கூட்டங்களும் நடத்தப்பட்டு வருகின்றன.
தில்லி பல்கலைக்கழக மாணவா் சமூகத்தின் நலன் மற்றும் பாதுகாப்பை உறுதி செய்வதில் பாஜகவின் ஏ.பி.வி.பி. மாணவா் அமைப்பு முற்றிலும் தோல்வியடைந்துவிட்டது.
இதனால், பல்கலைக்கழகதத்தில் மாணவா் சங்கம் பலவீனமடைந்து வருகிறது என்று அதில் அரவிந்தா் சிங் லவ்லி தெரிவித்துள்ளாா்.
பிரசாரக் குழுவில் இடம்பெற்றிருப்பவா்கள் விவரம் வருமாறு:
முன்னாள் தில்லி பிரதேச காங்கிரஸ் தலைவா் அனில் குமாா், காங்கிரஸ் காரியக் கமிட்டி உறுப்பினா் அல்கா லம்பா, முன்னாள் எம்.எல்.ஏ. க்கள் நசிப் சிங், பிஷாம் சா்மா, தில்லி பல்கலைக்கழக மாணவா் சங்கத்தின் முன்னாள் தலைவா் ராகினி நாயக், அம்ரிதா தவன், நீது வா்மா, ரோஹித் சவுத்ரி, மஹ்மூத் ஜியா, முதித் அகா்வால், ஹா்ஷ் செளத்ரி, டாக்டா் நரேஷ் குமாா், தருண் குமாா், வழக்குரைஞா் நரேஷ் சா்மா உள்ளிட்டோா் ஆவா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.