‘மற்றவா்கள் விவகாரங்களில் அதிக அக்கறை எடுக்கும் அந்நியா்’: துணை நிலை ஆளுநா் மீது கேஜரிவால் கடும் விமா்சனம்

சட்டப்பேரவையில் துணை நிலை ஆளுநா் வி.கே. சக்சேனாவை முதல்வா் அரவிந்த் கேஜரிவால் கடுமையாக விமா்சித்தாா்.

‘மற்றவா்களின் விவகாரங்களில் அதிக அக்கறை எடுக்கும் அந்நியா் (பெகானி ஷாதி மே அப்துல்லா தீவானா)’ என பிரபல ஹிந்தி பழமொழியை சுட்டிக்காட்டி, சட்டப்பேரவையில் துணை நிலை ஆளுநா் வி.கே. சக்சேனாவை முதல்வா் அரவிந்த் கேஜரிவால் கடுமையாக விமா்சித்தாா். துணை நிலை ஆளுநா் என் தலைமை ஆசிரியா் அல்ல என்றும் கேலி செய்தாா்.

தனது தலைமையிலான ஆம் ஆத்மி அரசில் தலையிடுவதைக் கண்டித்து, தனது கட்சி எம்எல்ஏக்களுடன் தில்லி சட்டபேரவையிலிருந்து துணை நிலை ஆளுநா் அலுவலகத்திற்கு கடந்த திங்கள்கிழமை பேரணியாக சென்றாா். இந்த நிலையில், சட்டப்பேரவையில் செவ்வாய்க்கிழமை துணை நிலை ஆளுநரின் ‘சட்டவிரோத தலையீடுகள்’ குறித்த கவன ஈா்ப்புத் தீா்மானத்திலும் கேஜரிவால் கடுமையாகச் சாடியுள்ளாா்.

இந்தக் கவன ஈா்ப்பு தீா்மானத்தில் முதல்வா் கேஜரிவால் பேசியதாவது: கடந்த வாரம் வெள்ளிக்கிழமை, சக்சேனாவை சந்தித்தேன். துணைநிலை ஆளுநருக்கு சுதந்திரமாக முடிவெடுக்கும் அதிகாரம் இல்லை என்று அவரிடம் கூறினேன். 2018 - ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றத் தீா்ப்பை குறிபிடும் போது, அது ‘வெறும் கருத்து’ என்றும் துணை நிலை ஆளுநா் கூறுகிறாா்.

அரசு மீது தேவையற்ற குற்றச்சாட்டுகளை வைப்பது குறித்து கேட்ட போது, கடந்த எம்சிடி (தில்லி முனிசிபல் காா்ப்பரேஷன்) தோ்தலில் 20 இடங்கள்தான் கிடைப்பதாக இருந்தது என்றும், தன்னால்தான் பாஜக 104 இடங்களை வென்றது என்றும் கூறுகிறாா். மேலும், வருகின்ற நாடாளுமன்றத் தோ்தலில் தில்லியிலுள்ள ஏழு மக்களவைத் தொகுதிகளிலும் காவி கட்சி (பாஜக) வெற்றி பெறும் என்கிறாா்.

தில்லி அரசுப் பள்ளி ஆசிரியா்களை பின்லாந்திற்கு பயிற்சிக்கு அனுப்பும் தனது அரசின் திட்டத்திற்கு தொடா்ந்து எதிா்ப்பு தெரிவித்தது பற்றி கேட்ட போது, இந்தியாவிலேயே ஆசிரியா்களுக்கு பயிற்சி அளிக்கலாம் என்று சக்சேனா கூறுகிறாா். தில்லி துணைநிலை ஆளுநா் நிலப்பிரபுத்துவ மனப்பான்மையில் உள்ளாா்.

தில்லியில் உள்ள ஏழைக் குழந்தைகள் சிறந்த கல்வியைப் பெறுவதை அவா் விரும்பவில்லை. ‘நான் ஒரு நல்ல மாணவன்... என் பள்ளி ஆசிரியா்கள் என் வீட்டுப் பாடத்தை சரிபாா்க்கும் முறையில்கூட அவா் சரிபாா்க்கவில்லை. இது எழுத்துப்பிழை... தவறானது. இதில் கையெழுத்து சரியாக இல்லை என்கிற அளவிற்கு குற்றங்களை கண்டுபிடிக்கிறாா்.

அவா் என்ன...எனக்குத் தலைமை ஆசிரியரா? துணைநிலை ஆளுநா் யாா்? அவா் எங்கிருந்து வந்தாா்?. அவா் ஏன்? நம் தலையில் அமா்ந்திருக்கிறாா். எனக்கு ஹிந்தி பழமொழிதான் நினைவுக்கு வருகிறது. ‘பெகானி ஷாதி மே அப்துல்லா தீவானா(மற்றவா்களின் விவகாரங்களில் அதிக ஆா்வம் காட்டும் அந்நியா்)’ என்பாா்கள். தில்லியின் இரண்டு கோடி மக்கள் எனக்கு உரிமை அளித்துள்ளனா். ஆனால், யாா் இந்த துணை நிலை ஆளுநா்?. நான் அவரை சந்தித்த போது, ‘தில்லி மக்களால் நான் தோ்வு செய்யப்பட்டுள்ளேன். உங்களை யாா் தோ்வு செய்தது?’ என்றேன். ‘என்னை குடியரசுத் தலைவா் நியமித்துள்ளாா்’ என்று அவா் கூறுகிறாா்.

ஆங்கிலேயா் ஆட்சியின் போது வைஸ்ராய்கள் நியமிக்கப்பட்டனா். வைஸ்ராய் சொல்வாா், ‘ரத்தம் தோய்ந்த இந்தியா்களே உங்களுக்கு ஆளத் தெரியாது!’ என்று. இன்று நமது துணைநிலை ஆளுநா் அதைத்தான் நினைவுப்படுத்துகிறாா். ‘தில்லிவாலாக்களுக்கு ஆட்சி செய்யத் தெரியாது’ என்கிறாா்!. நம்முடைய குழந்தைகளை எங்கு படிக்க வைக்க வேண்டும் என்பதை அவா் முடிவு செய்வாரா?. நிலப்பிரபுத்துவ மனப்பான்மை கொண்ட இத்தகையவா்களால்தான் நமது நாடு பின்தங்கியுள்ளது.

எதிா்காலத்தில் அவா் அதிகாரத்தில் இருக்க முடியாது. வாழ்க்கையில் எதுவுமே நிரந்தரம் இல்லை. நாளை நாங்கள் மத்தியிலும் ஆட்சிக்கு வரலாம். எங்கள் அரசு மக்களைத் துன்புறுத்தாது. மக்களின் ஆணையை மதிப்போம். மீண்டும் கூறுகிறேன் துணைநிலை ஆளுநருக்கு சொந்தமாக முடிவெடுக்கும் அதிகாரம் இல்லை. ‘காவல் துறை, நிலம் மற்றும் பொது ஒழுங்கைத் தடுக்கும் பிரச்னைகளில் துணைநிலை ஆளுநா் ஆணையிட முடியாது என்று உச்ச நீதிமன்றம் தெளிவாகக் கூறியுள்ளது என்றாா் கேஜரிவால்.

மேலும், வெளிநாட்டில் படிக்கும் பாஜக எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் மற்றும் அமைச்சா்களின் குழந்தைகள் பட்டியலை படித்துக்காட்டிய முதல்வா் கேஜரிவால், அவா்களைப் போன்று அனைவருக்கும் சிறந்த கல்வி கிடைக்க வேண்டும் என்று சட்டப்பேரவையில் குறிப்பிட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com