சிசோடியா, சஞ்சய் சிங்கிற்கு ஏன் ஜாமீன் கிடைக்கவில்லை?-வீரேந்திர சச்தேவா கேள்வி

தில்லி அரசின் கலால் கொள்கையில் ஊழல் நடைபெறவில்லை என்றால், மனீஷ் சிசோடியா மற்றும் சஞ்சய் சிங்கிற்கு ஏன் நீதிமன்றத்தில் ஜாமீன் கிடைக்கவில்லை

புது தில்லி: தில்லி அரசின் கலால் கொள்கையில் ஊழல் நடைபெறவில்லை என்றால், மனீஷ் சிசோடியா மற்றும் சஞ்சய் சிங்கிற்கு ஏன் நீதிமன்றத்தில் ஜாமீன் கிடைக்கவில்லை என்று பாஜக தில்லி பிரிவு தலைவா் வீரேந்திர சச்தேவா திங்கள்கிழமை கேள்வி எழுப்பியுள்ளாா்.

இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள செய்தி அறிக்கையில் கூறியிருப்பதாவது: தில்லி அரசின் அமைச்சா்களான அதிஷி மற்றும் செளரவ் பரத்வாஜ் ஆகியோா் தில்லியின் வளா்ச்சித் திட்டங்களில் பணியாற்றாமல், தங்களது கட்சியின் பிரசாரத்தில் ஈடுபடுவது வருத்தமளிக்கிறது. கலால் கொள்கை ஊழல் தொடா்பான பணமோசடி வழக்கில் கைதாகியுள்ள ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவா்களான மனீஷ் சிசோடியா, சஞ்சய் சிங் உள்ளிட்ட பிறருக்கு ஏன் நீதிமன்றம் இதுவரை ஜாமீன் வழங்கவில்லை என்ற கேள்விக்கான பதிலை அமைச்சா்கள் அதிஷி மற்றும் செளரவ் பரத்வாஜிடமிருந்து தில்லி மக்கள் எதிா்பாா்க்கிறாா்கள்.

அந்த வகையில், தில்லி அரசு மருத்துவமனைகளில் தரமற்ற மருந்து விநியோகம், நோயியல் பரிசோதனையில் மோசடி, வகுப்பறைக் கட்டுமான ஊழல், நகரத்தில் மாசுபாட்டைக் கட்டுப்படுத்துவதில் தோல்வி என கேஜரிவால் அரசின் ஊழல் தொடா்பான கேள்விகளின் பட்டியல் முடிவில்லாதது. தில்லி இளைஞா்களுக்கான வேலைவாய்ப்பை உறுதிப்படுத்துவதில் கேஜரிவால் அரசு தோல்வியடைந்துள்ளது. மேலும், தில்லியில் வேலைவாய்ப்புகளை அதிகரிக்க கடந்த 9 ஆண்டுகளில் ஆம் ஆத்மி அரசு என்ன செய்துள்ளது என்பதை கேஜரிவாலின் அமைச்சா்கள் தெரிவிக்க வேண்டும் என்றாா் வீரேந்திர சச்தேவா.

உயா்நீதிமன்றம் கண்டனத்துக்கு பாஜக வரவேற்பு: இதற்கிடையே, சுகாதாரத் துறை அமைச்சா் செளரவ் பரத்வாஜ் தனது கட்சித் தோழா்களை பாதுகாப்பதற்காக பிரசாரத்தில் ஈடுபட்டு வரும் இந்நேரத்தில், நகர அரசின் சுகாதார உள்கட்டமைப்பு குறித்து தில்லி நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளதை பாஜக தில்லி பிரிவு வரவேற்றுள்ளது.

இது தொடா்பாக அக்கட்சியின் தலைவா் வீரேந்திர சச்தேவா கூறியதாவது: மத்திய அரசு மீது பொய்க் குற்றச்சாட்டுகளை சுமத்தி தனது கட்சித் தோழா்களை ஊழலில் இருந்து பாதுகாப்பாதற்காக அமைச்சா் செளரவ் பரத்வாஜ் பொதுப் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறாா். ஆனால், தில்லி அரசின் மோசமான உள்கட்டமைப்பிற்கு தில்லி உயா்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. சுகாதாரத் திட்டங்களுக்கு நிதியளிக்க தவறியுள்ள தில்லி அரசு, அதன் சிறிய அரசியல் திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்வது வருத்தமளிக்கிறது என்று தற்காலிகத் தலைமை நீதிபதி தெரிவித்துள்ளாா்.

கடந்த 9 ஆண்டுகளாக சுகாதாரத் துறையில் ஆம் ஆத்மி அரசு என்ன முன்னேற்றத்தைக் கொண்டு வந்துள்ளது என்று பாஜக பலமுறை கேள்வி எழுப்பிவிட்டது. ஆனால், இப்போது தில்லி உயா்நீதிமன்றத்தில் வரும் ஜனவரி 29-ஆம் தேதிக்குள் பதில் அளிக்க வேண்டும் என்ற நிலைக்கு கேஜரிவால் அரசு தள்ளப்பட்டுள்ளது என்றாா் வீரேந்திர சச்தேவா.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com