குல்மார்க்கில் கேபிள் கார்களில் பரிதவித்த 300 சுற்றுலாப் பயணிகள் 6 மணி நேர போராட்டத்துக்குப் பின் பத்திரமாக மீட்பு!எச்.வி. ஹண்டே, எழுத்தாளர் சிவசங்கரி பத்ம ஸ்ரீ விருதை பெற்றுக்கொண்டனர் திரையரங்குகளில் பண்டிகை, விடுமுறை நாள்களில் 5 காட்சிகள்! - முதல்வர் விஜய் அறிவிப்புசிறு விவசாயிகளுக்கு ரூ. 25,000 வரையிலான கடன் தள்ளுபடி: முதல்வர் விஜய்குறு விவசாயிகளுக்கு ரூ. 50,000 வரையிலான பயிர்க் கடன்கள் தள்ளுபடி : முதல்வர் விஜய்குதிரை வேகத்தில் நடக்கும் குதிரை பேரம்! - மு.க. ஸ்டாலின் விமர்சனம்கீழ்தளத்தில் ராஜிநாமா; மேலே கட்சியில் இணைப்பு! தவெகவுக்கு இபிஎஸ் கடும் கண்டனம்!!மின்னல் வேகத்தில் தவெக உறுப்பினர் அட்டை! இது 100% குதிரை பேரம்! - அதிமுக எம்.பி., இன்பதுரை ராஜிநாமா செய்த எம்.எல்.ஏ.க்கள் முதல்வர் விஜய் உடன் சந்திப்பு!திவிஷா சர்மா வழக்கில் சிபிஐ விசாரணை - உச்ச நீதிமன்றம்அதிமுக எம்.எல்.ஏ.க்களின் ராஜிநாமா கடிதம் ஏற்பு: அவைத்தலைவர் ஜேசிடி பிரபாகர்!ராஜிநாமா செய்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மூவர் தவெகவில் ஐக்கியம்!வேலுமணி தரப்பு எம்.எல்.ஏக்கள் மூவர் ராஜிநாமா!
/

இடைவெளி குறைய வேண்டும்!

தோல்வியடைந்த அரசியல் கட்சிகள் துவண்டு போகாமல், தங்கள் தோல்விக்கான காரணங்களை ஆராய்ந்து பார்க்க வேண்டும். இந்த ஓய்வு அதற்கானதே என்று எண்ண வேண்டும்.

News image

முதல்வர் விஜய் - கோப்புப் படம்

Updated On :26 மே 2026, 2:31 am IST

தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளது. 60 ஆண்டு காலம் கோலோச்சி வந்த திராவிட இயக்கம் அகற்றப்பட்டுள்ளது. அண்மையில் தொடங்கப்பட்ட தமிழக வெற்றிக் கழகம் வெற்றி பெற்றுள்ளது. அரசியல் தெரிந்த அனைவருக்கும் இது வியப்பாக இருக்கிறது. இந்த அதிசயம் எப்படி நடந்தது என்று தெரியாமல் ஒருவரை ஒருவர் பார்த்து மெளனமாகிப் போனார்கள்.

பல தொகுதிகளில் அறிவிக்கப்பட்ட வேட்பாளர்களை அந்தப் பகுதி மக்களே அறிந்திருக்கவில்லை. ஆனால், வெற்றி பெற்று விட்டார்கள். தமிழகத்தில் பல மாவட்டங்களுக்கு அதன் தலைவர் பரப்புரைக்கே செல்லவில்லை; செல்லவும் முடியவில்லை. ஆனாலும், நான்கு முனைப் போட்டியில் 108 இடங்களைப் பெற்று முதலிடத்தைப் பிடித்து விட்டது. வாக்காளர்களுக்குப் பணம் கொடுத்த கட்சிகளையும் பின்னுக்குத் தள்ளிவிட்டது.

ஆட்சியைப் பிடிக்க இன்னும் 10 இடங்கள் தேவை என்று ஆளுநர் கூறிய போது, மக்களின் அனுதாபமும், ஆதரவும் இருமடங்கானது. காங்கிரஸ், இடதுசாரி கட்சிகள் மற்றும் விடுதலைச் சிறுத்தைகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆதரவளித்து அந்த இடைவெளியை இட்டு நிரப்பியது.

கடந்த 10.5.2026 அன்று சென்னை ஜவாஹர்லால் நேரு விளையாட்டு அரங்கில் 9 அமைச்சர்களுடன் ஜோசப் விஜய் முதலமைச்சராகப் பதவி ஏற்றார். அதுவரை ஒவ்வொரு நாளும் அரசியல் நகர்வுகள் திகில் படம் பார்ப்பது போல் இருந்தது.

மக்கள் ஒரு மாற்றத்தை விரும்பினார்கள் என்று கூறப்படுகிறது. உலகம் ஒவ்வொரு விநாடியும் மாறிக் கொண்டே யிருக்கிறது. மனிதர்களும் மாறிக் கொண்டே இருக்கின்றனர். இந்த மாற்றங்களே உலகத்தை இயக்கிக் கொண்டிருக்கிறது. இந்த மாற்றம் இல்லையென்றால் உலகம் அழிந்து போகும் என்று அறிவியல் கூறுகிறது.

அதுபோலவே மக்களாட்சியில் மாற்றமும் அமைகிறது. புதிய தலைமுறை இந்த மாற்றத்தை விரும்புகிறது என்கிறார்கள். கடந்த தலைமுறை போலவே இந்தத் தலைமுறையும் சிந்திக்க வேண்டிய அவசியம் இல்லை. ஆனால், அரசியல் அறிவுடன் சிந்திக்க வேண்டும்; செயல்பட வேண்டும். கவர்ச்சிக்கு இடம் கொடுக்காமல் கவனமாக சிந்திக்க வேண்டும்.

இந்த நிலையில்தான் இப்போது தமிழ்நாட்டில் புதிய ஆட்சி மலர்ந்திருக்கிறது. முதல்வர் ஜோசப் விஜய் எதிர்க்கட்சித் தலைவர்களைப் பார்த்து வாழ்த்து பெற்றார். இது பண்பாட்டின் அடையாளம்; அரசியல் நாகரிகத்தின் தொடர்ச்சி. "மக்களாட்சி' என்பது மக்களுக்காக மக்களே ஆட்சி செய்வதாகும்.

"வெற்றியும் தோல்வியும் வீரனுக்கு அழகு' என்பது அனுபவப் பழமொழி. வெற்றி தரும் படிப்பினையை விட தோல்வி தரும் படிப்பினையே மனித வரலாற்றை மாற்றியமைக்கும் என்பார்கள். இதனால், தோல்வியடைந்த அரசியல் கட்சிகள் துவண்டு போகாமல், தங்கள் தோல்விக்கான காரணங்களை ஆராய்ந்து பார்க்க வேண்டும். இந்த ஓய்வு அதற்கானதே என்று எண்ண வேண்டும்.

ஆளும் கட்சியாக இருந்த திமுக கல்வி, மருத்துவம், பெண்ணுரிமை, நூலகம் முதலிய தளங்களில் சாதனைகள் செய்திருப்பதை மறுப்பதற்கில்லை. பொதுவாக, நகரங்களை முன்னேற்றிய அளவுக்கு கிராமங்கள் கவனிக்கப்படவில்லை என்பதும் உண்மையே. நான்குவழிச் சாலை, ஆறுவழிச்சாலை அமைப்பதற்காக கிராமங்களும், விவசாய நிலங்களும், பாசன ஆறுகளும் முடக்கப்பட்டன.

மணல் கொள்ளை, கல்குவாரி ஆகியவற்றை ஆளும் கட்சியினரிடமிருந்து மீட்க முடியவில்லை என்ற குற்றச்சாட்டு பல காலமாக இருந்தது. காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் மற்றும் சுற்றியுள்ள 13 கிராமங்களையும் சேர்த்து 4,791 ஏக்கர் பரப்பு நிலங்களை பசுமை வழி விமான நிலையம் என்று மத்திய- மாநில அரசுகள் ஆக்கிரமித்தன.

இந்தத் திட்டத்தால் 13 கிராமங்களில் விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டாலும், ஏகனாபுரம் உள்ளிட்ட கிராமங்கள் முற்றிலும் அழியும் நிலை உருவானதால் போராட்டம் தீவிரமானது. சுமார் 2 ஆண்டுகளாக இந்தப் பகுதி மக்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தி தூக்கத்தைத் தொலைத்தனர்.

இரண்டு ஆண்டுகளாக காவிரி டெல்டா மாவட்டங்களில் ஆறு, ஏரி, குளம், குட்டைகள் ஒழுங்காகத் தூர்வாரப்படவில்லை. அறுவடை செய்யப்பட்ட நெல் மூட்டைகளை அடுக்கி வைப்பதற்குப் போதிய கிடங்குகள் கட்டப்படவில்லை.

மக்களாட்சியின் வரலாறு எங்கிருந்து தொடங்குகிறது? இங்கு வரலாறு என்பதே மன்னர்களின் வரலாறாகவே இருந்தது, இருக்கிறது. மக்களின் வரலாறுகள் எழுதப்படவில்லை. "மன்னன் உயிர்த்தே மலர்தலை உலகம்' என்பது புலவர் வாக்கு. மன்னர்கள் உயிராகவும், மக்கள் உடலாகவும் கருதிய காலம் அது. அந்தக் காலத்தில் அரசனை தெய்வமாகவே மக்கள் கருதினர். குடிமக்களின் கருத்தறிந்து அரசர்களும் ஆட்சி செய்தனர்.

இந்த நிலை கொஞ்சம் கொஞ்சமாக மாறியது. மன்னர்கள் தங்கள் விருப்பத்துக்கு ஆட்சி செய்ய ஆரம்பித்தனர். மன்னர்களின் சர்வாதிகார ஆட்சிகளைப் பார்த்து சலிப்படைந்த மக்கள் ஒரு மாற்றத்தை எதிர்பார்த்துக் காத்திருந்தனர். அந்த நாளும் வந்தது.

சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் என்னும் தாரக மந்திரத்துடன் பிரெஞ்சுப் புரட்சி மாபெரும் வெற்றி பெற்றது. அந்தப் புரட்சியின் காரணகர்த்தாக்களாக இருந்த வால்டேர், ரூசோ புதிய மக்களாட்சிக்கு வித்திட்டனர். 18-ஆம் நூற்றாண்டில் இந்தச் சிந்தனையாளர்களின் முழக்கம் மக்களைச் சிந்திக்க வைத்தது; தட்டி எழுப்பியது.

இதன் தொடர்ச்சியாக இந்தியா 200 ஆண்டுகள் பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் இருந்தது. வணிகம் செய்ய வந்தவர்கள் ஆட்சியாளர்களாக மாறினர். இவர்களை பூலித்தேவன், வீரபாண்டிய கட்டபொம்மன், மருது பாண்டியர்கள், வேலு நாச்சியார் எதிர்த்துப் போராடி தூக்குமேடை ஏறினர்.

இறுதியாக மகாத்மா காந்தி தலைமையில் சுதந்திரப் போராட்டம் தொடங்கியது. மக்களும் விடுதலை உணர்வு மேலிட்டு, தங்கள் உடல், பொருள், ஆவியை அர்ப்பணித்தனர். அந்த வீரஞ்செறிந்த போராட்டத்தின் முடிவில் நாட்டுக்கு விடுதலையும் கிடைத்தது.

சுதந்திரம் பெற்ற நாட்டில் மக்களாட்சி முறை கேள்விக்குறியை நோக்கிப் போய்க் கொண்டிருந்தது. மக்களாட்சி என்பது மக்களுக்கான ஆட்சியாக இல்லாமல் ஆளும் கட்சியின் ஆட்சியாக மாறிக் கொண்டிருக்கிறது. அரசியல் என்பதும் அர்ப்பணிப்பாக இல்லாமல் தொழிலாகவே மாறிக் கொண்டிருக்கிறது. அன்று வணிகம் செய்ய வந்தவர்கள் ஆட்சி செய்ய ஆரம்பித்தனர். இன்று ஆட்சி செய்ய வந்தவர்கள் வணிகம் செய்ய ஆரம்பித்து விட்டனர்- இதுதான் தற்போது வித்தியாசம்.

மக்களாட்சி என்பது மக்களுக்குத் தொண்டு செய்வது என்பது மாறி எப்படியாவது ஆட்சியைப் பிடித்துவிட வேண்டும் என்பதே கொள்கையாகி விட்டது. மக்களுக்குத் தொண்டு செய்து அவர்களது நன்மதிப்பைப் பெறுவது என்பதெல்லாம் இப்போது இல்லாமல் போய்விட்டது. இதனால் அரசியல்வாதிகளுக்கும், மக்களுக்கும் இடைவெளி அதிகமாகி விட்டது. இது குறைய வேண்டும்.

எப்படியாவது தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடிப்பதற்கு புதிய புதிய உத்திகளைத் தேடிப் புறப்பட்டு விட்டனர். புதிய உத்திகளை உருவாக்கித் தருவதற்கு வியூக வகுப்பாளர்களும் தயாராகி விட்டனர். மக்களை ஏமாற்றி அவர்களது வாக்குகளைப் பெற்று ஆட்சியைப் பிடித்து விட வேண்டும். அதற்கான வழிவகைகளைத் திட்டமிட்டுத் தருவதற்கும், கோடி கோடியாகக் கொட்டிக் கொடுப்பதற்கும் அரசியல் கட்சிகள் தயார். சின்ன மீனைப் போட்டு பெரிய மீனைப் பிடிக்க வேண்டும். மக்களைக் கவர்வதற்கு குறுக்கு வழிகள் காணப் புறப்பட்டு விட்டனர்.

உண்மையில் அதிகாரம் மக்களிடத்தில்தான் உள்ளது. இப்போதைக்கு அந்தப் பிரதிநிதிகளிடம், யாரைத் தேர்ந்தெடுக்கிறோமோ அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது. மக்கள் இல்லாமல் சுயேச்சையாக நாடாளுமன்றத்துக்கு அதிகாரமும் இல்லை - அது இருக்கவும் இயலாது என்று மகாத்மா காந்தியடிகள் கூறுகிறார்.

பொதுவாகத் தேர்தலில் வெற்றியும், தோல்வியும் மாறி மாறி வருவது இயற்கை. ஆளும் கட்சி எதிர்க்கட்சியாகவும், எதிர்க்கட்சி ஆளும் கட்சியாகவும் வருவதுதான் மக்களாட்சியின் மகத்துவம். நாடு சுதந்திரம் பெற்ற பிறகு காங்கிரஸ் பல காலம் நாட்டை ஆண்டது. அதனால், மக்கள் மற்றொரு கட்சிக்கு வாய்ப்பளிக்க நினைத்ததால்தான் புதிய கட்சி ஆட்சிக்கு வந்தது.

தமிழ்நாட்டைப் பொருத்தவரை 1967-இல் நடந்த பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி தோல்வியுற்று ஆட்சியை இழந்தது. அதன் பிறகு, திராவிடக் கட்சிகள் மாறி மாறி ஆண்டு வருகின்றன. இந்தக் கட்சிகளும் தேர்தலின் போது அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாமல் தவிக்கின்றன.

1967 மார்ச் 6 அன்று அண்ணாத்துரை முதல்வர் ஆனார். அந்தத் தேர்தலில் "ரூபாய்க்கு 3 படி அரிசி தருவோம்' என்னும் வாக்குறுதி மக்களைக் கவர்ந்தது; வெற்றியைத் தேடித் தந்தது. ஆனால், அதை நிறைவேற்ற முடியவில்லை. "மூன்று படி இலட்சியம், ஒரு படி நிச்சயம்' என்று அந்த வாக்குறுதி திருத்தியமைக்கப்பட்டது.

உண்மையான அரசியல் என்பது மக்களிடம் போவதும், மக்களிடம் கற்றுக் கொள்வதும், மக்களுக்கே திருப்பிச் செய்வதும் என்பது இவ்வளவு விரைவில் மறக்கப்பட்டு விட்டது. சிந்தனையாளர்கள் பல்லாண்டுகளாகப் பாடுபட்டு உருவாக்கிய அரசியல் சித்தாந்தங்கள் ஒதுக்கப்பட்டு விட்டன. காலம் எதையும் மாற்றும் என்பது உண்மைதான். மாறுதல் மட்டுமே மாறாதது என்பதும் உண்மைதான். வரலாறுகள் எப்போதும் முன்னோக்கி போக வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.