அதிமுகவில் பல்வேறு கட்ட பேச்சுவார்தைகளுக்குப் பிறகு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, எஸ்.பி. வேலுமணி இணைவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனை உறுதிப்படுத்தும் வகையில் அதிமுக ஐடி விங் பிரிவு எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக எஸ்.பி. வேலுமணி தரப்பு எம்எல்ஏக்கள் பிரிந்து, சட்டப்பேரவையில் 25 அதிமுக எம்எல்ஏக்கள் தவெகவுக்கு ஆதரவு தெரிவித்தனர்.
இதனால் எஸ்.பி. வேலுமணி தரப்பு எம்எல்ஏக்களை பதவி நீக்கம் செய்து அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.
பின்னர் பல்வேறு அரசியல் நகர்வுகளுக்குப் பிறகு, எஸ்.பி. வேலுமணி அணியில் இருந்த ஆற்காடு எம்எல்ஏ சுகுமார், அந்தியூர் எம்எல்ஏ ஹரிபாஸ்கர் உள்பட 5 எம்எல்ஏக்கள் இபிஎஸ் தரப்புக்கு ஆதரவு தெரிவித்தனர்.
அதேபோல எஸ்.பி. வேலுமணி அணியில் இருந்த மரகதம் குமரவேல் (மதுராந்தகம்-தனி), ஜெயக்குமார் (பெருந்துறை), சத்யபாமா (தாராபுரம்-தனி), இசக்கி சுப்பையா (அம்பாசமுத்திரம்) ஆகிய 4 எம்எல்ஏக்கள் தங்கள் பதவியை ராஜிநாமா செய்து தவெகவில் இணைந்தனர். இது எஸ்.பி. வேலுமணி தரப்புக்கு பெரும் பின்னடைவாகப் பார்க்கப்பட்டது.
தொடர்ந்து இரு அணிகளும் இணைவதற்கு பேச்சுவார்த்தைகள் நடந்த நிலையில், சுமுக முடிவு எட்டப்பட உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இரு தரப்பினரும் ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர்.
இதனிடையே அதிமுகவின் ஐடி விங், இரு அணிகளும் இணைவது குறித்து எக்ஸ் பக்கத்தில்,
"எனக்கு பின்னாலும் இன்னும் எத்தனை நூற்றாண்டுகள் ஆனாலும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் மக்களுக்காகவே இயங்கும் “ - அம்மா (ஜெயலலிதா)
கோடான கோடி தொண்டர்களின் தியாகத்தால் வளர்ந்த இந்த எஃகு கோட்டையை இனி எவராலும் அசைக்க முடியாது!
இனி நமக்குள் பிரிவில்லை... இந்த எஃகு கோட்டையை தகர்க்க இனி எவருக்கும் வழியில்லை..
நம் இலக்கு ஒன்றுதான்... அது கோட்டையில் மீண்டும் நமது இரட்டை இலை கொடி பறப்பது மட்டுமே! நாளை நமதே! தமிழ்நாடும் நமதே!" என்று முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பேசிய விடியோ ஒன்றையும் இணைத்து பதிவிட்டுள்ளது.
இதனால் அதிமுகவில் இரு அணிகளும் இணைவது ஏறக்குறைய உறுதியாகியுள்ளது.
முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் வீட்டிற்குச் சென்ற கே.சி. வீரமணி, 'நாங்கள் ஒன்றாக இணைந்துவிட்டோம்' என்று கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
Summary
EPS, S.P. Velumani team joined again after several talks in ADMK
தொடர்புடையது

மின்னல் வேகத்தில் தவெக உறுப்பினர் அட்டை! இது 100% குதிரை பேரம்!
'நான்தான் எல்லாம்' என்பது கூடாது! இபிஎஸ் அழைத்தால் பேசத் தயார்! எஸ்.பி. வேலுமணி
எடப்பாடி பழனிசாமி தரப்பு எம்எல்ஏக்கள் 22 பேரை தகுதி நீக்கம் செய்ய வேண்டும்: பேரவைத் தலைவரிடம் எஸ்.பி.வேலுமணி தரப்பு வலியுறுத்தல்








