அரசுக்கு மக்கள் பலமா, பாரமா?
சமூகத்தில் நடைபெறும் அனைத்துச் சீர்கேடுகளுக்கும் அரசு மட்டுமே பொறுப்பல்ல

Center-Center-Visakhapatnam

Center-Center-Visakhapatnam
சிறப்பாக மக்களாட்சி நடைபெறும் நாட்டில் மக்கள் அறிவார்ந்த செயல்பாடுகளில் ஈடுபடக் கூடியவர்கள். அங்கு மக்களின் தலைவிதி அவர்களாலேயே நிர்ணயிக்கப்படும்; அரசால் அல்ல. அங்கு அரசு என்பது குறைவாகவும் மக்கள் செயல்பாடுகள் என்பது அதிகமாகவும் இருக்கும். அந்த நிலையில் அரசு மக்களின் முன்னெடுப்புக்கு உதவிடும் ஓர் அமைப்பு, அவ்வளவுதான்.
மக்களுக்கும், அரசை வழிநடத்தும் மக்கள் பிரதிநிதிகளுக்கும், அரசில் பணிபுரியும் பணியாளர்களுக்கும் ஒரு தொடர் கல்வி செயலில் நடந்துகொண்டே இருக்கும். அந்தக் கல்வி ஒவ்வொரு தனி மனிதரையும் பொறுப்புமிக்க மனிதராக மாற்றிவிடும்.
குடிமக்கள் பொறுப்புடன் செயல்பட செயல்பட அரசின் உருவம் குறைந்துவிடும். இந்தச் சூழலைக் கொண்டுவர கல்வி தேவைப்படுகிறது. அந்தக் கல்வியும்கூட செயலின் மூலம்தான் புகட்டப்படும். அந்தக் கல்வி கிடைக்கும் நாடுகள் உலகில் மிகக் குறைவு. அந்தக் கல்வி இல்லாத சூழலில் இன்று மக்கள் அரசுக்குப் பாரமாகவும், அரசு மக்களுக்குப் பாரமாக இருப்பதையும் உலகில் நாம் அன்றாடம் மக்கள் செயல்பாடுகளில் பார்த்து வருகிறோம்.
பொறுப்புடன் செயல்படும் சமூகம் எப்போதும் செயலில் தோய்ந்து இருக்கும். அப்படிச் செயல்படும் சமூகத்தில் அரசுக்கு கடமை மிகவும் குறைவு. சமூகம் தன்னைப் பாதுகாத்துக் கொண்டு செயல்படும்போது, அங்கு காவல் துறை தேவை இல்லை. சமூகம் ஒழுங்கீனமாகச் செயல்படும்போது அது தேவையாகிறது. பொதுமக்கள் பொறுப்புடன் அனைத்து இடங்களிலும் செயல்படும்போது அரசின் தேவை குறைகிறது. மக்கள் அரசுக்கு அஞ்ச வேண்டியதில்லை. அரசும் மக்களைப் பார்த்து அஞ்சி மக்களை அரசுத் துறைகள் மூலம் மேய்க்க வேண்டியதில்லை.
மக்கள் விழிப்புணர்வு இல்லாமல் அறியாமையில் பொறுப்பற்றுச் செயல்படும்போது எங்கும் நாம் குழப்பத்தைத்தான் நாம் பார்க்க முடியும். இந்த நிலையில்தான் அரசைப் பிடிக்கும் அரசியல் கட்சிகள், தங்கள் கட்சிகளை மேய்த்து, மக்களின் அறியாமையைப் பயன்படுத்தி அதிகாரத்தைப் பிடித்து மக்களை மேய்த்து மக்களுக்காக ஆட்சி செய்வதாகக் கூறுகின்றன. உண்மை என்பது பிரிட்டிஷார் மக்களைச் சுரண்டி செல்வத்தை நாட்டுக்கு எடுத்துச் சென்று சுகபோக வாழ்க்கை வாழ்ந்ததை இன்று நம் அரசியல் கட்சிகளின் தலைவர்களும், மக்கள் பிரதிநிதிகளும் செய்கின்றனர்.
இன்று வளமான வாழ்க்கை வாழ்பவர்கள் அரசை, அரசியலைப் புரிந்து, அதற்குள் பயணிப்பவர்கள். மற்றவர்கள் "அரசு எல்லாவற்றையும் பார்த்துக்கொள்ளும்' என அரசிடம் விட்டு விட்டு அரசுக்கு வெகு தொலைவில் நின்று தன் தலைவிதியை அரசு மாற்றும் என நம்பி வாழ்ந்து, அது மாறாத நிலையில் தங்களைத் தாங்களே நொந்து கொண்டு விரக்தியடைபவர்கள்.
கம்பெனிகள் மூலம் பொருள்களைத் தயாரித்து மக்களிடம் கொண்டு வந்து விற்பனை செய்கிறது சந்தை. அது நாம் பேசும் கைப்பேசியாக இருக்கலாம்; நாம் உபயோகப்படுத்தும் இரு சக்கர வாகனமாக இருக்கலாம்; அழகுசாதனப் பொருளாக இருக்கலாம்; எதுவாக இருந்தாலும் நம்மை ஈர்த்து வாங்க வைத்து விடுகின்றன. அது தேவையா, இல்லையா என்று பார்த்து நாம் எவரும் வாங்குவதில்லை. கடன் வாங்கியாவது வாங்க வேண்டும் என்ற ஆவலைத் தூண்டுகின்றன அத்தகைய பொருள்.
நாம் வாங்கும் பொருள்களை முறையாகப் பராமரிக்கத் தேவையான வசதிகள் நம்மிடம் இருக்கின்றனவா என்று பார்த்து வாங்குவதில்லை. வாங்கும் பொருள்களின் முழு சக்தியையும் ஆற்றலையும் பயன்படுத்தும் திறன் நம்மிடம் உள்ளதா? என்றும் பார்த்து வாங்குவதில்லை.
சந்தையில் விற்கும் எல்லாப் பொருளும் எல்லோருக்கும் தேவை இல்லை. சிலருக்கு அத்தியாவசியத் தேவை, பலருக்கு எப்போதாவது தேவைப்படுவது, சிலருக்குத் தேவையே இல்லை, இருந்தும் அதை ஆடம்பரத்துக்காக வாங்குகின்றனர். வாழ்க்கை என்பது என்ன என்று தெரிந்து எவரும் பொருள்பட வாழ்வதில்லை. நம் மக்களுக்கு சமூகமாக, மானுட வாழ்க்கையை வாழ கற்றுக்கொடுக்கவில்லை. யாரும் கற்றுக் கொள்ள வேண்டும் என்று விரும்புவதும் இல்லை. மற்றவர்போல் வாழ, மற்றவருக்காக ஆடம்பர வாழ்க்கை வாழ அனைவரும் கற்றுக்கொண்டு விட்டனர். அரசும் சந்தையை ஊக்குவிக்க, கொள்கைகளை உருவாக்கி மக்களை சந்தைக்குள் சிக்க வைத்துள்ளது. பணம் சேமிப்போரை ஊக்குவிக்கவில்லை; மாறாக செலவழிக்கத்தான் மக்களை ஊக்கப்படுத்துகிறது.
இதன் விளைவு படித்தவர், படிக்காதவர், ஏழை, பணக்காரர் என எந்த வேறுபாடும் இன்றி அனைவரையும் சந்தை மயக்கப்படுத்தி வைத்திருக்கிறது. இதன் விளைவாகத்தான் பொறுப்பற்ற தன்மையில், அறியாமையில் இன்று பெரும்பான்மை மக்கள் வாழ்கின்றார்கள். தான் உருவாக்குகிற குப்பையை வீதியில் கொட்டி அதை அரசோ, யாரோ பார்த்துக் கொள்ளட்டும் என்று தன் வீட்டின் சுத்தம் பார்க்கும் மனிதர்கள் வீதி நம் வீதி, அது நம் பொறுப்பு என்று பார்ப்பது இல்லை.
திருமணம் நடக்கிறது, நமக்கு குழந்தை வேண்டுமா? தேவை என்றால் அந்தக் குழந்தையை கருவில் எப்படி வளர்ப்பது, பிறந்த பிறகு எப்படி வளர்ப்பது என்பதை தெரிந்து எவரும் குழந்தை பெற்று வளர்ப்பதில்லை. அதற்கு வழிகாட்டும் நூல் நம்மிடம் இருக்கிறதா என்றால் இல்லை. கருவில் உள்ள குழந்தை முறையாக கர்ப்பகால கவனிப்புச் செய்யவில்லை என்றாலும், பிறந்த குழந்தையை அறிவியல்பூர்வமாக பேறுகால கவனிப்புச்
செய்யவில்லை என்றாலும் அந்தக் குழந்தை ஆரோக்கியமான குழந்தையாக சமூகத்தில் உருவாகாது; மாறாக, அவை சமூகத்துக்கு பாரமாகவே உருவாகும்.
எனவே, குழந்தை பெற்று வளர்ப்பது என்பது ஓர் அறிவியல்பூர்வ செயல். இதில் கணவன் -மனைவிக்கு மட்டுமல்ல, அந்தக் குடும்பத்துக்கு, அந்த சமூகத்துக்கு, அரசுக்கு என அனைவருக்கும் பொறுப்பு இருக்கிறது. தான் செய்ய வேண்டிய பணியை கொள்கை மூலம், திட்டத்தின் மூலம் அரசு செய்து கொண்டுதான் இருக்கிறது. ஆனால், பெற்றோரும், குடும்பமும் சமுதாயமும் அவற்றை முறையாகப் பெற்று பயன்படுத்த முடிந்ததா என்பதுதான் இன்றைய கேள்வி. சாலைகளில் நடப்பது, கார் ஓட்டுவது, இரு சக்கர வாகனம் ஓட்டுவது என்பது அத்தனையும் சாலை விதியின்படி நடக்க வேண்டும். ஆனால், அப்படி நடக்கிறதா என்பதை நம் சாலைகளில் வாகனங்கள் ஓட்டுவதைப் பார்த்தாலே எவ்வளவு குழப்பத்தில் நடைபெறுகிறது என்பது புரிந்துவிடும்.
சமூகத்தில் நடைபெறும் அனைத்துச் சீர்கேடுகளுக்கும் அரசு மட்டுமே பொறுப்பல்ல. ஆரோக்கியம் குறித்து புரிந்து "என் உடல்- என் பொறுப்பு' என்று மக்கள் செயல்பட்டால், மருத்துவமனை குறைந்துவிடும். சட்டத்தின்படி ஆட்சி என்பது, அரசுக்கு மட்டுமல்ல, பொதுமக்களுக்கும்தான்; விதிகளைப் பின்பற்றுதல் கலாசாரமாக மாறினால் காவல் துறை பெருக்கம் குறைந்துவிடும்.
"என் வாக்கு- என் உரிமை' என்ற உணர்வும், நல்ல ஆட்சி உருவாக என் வாக்கை நான் முடிவு செய்வேன், நான் விற்க மாட்டேன் என்று எண்ணி வாக்கைச் செலுத்தும் கலாசாரம் வந்துவிட்டால், ஓர் ஊழல்வாதி தேர்தலில் வெற்றி பெற முடியாது. குற்றப் பின்னணி கொண்ட ஒருவரால் வெற்றி பெற முடியாது; அப்படி புரிதலுடன் வாக்களிக்க மக்கள் ஆரம்பித்து விட்டால், எந்தக் கட்சியும் பணக்காரர்களையும், ஊழல்வாதிகளையும், குற்றப் பின்னணி கொண்டவர்களையும் வேட்பாளராக தேர்தலில் நிற்க வைக்காது. வாக்காளர் பொறுப்புடன் செயல்பட்டால் நல்ல ஆட்சி, நல்ல அரசியல் மலர்ந்து விடும்.
இன்று எங்கு பார்த்தாலும் ஒரு பொறுப்பற்ற தன்மை, ஒழுங்கற்ற செயல்பாடு, நாம் என்ன செய்ய முடியும்? என்ற அவநம்பிக்கை, அரசு பார்த்துக்கொள்ளும் என்ற அசட்டுத்தனம்}இவைதான் அனைத்து சமூக விரோதச் செயல்பாடுகளுக்கும் காரணம்; ஊழலுக்கும் லஞ்ச லாவண்யத்துக்குக் காரணம். நாம் ஒவ்வொருவரும் நம்மைச் சரி செய்யாமல் இந்தச் சூழலை மாற்ற முடியாது என்பதுதான் நிதர்சனம்.
ஒரு கல்லூரி நிகழ்வுக்காக நானும் என் நண்பர்களும் சென்னையில் புறநகர்ப் பகுதியில் வேகமாக கல்லூரியை நோக்கிச் சென்று கொண்டிருந்த போது, ஒரு முச்சந்தியில் வாகனங்கள் குவிந்து, நகர முடியாத சூழலுக்கு அனைவரும் கொண்டு வந்து விட்டனர்- இவை அனைத்துக்கும் காரணம் நாம் முந்திச் சென்றுவிட வேண்டும் என்ற நோக்கில் அனைவரும் பயணித்ததின் விளைவு. எங்கள் வாகனத்தில் இருந்த ஒருவர் அதைப் பார்த்துவிட்டு காரைவிட்டு கீழே இறங்கி எங்கோ சென்று விட்டார். சற்று நேரத்தில் வாகனங்கள் செல்ல ஆரம்பித்தன. எங்கள் வாகனமும் நகர்ந்து ஓரிடம் சென்றபோது ஒருவர் அனைத்து வாகனங்களையும் முறைப்படுத்திக் கொண்டிருந்தார். அவர்தான் எங்களுடன் வந்தவர். அவர்தான் அங்கு ஒழுங்குபடுத்திக் கொண்டிருந்தார்.
இதேபோல் மக்கள் பங்கெடுக்க, பொறுப்புடன் தொடர்ந்து செயலில் இருக்க, மக்களை இணைத்துச் செயல்பட ஒரு சமூக அமைப்பு நூறு செயல் திட்டங்களை வகுத்து கிராமங்களிலும், நகரங்களிலும் தமிழகத்தில் செயல்பட்டு வருகிறது. இந்த அமைப்பு கட்சி, ஜாதி மதங்களைக் கடந்து இந்தியக் குடிமக்களாகிய நாம் என்ன பொறுப்புகளைச் செய்ய வேண்டும்? அதை எப்படி மக்களை இணைத்துச் செயல்பட வேண்டும் என்ற வழிகாட்டுதலை அளித்து, மக்கள் சக்தியை ஒன்று திரட்டுவதில் பல வெற்றிகளைப் பெற்று செயல்படுகிற இடத்தில் மக்களுக்கு நம்பிக்கையை உருவாக்கிக் கொண்டுள்ளது. அந்த நம்பிக்கை விஸ்வரூபம் எடுக்கும் நாள் வெகு தொலைவில் இல்லை.
கட்டுரையாளர்:
பேராசிரியர்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...