‘இப்போதைக்கு நான் அரசியலில் ஈடுபடுவதாக இல்லை; எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்பது தெரியாது’ - பதினாறு ஆண்டுகளுக்கு முன் தில்லியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியைச் சந்தித்துவிட்டு வந்த பின் அன்றைய நடிகர் விஜய் – இன்றைய தமிழக முதல்வர் சி. ஜோசப் விஜய் தெரிவித்த வரிகள்தான் இவை.
2009 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தின் பிற்பாதியில் புது தில்லிக்குத் தன்னுடைய தந்தையும் திரைப்பட இயக்குநருமான எஸ்.ஏ. சந்திரசேகருடன் சென்ற விஜய், ராகுல் காந்தியைச் சந்தித்துப் பேசினார். தொடர்ந்து, இளைஞர் காங்கிரஸில் விஜய் இணையப் போவதாகப் பரபரப்பு நிலவியது. ஆனால், இணையவில்லை.
இடையே தமிழ்நாட்டில் சில நாள்கள் சுற்றுப்பயணம் செய்த ராகுல் காந்தியும் காங்கிரஸில் விஜய் சேரலாம் என அழைப்பு விடுத்திருந்தார். இந்தப் பரபரப்பைத் தொடர்ந்து, இரு வாரங்கள் கழித்துத் தம் நிலைப்பாடு பற்றிச் சென்னையில் செய்தியாளர்களுடன் பேசினார் விஜய்.
விஜய் என்ன சொன்னார்?
என் கடமை
ஊடகங்களில் வெளிவந்த பல செய்திகளுக்கு முதலில் பதில் அளிக்கக் கடமைப்பட்டிருக்கிறேன். என் பலம் என் ரசிகர்கள்தான். அப்படிப்பட்ட ரசிகர்களை நல்ல பாதையில் வழிநடத்த வேண்டிய பொறுப்பு எனக்கு இருக்கிறது. அதனால்தான் ரசிகர் மன்றங்களை மக்கள் இயக்கமாக மாற்றி, தொடர்ந்து நலத் திட்டப் பணிகளை மேற்கொண்டு வருகிறேன்.
ராகுல் சந்திப்பு
தனிக் கட்சி தொடங்கப் போவதாகவும் ராகுல் காந்தியைச் சந்தித்த பிறகு காங்கிரஸில் சேரப் போவதாகவும் செய்திகள் வெளியாகின. ராகுல் காந்தி என்னை அழைத்துப் பேசும் அளவுக்கு நான் பெரிய ஆள் இல்லை. என் குடும்ப நண்பரும் நல விரும்பியுமான ஒருவர் மூலம் ராகுல் காந்தியை அவருடைய இல்லத்தில் சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்தது. மரியாதை நிமித்தமாகவே ராகுலைச் சந்தித்தேன்.
அவருடைய அன்பான உபசரிப்பும் எளிமையான பேச்சும் என்னை மிகவும் கவர்ந்தது. அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலராக, நாடாளுமன்றத் தேர்தலில் ராகுல் காந்தி ஆற்றிய பங்களிப்பு எந்தளவுக்கு முக்கியத்துவம் பெற்றது என்பது அனைவருக்கும் தெரியும்.
ஒரே சிந்தனை
ராகுல் காந்தியும் இளைஞர்களைக் குறிவைத்துச் செயல்பட்டு வருகிறார். நானும் இளைஞர்களைக் குறிவைத்து என் மக்கள் இயக்கத்தை நடத்தி வருகிறேன். எங்களுக்கிடையே உள்ள ஒரே சிந்தனையின் அடிப்படையில்தான் அவரைச் சந்தித்தேன். இருவரும் ஒரு மணி நேரம் பேசினோம்.
சினிமா, மக்கள் இயக்கம், பொது விஷயங்கள் எனப் பலவற்றைப் பேசினோம். ஆனால், அரசியல் பேசவில்லை. இந்தச் சந்திப்பின் மூலம் நான் ஏதோ முடிவெடுத்துவிட்டதாகத் தகவல்கள் வெளிவந்தன. ஆனால், நான் எந்த முடிவும் எடுக்கவில்லை.
ராகுலுக்கு நன்றி
தமிழ்நாட்டுக்கு வந்த ராகுல் காந்தி, நான் காங்கிரஸில் சேர்ந்தால் வரவேற்போம் எனக் கூறியிருந்தார். அதற்கு நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். காங்கிரஸ் சுதந்திரத்துக்குப் போராடிய கட்சி. காங்கிரஸின் கொள்கை எல்லாருக்கும் பிடிக்கும். ஆனால், ஒரு விஷயத்தைத் திட்டவட்டமாகத் தெரிவிக்க விரும்புகிறேன்.
அரசியல் நிலைப்பாடு
இப்போதைக்கு நான் அரசியலில் ஈடுபடுவதாக இல்லை. என் தற்போதைய இலக்கு சினிமாதான். எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்பது தெரியாது.
தமிழக மக்களுக்கும் தமிழகத்துக்கும் உலகத் தமிழர்களுக்கும் எந்த அரசு நன்மை செய்கிறதோ அந்த அரசுடன், நான் எனது ரசிகர்களுடன் எதிர்காலத்தில் கைகோத்துச் செயல்படுவேன். அது எப்போது என்பதை உறுதியாகச் சொல்ல முடியாது.
பொறுக்க மாட்டேன்
மேலும், தமிழர்களுக்கு ஒரு பிரச்சினை என்றால் பொறுத்துக் கொள்ள மாட்டேன். அதற்காகக் களத்தில் இறங்கிப் போராடுவேன்.
என்னுடைய ரசிகர்களின் கருத்தையும் தமிழக மக்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதையும் அறிந்த பிறகுதான் அரசியலில் குதிப்பது பற்றி முடிவு செய்வேன்.
உடனடியாக அரசியல்ரீதியாக நான் எந்தவொரு முடிவும் எடுக்க முடியாத நிலையில் இருக்கிறேன் என்பதைத் தெளிவாகக் கூறிக் கொள்கிறேன்.”
தன்னுடைய ரசிகர் மன்றத்தை மக்கள் இயக்கமாக மாற்றிப் புதுக்கோட்டை மற்றும் புதுச்சேரியில் விழாக்களை நடிகர் விஜய்யும் அவருடைய தந்தை எஸ்.ஏ. சந்திரசேகரும் நடத்திக்கொண்டிருந்தபோதுதான் ராகுல் காந்தியைச் சந்திப்பதற்கான அழைப்பு வந்தது. அதைத் தொடர்ந்து, புது தில்லி சென்று ராகுல் காந்தியைச் சந்தித்துப் பேசிவிட்டு வந்தனர்; காங்கிரஸில் விஜய் இணையப் போகிறார் என்ற பேச்சுகளுக்குதான் மேற்கண்டவாறு (செப். 9, 2009-ல்) பேட்டியளித்து முற்றுப்புள்ளி வைத்தார் அப்போது.
இடைப்பட்ட காலத்தில் மூன்று மக்களவைத் தேர்தல்கள் நடந்து முடிந்துவிட்டன. 2014, 2019-ல் காங்கிரஸ் தோற்றது; 2024 உறுதியாக காங்கிரஸ் வெற்றி பெறும்; ராகுல் காந்தி பிரதமராவார் என்ற எதிர்பார்ப்பு பரவலாக இருந்தது. மூன்றாவது முறையாகவும் பிரதமரானார் மோடி. எதிர்க்கட்சித் தலைவராக ராகுல் காந்தி.
ராகுல் சந்திப்பு முடிந்து ஏறத்தாழ பதினாலு ஆண்டுகளுக்குப் பிறகு கடந்த 2024 பிப். 2 ஆம் தேதி தமிழக வெற்றிக் கழகத்தைத் தொடங்கினார் விஜய். இரண்டரை ஆண்டுகளுக்குள்ளேயே தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் தனிப் பெரும் கட்சியாக வெற்றி பெற்றார். இப்போது தமிழக முதல்வர்!
இரு வாரங்களுக்கு முன் சென்னையில் நடைபெற்ற விஜய்யின் முதல்வர் பதவியேற்பு விழாவுக்கான சிறப்பு அழைப்பாளர் ராகுல் காந்தி! திமுக அணியில் போட்டியிட்டு வென்றபோதிலும் காங்கிரஸுக்கு த.வெ.க. அமைச்சரவையில் இடம்.
இப்போது – இன்று மே 27, தமிழ்நாடு முதல்வராகப் பிரதமர் நரேந்திர மோடியையும் உள்துறை அமைச்சர் அமித் ஷாவையும் சந்திக்கத் தில்லி செல்லும் முதல்வர் விஜய், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியையும் சந்திக்கவிருக்கிறார். காலந்தான் எப்படிக் கடந்தோடிக் கொண்டிருக்கிறது!
Summary
Tamil Nadu Chief Minister Vijay's meeting with Rahul Gandhi, 16 years ago and now, about time...
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
அநீதிக்கு எதிராக முஸ்லிம்கள் குரலெழுப்ப வேண்டும்: ராகுல் காந்தி

கேரள முதல்வர் பதவியேற்பு விழா: கார்கே, ராகுல் காந்தி பங்கேற்கின்றனர்!

மே 20இல் அமேதி செல்லும் ராகுல் காந்தி!

விஜய் பதவியேற்பு விழாவில் பங்கேற்கும் கார்கே, ராகுல் காந்தி!
விடியோக்கள்

சன்ரைசர்ஸ் vs ராஜஸ்தான்: எலிமினேட்டரில் களம் யாருக்குச் சாதகம்? | SRH vs RR | Klaasen |

தொண்டர்களுக்கு திருமா வைத்த வேண்டுகோள்! | VCK | DMK | TVK

5 ஆவது முறையாக உயர்ந்த Petrol விலை! புலம்பும் மக்கள்! | Oil | People's View | Petrol Price Hike



