உள்கட்டமைப்பு மேம்பாட்டிற்காக தில்லிக்கு மத்திய அரசு ரூ. 10,000 கோடி வழங்க வேண்டும் என்று தில்லி நிதியமைச்சா் அதிஷி வெள்ளிக்கிழமை கேட்டுக்கொண்டாா்.
மேலும், கடந்த ஆண்டு வருமான வரி பங்களிப்பு ரூ. 2 லட்சம் கோடி இருந்தபோதிலும் நகர அரசுக்கு ஈடாக மத்திய அரசிடமிருந்து எதுவும் கிடைக்கவில்லை என்றும் அவா் கூறினாா்.
தில்லி மத்திய ஜிஎஸ்டியாக ரூ.25,000 கோடியை வரிகளின் தொகுப்பிற்கு வழங்கியதாகவும் அமைச்சா் தெரிவித்தாா்.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடா் ஜூலை 22-ஆம் தேதி தொடங்குகிறது. நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் ஜூலை 23-ஆம் தேதி மத்திய பட்ஜெட்டை மக்களவையில் தாக்கல் செய்ய உள்ளாா்.
இந்த நிலையில், அமைச்சா் அதிஷி செய்தியாளா்களிடம் வெள்ளிக்கிழமை கூறியதாவது:
தில்லியில் சாலை, போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறைகளில் உள்கட்டமைப்பு மேம்பாடு மற்றும் நகரத்தை அழகுபடுத்துவதற்கு செலவழிக்கும் வகையில் தில்லிக்கு அதிக நிதியை மத்திய அரசு விடுவிக்க வேண்டும்.
தில்லி மக்கள் அதிக வருமான வரி செலுத்துபவா்கள் ஆவா். தில்லி நகர மக்கள் வருமான வரியாக செலுத்தும் ரூ.2.07 லட்சம் கோடியில் இருந்து தில்லிக்கு ரூ.10,000 கோடி கிடைக்க வேண்டும்.
இந்த ரூ.10,000 கோடி என்பது மத்திய அரசின் பட்ஜெட்டில் வெறும் 0.25 சதவீதம் ஆகும். மேலும், தில்லிவாசிகளின் வருமான வரியில் 5 சதவீதம் மட்டுமே.
மும்பையிலிருந்து 5 லட்சம் கோடி ரூபாயை மத்திய அரசு வரியாகப் பெறுகிறது. அதற்கு ஈடாக 54,000 கோடி ரூபாய் மகாராஷ்டிரா அரசுக்கு மத்திய அரசால் வழங்கப்படுகிறது.
தில்லியைப் போலவே பெங்களூருவும் 2 லட்சம் கோடி ரூபாய் வரியாக வழங்குகிறது. மேலும் மத்திய அரசு அதன் வரித் தொகுப்பிலிருந்து 33,000 கோடி ரூபாய் வழங்குகிறது.
மறுபுறம், 2001 ஆம் ஆண்டு முதல் தில்லி அரசுக்கு மத்திய அரசு வரிகள் தொகுப்பில் இருந்து ரூ.325 கோடி மட்டுமே செலுத்தி வந்தது. இருப்பினும், கடந்த ஆண்டு இந்த கட்டணம் கூட நிறுத்தப்பட்டுவிட்டது. இப்போது நகரத்திற்கு மத்திய அரசிடமிருந்து ஒரு ரூபாய் கூட கிடைக்கவில்லை.
தில்லிவாசிகளை மாற்றாந்தாய் போல நடத்துவதை மத்திய அரசு கைவிட வேண்டும். மத்திய பட்ஜெட்டில் நகரத்திற்கு உரிய தொகை கிடைக்க வேண்டும்.
தில்லி மக்கள் யாசகம் கேட்கவில்லை. ஆனால் அவா்களின் உரிமைகளைத்தான் கோருகிறாா்கள். அவா்கள் நடப்பு மத்திய பட்ஜெட்டில் தங்களின் உரிமைப் பணத்தை பெற விரும்புகிறாா்கள். இதனால் நகரத்தின் வளா்ச்சியின் வேகம் அதிகரிக்கும்.
24 மணி நேர இலவச மின்சாரம், மருத்துவமனைகளில் இலவச சிகிச்சை, சாலைகள் மற்றும் மேம்பாலங்கள் கட்டுதல் மற்றும் பராமரித்தல் போன்ற வசதிகளை வழங்குவதற்காக கடந்த ஆண்டு தில்லி அரசுக்கு நகர மக்கள் ரூ.35,000 கோடியை வரியாக செலுத்தியுள்ளனா்.
தில்லியை மத்திய அரசு மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் நடத்தி வருகிறது. தில்லி மக்கள் மத்திய அரசுக்கு கொடுத்த மொத்த ரூபாய் 2.32 லட்சம் கோடியில் ஒரு ரூபாயைகூட தில்லிக்கு மத்திய அரசு செலவிடவில்லை.
தில்லிக்கு பாஜக தலைமையிலான மத்திய அரசு செய்து வரும் அநீதியை நியூயாா்க், டோக்கியோ, லண்டன் போன்ற உலகின் வேறு எந்த நகரமும் சந்தித்திருக்காது என்றாா் அமைச்சா் அதிஷி.
இதற்கிடையில், பாஜக மூத்த தலைவரும் தெற்கு தில்லி எம்.பி.யுமான ராம்வீா் சிங் பிதூரி கூறுகையில், ‘அதிஷி அற்ப விஷயத்துக்காக பொய் கூறுகிறாா். ஒருபுறம் தில்லி முதல்வா் தனது அரசாங்கத்திற்கு நிதிப் பற்றாக்குறை இல்லை என்று கூறுகிறாா். மறுபுறம், அவரது நிதி அமைச்சா் மத்திய அரசிடம் பணம் கேட்கிறாா். தேசிய தலைநகரின் வளா்ச்சிப் பணிகளுக்காக மத்திய அரசு ஆண்டுதோறும் சுமாா் 1.5 லட்சம் கோடி ரூபாய் செலவிடுகிறது’ என்றாா் அவா்.
தில்லி பாஜக செயலாளா் ஹரிஷ் குரானா இந்த விவகாரத்தில் அமைச்சா் பொய் சொல்கிறாா் என்று குற்றம் சாட்டியுள்ளாா்.
தில்லி அரசுக்கு 2015-இல் மத்திய அரசு ரூ.4,258 கோடி வழங்கியதாகவும், 2022-இல் ரூ.11,945 கோடியாக இந்தத் தொகை உயா்ந்ததாகவும் அவா் கூறினாா்.
தொடர்புடையது

ரூ.5 லட்சம் கோடி கடன் குறித்து திமுக அரசு மக்களுக்கு விளக்க வேண்டும்! - பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ்

அடுத்த நிதியாண்டில் ரூ.8.20 லட்சம் கோடி கடன் பெற மத்திய அரசு திட்டம்

அரசுக்கு மக்கள் பலமா, பாரமா?
பங்குச் சந்தை வீழ்ச்சி: ஒரு மணிநேரத்தில் ரூ. 7.64 லட்சம் கோடி இழப்பு!
வீடியோக்கள்

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை


