பிரதமரைச் சந்திக்க தில்லி புறப்பட்டார் முதல்வர் விஜய்!பைஜுஸ் நிறுவனர் ரவீந்திரனுக்கு 6 மாதம் சிறைத் தண்டனை!பினராயி விஜயன் வீடு உள்பட 10 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை!இபிஎஸ் - எஸ்.பி. வேலுமணி அணி இணைவதாகத் தகவல்!மீண்டும் பெட்ரோல், டீசல் விலை உயர்வு! அலறும் வாகன ஓட்டிகள்..!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 640 குறைந்தது!
/

மாநிலப் பட்டியல்: சமமான கற்றல் வாய்ப்பை உறுதி செய்யும்!

கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மாற்றுவது, சமமான கற்றல் வாய்ப்பை உறுதி செய்யும் என்பது பற்றி..

News image

கற்றல் வாய்ப்பு - DPS

Updated On :27 மே 2026, 11:00 am IST

உலக நிலப்பரப்பில் சுமார் 0.74 சதவீத நிலப் பரப்புக் கொண்ட மேற்கு ஐரோப்பாவில் உலக மக்கள் தொகையில் சுமார் 2.4 சதவீத மக்கள் வாழ்கின்றனர். ஜெர்மனி, பிரான்ஸ் உள்ளிட்ட ஒன்பது மொழிவாரி நாடுகள் உள்ள ஒரு துணை கண்டமாக மேற்கு ஐரோப்பா திகழ்கிறது.

இன மற்றும் சமூக விழுமியங்களில் ஒற்றுமைக் காணப்பட்டாலும், மொழியாலும், கற்றல் முறையாலும் மேற்கு ஐரோப்பிய நாடுகள் ஒன்றுக்கு ஒன்று மாறுபாடுகிறது. அந்தந்த நாடுகள் தங்களின் மொழியை காத்துக் கொள்ளவும், மக்கள் இயல்பாக தங்களுக்கு பிறப்பு முதல் அறிமுகமான மொழியிலேயே கற்கவும், அதன் விளைவாக சமூக, பொருளாதார, அரசியல் தளங்களில் மிகப் பெரும் வளர்ச்சியை இந்த நாடுகள் பெற்றுள்ளன.

வரலாற்றில் இருந்தும், சமகால நிகழ்வுகளில் இருந்தும் கற்க மறுக்கும் சமூகமாக இந்திய சமூகம் திகழ்வது மிகப் பெரும் வேதனை. உலக நிலப்பரப்பில் சுமார் 2.4 சதவீத நிலப்பரப்புக் கொண்ட இந்தியாவில் உலக மக்கள் தொகையில் சுமார் 17 சதவீத மக்கள் வாழ்கின்றனர். மொழிவாரி தேசிய இனங்களின் ஒன்றியமாக இந்திய திகழ்கிறது.

விடுதலைக்கு பின்னர், பெரும் போராட்டமும், உயிர் தியாகமும் மொழிவாரி மாநிலங்கள் உருவாக காரணமாக அமைந்தது. தெலுங்கு மொழி பேசும் மக்களை கொண்ட ஒன்றுபட்ட ஆந்திர பிரதேசம், 1953இல் இந்தியாவின் முதல் மொழிவாரி மாநிலமாக அமையப்பெற்றது. மொழியும், கற்றல் முறையும் பண்பாட்டின் கூறுகள். பன்முகப் பண்பாட்டைக் கொண்ட இந்தியாவில் கற்றல் முறையும் வெவ்வேறாக தான் இருக்கும்.

சமமான கற்றல் வாய்ப்பை... எதை, எப்படி, யார் கற்க வேண்டும் என்பதை பன்னாட்டு நிதி மூலதனம் தீர்மானிப்பதோடு, அதை அரசின் கொள்கையாக மாற்றும் அளவிற்கு அனைத்து உத்திகளையும் வணிகச் சந்தை இந்தியாவில் வெற்றிகரமாக செய்கின்றது. மனிதர்களை நுகர்வோராகவும், கல்வி நுகர்விற்கான பொருளாகவும் பார்க்கப்படும் சூழலில், கல்வித் துறையில் அரசின் பொறுப்பையும், சமமான கற்றல் வாய்ப்பை உறுதிப்படுத்த, கல்வி தொடர்பான முடிவுகளை மேற்கொள்ள முழு அதிகாரமும் யாரிடம் இருந்தால் மக்கள் அனைவருக்கும் பயன்படும் என்று நாம் சிந்திக்க வேண்டும்.

இந்திய விடுதலைப் போராட்டக் காலத்தில் கல்வி பரவலாக்க உள்ளூர் சமூகங்களே பெரும் முயற்சி எடுத்தன. இந்தியாவின் அனைத்துப் பகுதிகளிலும் கல்வி வாய்ப்புகள் சீராக எல்லோருக்கும் கிடைத்துவிடவில்லை. தென்னிந்தியாவில் கல்விக் குறித்த விழிப்புணர்வு அதிகம் காணப்பட்டது. சுயமரியாதை உணர்வும், மிகச் சிறந்த இலக்கியங்களும் இயல்பாகவே தமிழ் பேசும் பகுதிகளில் கல்வி பரவலுக்கு வழிவகுத்தது.

கூட்டாட்சி முறைமையில்... இந்திய விடுதலைப் போராட்டக் காலத்தில் எங்கெல்லாம் மாநில அரசுகள் அமைந்ததோ, அங்கெல்லாம் கல்வி பரவலாக எல்லோருக்கும் கிடைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. விடுதலைக்குப் பின்னர், இந்திய அரசமைப்புச் சட்டத்தின் மூலம் கூட்டாட்சி முறைமையில் அரசு அமைந்தது.

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுகள் மற்றும் அனைத்து மாநிலங்களையும் ஒன்றிணைக்கும் மத்திய அரசு என்ற வகையில் இந்திய ஒன்றியம் உருவானது. மாநில அரசுக்கும், மத்திய அரசுக்கும் இறையாண்மை உண்டு. கூட்டாட்சி அடிப்படையில் இரண்டு அரசுகளுக்கு இடையிலான அதிகாரப் பகிர்வை ஏற்படுத்தியது இந்திய அரசமைப்புச் சட்டம்.

எந்தெந்த துறை, யார் யாரிடம் இருக்க வேண்டும் என்று முடிவு செய்யும் போது, ஒட்டுமொத்த இந்திய நாட்டின் பாதுகாப்பு, அந்நிய நாட்டுகளுடன் உறவு ஆகியவை உள்ளிட்ட அகில இந்திய அளவில் முடிவுகள் மேற்கொள்ள வேண்டிய துறைகள் மத்திய அரசிடம் வழங்கப்பட்டது.

மாநிலங்களிடம் ஒப்படைப்பு...

பண்பாடு சார்ந்தது மற்றும் மக்களின் உடனடி தேவைகளை பூர்த்தி செய்யும் துறைகள் மாநிலங்களிடம் வழங்கப்பட்டது. மக்களின் இன்றியமையாத உடனடி தேவை என்பதோடு, கற்றல் செயல்பாடு பண்பாட்டின் ஒரு கூறாக விளங்குவதால், கல்வி மாநிலப் பட்டியலில் இடம் பெற்றது. கல்வி மாநிலப் பட்டியலில் இருந்ததின் விளைவாக அனைவருக்கும் தொடக்கக் கல்வி வழங்க வழி செய்யும் முதல் கல்வி உரிமைச் சட்டம் 1957ஆம் ஆண்டு கேரள மாநிலத்தில் நிறைவேற்றப்பட்டு, நடைமுறைக்கு வந்தது.

அதே காலகட்டத்தில் தமிழ்நாடு (அன்று ஸ்டேட் ஆப் மெட்ராஸ்) அரசு மூன்று கிலோ மீட்டருக்கு ஒரு தொடக்கப் பள்ளி மற்றும் ஐந்து கிலோமீட்டருக்கு ஒரு உயர் நிலைப் பள்ளி திறக்கப்பட்டதோடு, உயர் கல்விக்கான கட்டமைப்பும் உருவாக்கப்பட்டது. இது போன்று பல்வேறு மாநிலங்கள் தங்களின் வாய்ப்பை பயன்படுத்தி மக்களுக்கு கல்வி வழங்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.

இந்திய அரசமைப்புச் சட்டத்தின் 42வது திருத்தத்தின் வாயிலாக 1976ஆம் ஆண்டு கல்வி மாநிலப் பட்டியலில் இருந்து ஒத்திசைவுப் பட்டியலுக்கு மாற்றப்பட்டது. ஒத்திசைவுப் பட்டியலில் வரிசை 25இல் கல்வி இடம் பெற்றிருந்தாலும், அதில் மத்திய அரசின் அதிகார எல்லை என்பது மத்தியப் பட்டியல் வரிசை 66ல் உள்ளபடி உயர் கல்வி மற்றும் உயர் ஆராய்ச்சிகளில் தரத்தை ஒருங்கிணைப்பது மட்டுமே.

தவறான புரிதலால்...

அரசமைப்புச் சட்டத்தின் எல்லைகள் தெளிவாக உள்ளபோதும், ஒத்திசைவுப் பட்டியலில் இருந்தால் இறுதி முடிவு மத்திய அரசு மட்டுமே எடுக்க முடியும் என்ற தவறான புரிதலில் மத்திய அரசு செயல்படத் தொடங்கியது. கல்வி குறித்த முடிவுகள் எடுக்கும் அதிகாரம் மாநில அரசுகளுக்கு இன்றும் உள்ளது.

மாநில அரசுகளால் இதை முழுவதுமாக புரிந்துக் கொள்ள இயலவில்லை. நீதிமன்றங்களும், இந்திய அரசமைப்புத் தன்மையை முழுவதுமாக உணராமல் பல வகையான தீர்ப்புகள் மூலம் குழப்பத்தையே விளைவித்துள்ளது.

1976ஆம் ஆண்டுக்கு பின்னர், இந்தியாவில் உள்ள பல்வேறு மாநில அரசுகள் தொடங்கிய அரசுக் கல்வி நிறுவனங்கள் மிகக் குறைவு. தனியார் நிறுவனங்களின் எண்ணிக்கை அதிகரித்தது. மத்திய அரசு மற்றும் மாநில அரசு இரண்டும் ஒத்திசைந்து கல்வி தரும் பொறுப்பை ஏற்பதற்கு பதிலாக, தனியார் கல்வி நிறுவனங்கள் தொடங்க மத்திய அரசு ஊக்கம், அனுமதியும் அளித்தது. மாநில அரசுகள் அதை எந்த தடையும் சொல்லாமல் ஆதரவைத் தெரிவித்தது.

தனியார் கல்வி நிறுவனங்கள் ஆதிக்கம்...

கல்வி ஒத்திசைவுப் பட்டியலுக்கு மாற்றப்பட்ட 1976 முதல் 2025 வரை ஐம்பது ஆண்டுகளில் தனியார் கல்வி நிறுவனங்களின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்தது. அரசு நடந்து கல்வி நிலையங்களிலும் சுயநிதிப் பாடப் பிரிவுகள் தொடங்கப்பட்டு, கல்விச் சந்தையில் அரசு தனியார் கட்டண வசூலில் சமநிலை உருவாக்கி வணிகச் சந்தையின் நலன் மட்டுமே காக்கப்பட்டு. இன்று, விண்வெளி ஆராய்ச்சியில் கோலோச்சும் இஸ்ரோ நிறுவனத்தின் விஞ்ஞானிகள் தொடங்கி, பல்வேறு துறை ஆளுமைகள், 1976ஆம் ஆண்டுக்கு முன்பாக மாநிலப் பட்டியலில் கல்வி இருந்தபோது உருவான அரசுக் கல்விக் கட்டமைப்பின் மூலம் படித்து, அந்தந்த துறைசார்ந்த ஆளுமைகளாக வளர்ந்தவர்கள். இந்திய கல்வி வரலாற்றை சரியாக மதிப்பீடு செய்தால், மாநிலப் பட்டியலில் கல்வி இருந்தபோதே, இந்திய வளர்ச்சிக்கு வித்திட்டும் பல்துறை ஆளுமைகளை உருவாக்கும் கல்விக் கட்டமைப்பு சமூகநீதியின் அடிப்படையில் உருவாக்கப்பட்டது.

இன்று கல்வித் தளத்தில் ஏற்பட்டிருக்கும் தேக்க நிலையை உடைத்து முன்னேற வேண்டும் என்றால், கல்வி மீண்டும் மாநிலப் பட்டியலுக்கு வர வேண்டும். முன்பிருந்தது போல் அல்லாமல், தரம், நிர்வாகம் ஆகியவற்றில் கொள்கை முடிவு எடுக்கவும், சட்டங்கள் இயற்றி நடைமுறைப்படுத்தும் முழு அதிகாரமும் மாநில அரசிற்கு இருக்கும் வகையில் கல்வி மாநிலப் பட்டியலில் இடம் பெற வேண்டும்.

கல்வி மாநிலப் பட்டியலில் ஏன் வர வேண்டும் என்ற விளக்கத்தை மக்கள் முன்வைத்து விவாதிக்க வேண்டும். கட்சி அரசியலைக் கடந்து, கல்வி அரசியலை முன்னெடுக்க அனைத்து அரசியல் கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும்.

மக்களிடம் உரையாடல் தொடர்ந்து நிகழ்த்துவதன் மூலம் மாநில மக்களின் ஒருமித்த குரலாக கல்வி மாநிலப் பட்டியலில் இடம் பெற வேண்டும் என்று முழக்கம் ஒலிக்கும் போது கல்வி உரிமையை மாநிலங்கள் வென்றெடுக்க முடியும்.

Summary

State List Will ensure equal learning opportunity

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.