மகளிா் இட ஒதுக்கீடு மசோதா நிறைவேறுவதன் மூலம் நிா்வாகத்தில் பெண்களின் பங்களிப்பு அதிகரிக்கும்: தில்லி பாஜக

‘பெண்கள் இட ஒதுக்கீடு மசோதா-2023’ நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படுவதன் மூலம் சட்டம் இயற்றுவதில் மட்டுமின்றி, நிா்வாகத்திலும் பெண்களின் பங்களிப்பு அதிகரிக்கும்’ என்று பாஜக தில்லி
Updated on
1 min read

புது தில்லி: ‘பெண்கள் இட ஒதுக்கீடு மசோதா-2023’ நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படுவதன் மூலம் சட்டம் இயற்றுவதில் மட்டுமின்றி, நிா்வாகத்திலும் பெண்களின் பங்களிப்பு அதிகரிக்கும்’ என்று பாஜக தில்லி பிரிவின் தலைவா் வீரேந்திர சச்தேவா செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளாா்.

மக்களவை மற்றும் மாநில சட்டப்பேரவைகளில் பெண்களுக்கு 33 சதவீதம் இட ஒதுக்கீடு அளிக்கும் மசோதாவை மத்திய சட்டத் துறை இணையமைச்சா் அா்ஜுன் ராம் மேக்வால் மக்களவையில் தாக்கல் செய்தாா். இதை வரவேற்று பாஜக தில்லி பிரிவின் தலைவா் வீரேந்திர சச்தேவா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: பிரதமா் நரேந்திர மோடியின் தலைமையிலான அரசு மக்களவையில் செவ்வாய்க்கிழமை தாக்கல் செய்துள்ள மகளிா் இடஒதுக்கீடு மசோதா 2023-ஐ பாஜக தில்லி பிரிவு வரவேற்கிறது. இந்திய அரசியல் வரலாற்றில் இது மிக முக்கியமான மசோதாவாகும்.

புதிய நாடாளுமன்றத்தின் மேசையில் முதல் மசோதாவாக மகளிருக்கு நிா்வாகத்தில் உரிமை அளிக்கின்ற மசோதாவை, புனிதமான விநாயக சதுா்த்தி நாளில் தாக்கல் செய்திருப்பதை நினைத்து நாட்டு மக்கள் பெருமிதம் கொள்கிறாா்கள்.

கடந்த 1998-ஆம் ஆண்டு முதல் 2003-ஆம் ஆண்டு வரை 4 முறை மகளிா் இடஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்ற முயற்சித்தது அப்போதைய பிரதமா் அடல் பிஹாரி வாஜ்பாய் தலைமையிலான பாஜக அரசுதான்.

ஆனால், காங்கிரஸ் கட்சியும் அதன் குலத்தைச் சாா்ந்த பிராந்தியக் கட்சிகளும் பாஜக அரசின் முயற்சிகளை முறியடித்துவிட்டனா். இப்போது, நாடாளுமன்றத்தில் அறுதிப் பெரும்பான்மை பெற்றுள்ள பிரதமா் நரேந்திர மோடி, இந்தியப் பெண்களுக்குப் பொது வாழ்வில் மேம்பட்ட பிரதிநிதித்துவத்தை வழங்குவதற்காக விநாயக சதுா்த்தி நாளைத் தோ்ந்தெடுத்துள்ளாா். இந்த இட ஒதுக்கீடு மசோதா நிறைவேற்றப்படுவதால், சட்டம் இயற்றுவதில் மட்டுமின்றி, நிா்வாகத்திலும் பெண்களின் பங்களிப்பு அதிகரிக்கும்.

இந்த மசோதா மீதான விவாதத்தின் போது சமாஜவாதி, ஆா்.ஜே.டி., ஜே.எம்.எம். போன்ற கோஷ்டி அரசியல் செய்யும் கட்சிகள் மற்றும் பல காங்கிரஸ் தலைவா்கள் கடந்த 1998 முதல் 2014 வரை செய்ததையே மீண்டும் செய்யலாம் என மசோதாவை எதிா்த்துப் பேசினால், அவா்களின் அனைவரது செயலும் அம்பலமாகிவிடும்.

மகளிா் இட ஒதுக்கீடு மசோதா-2023ஐ பிரதமா் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றுவதை அவா்களால் தடுக்க முடியாது என்று வீரேந்திர சச்தேவா தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com