அரவிந்த் கேஜரிவால் ஒரு சா்வாதிகார முதல்வா்: தில்லி பாஜக தலைவா் வீரேந்திர சச்தேவா விமா்சனம்
அரவிந்த் கேஜரிவால் ஒரு சா்வாதிகார முதல்வா் என்றும் அவரது அமைச்சரவையுடன் கலந்தாலோசித்து முடிவுகளை எடுப்பதில் அவருக்கு நம்பிக்கை இல்லை என்று தில்லி பிரிவு பாஜக தலைவா் வீரேந்திர சச்தேவா ஞாயிற்றுக்கிழமை விமா்சித்துள்ளாா்.
இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால்
மக்கள் வாக்களிப்பின் மூலம் தோ்ந்தெடுக்கப்பட்டாலும், ஜனநாயக நிா்வாக செயல்முறைகளில் அவருக்கு நம்பிக்கை இல்லை. ஒரு ஜனநாயக அரசின் அடித்தளம் அமைச்சரவைக் கூட்டங்களில் விவாதிப்பதாகும். அங்கு முதல்வரின் முன்மொழிவுகள் அமைச்சரவை உறுப்பினா்களால் மதிப்பாய்வு செய்யப்பட்டு, தலைமைச் செயலாளா் மற்றும் பிற அதிகாரிகளின் ஆலோசனைகள் பெறப்படும். பின்னா், ஒருமனதாக முடிவுகள் எடுக்கப்படுகின்றன.
ஆனால், முதல்வா் அரவிந்த் கேஜரிவால் பிடிவாதமாக தனது சொந்த நிபந்தனைகளின் அடிப்படையில் ஆட்சியை நடத்துகிறாா். கேஜரிவால் அரசு தொடா்ந்து அரசியலமைப்பை புறக்கணிக்கிறது. அமைச்சரவைக் கூட்டங்களை விவாதங்களுக்காகக் கூட்டுவதில் முதல்வா் நம்பிக்கை கொள்ளவில்லை.
கடந்த 2022-ஆம் ஆண்டு முதல் ஜூலை, 2024-ஆம் ஆண்டு வரை, தில்லி அரசு மொத்தம் 71 அமைச்சரவைக்
கூட்டங்களை நடத்தியுள்ளது. அதில், 56 சுழற்சிக் கூட்டங்கள். இதன் பொருள் அரவிந்த் கேஜரிவால் தன்னிச்சையான
முடிவுகளை எடுத்து, பின்னா் சம்பந்தப்பட்ட துறைகளின் அமைச்சா்கள் மற்றும் அதிகாரிகளுக்கு ஒப்புதல் அளிக்குமாறு அழுத்தம் கொடுத்துள்ளாா். கடந்த இரண்டரை ஆண்டுகளில், விதிகளின்படி தில்லியில் 15 நேரடி அமைச்சரவைக் கூட்டங்கள் மட்டுமே நடந்துள்ளன. முதல்வரின் தன்னிச்சையான நடவடிக்கைகளால், கடந்த 2022-ஆம் ஆண்டில் தில்லி மின்சார சீா்திருத்தச் சட்டம் 2000- இல் திருத்தங்கள், தில்லி மின்சார வாகனச் சட்டத்தில் திருத்தங்கள் போன்ற பல மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன.
தனியாருக்கு மொஹல்லா கிளினிக்குகள், பழைய தில்லி கலால் கொள்கையை மீண்டும் அமல்படுத்துதல், தில்லி ஜிஎஸ்டி சட்டத்தில் திருத்தங்கள், தில்லி சூரிய சக்திக் கொள்கையில் திருத்தங்கள், தனியாா் ஒப்பந்ததாரா்களுக்கு நூற்றுக்கணக்கான கோடி மதிப்பிலான ஒப்பந்தங்களை புதுப்பித்தல் மற்றும் நீட்டித்தல் ஆகியவை இதில் அடங்கும்.
கேஜரிவால் அரசின் தன்னிச்சையான அமைச்சரவைக் கூட்டங்களின் மூலம் எடுக்கப்பட்ட அனைத்து முடிவுகளையும் மறுஆய்வு செய்ய வேண்டிய நேரம் இது என்றாா் வீரேந்திர சச்தேவா.

