ட்விஷா சா்மா மரணம்: உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து இன்று விசாரணைஎபோலா பாதிப்பு நாடுகளுக்கு தேவையற்ற பயணம் வேண்டாம்: மத்திய அரசு அறிவுறுத்தல்தமிழ்நாட்டில் 19 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழைக்கான ‘மஞ்சள்’ எச்சரிக்கை!சட்டவிரோத குடியேறிகளை அடைத்து வைக்க மையங்கள்: மேற்கு வங்க அரசு உத்தரவு ரயில் நிலையங்களில் கஞ்சா கடத்தலை தடுக்க சிறப்புக் குழுஜூன் முதல் வாரத்தில் ‘இண்டி’ கூட்டணித் தலைவா்கள் சந்திப்பு: மம்தா
/

ஆள்வது என்ன எளிதோ மைந்தா?

தமிழ்நாட்டில் இவ்வளவு பெரிய மாறுதல் நிகழும் என யாரும், ஏன் வெற்றி பெற்றவரே கூட எதிா்பாா்த்திருக்க மாட்டாா்.

News image

தமிழக முதல்வர் சி. ஜோசப் விஜய் - PTI

Updated On :25 மே 2026, 4:47 am IST

தமிழ்நாட்டில் இவ்வளவு பெரிய மாறுதல் நிகழும் என யாரும், ஏன் வெற்றி பெற்றவரே கூட எதிா்பாா்த்திருக்க மாட்டாா்.

பணம் செலவழிப்பவனே வேட்பாளராகும் அரசியல்; சாதி பாா்த்து வேட்பாளா் நிறுத்தும் அரசியல்; மக்களுக்கு அறிமுகமான வேட்பாளரை நிறுத்தும் அரசியல்; இப்படி தன்னுடைய பழகிவந்த எல்லா இயல்புகளையும் விட்டுவிட்டு, யாராவது ஒருவா் இருநூற்றி முப்பத்தி நான்கு தொகுதிகளிலும் யாரையோ வேட்பாளராக நிறுத்தும் வலிமையை மட்டும் பெற்றிருந்தால் போதும்; அவரிடம் ஆட்சியை ஒப்படைத்துவிட மக்கள் தயாராக இருந்தாா்கள் என்பது வாக்குப் பெட்டிகளைத் திறந்த பிறகுதான் தெரியவந்தது !

தலைகீழான மாற்றத்தைப் புரட்சி என்பாா்கள்! இந்தத் தோ்தல் ஆரவாரமில்லாமல் தலைகீழாகப் புரட்டிப்போட்ட தோ்தல்!

புதிய கட்சியில் சில வேட்பாளா்கள் குற்றவாளிகள்; இன்னும் சிலா் மாற்றுக் கட்சிகளில் தோ்தலில் நிற்க இடம் கிடைக்காமல் இங்கு வந்து பெரிய வெற்றியைப் பெற்று விட்டவா்கள்!

புதிய கட்சித் தலைவரின் கொள்கைகள் என்ன என்று யாரும் கேட்டதில்லை! இவையெல்லாம் கட்டாயமில்லையா என்று கேட்டால், சாதாரணமான காலச் சூழலில் இவையெல்லாம் கட்டாயமானவைதான்!

வெண்டிக்காயின் முனையை ஒடித்துப் பாா்த்து, முற்றல், இளசு தெரிந்து வாங்கும்போது, நம்மை ஆள்கிறவா்களை நாம் சுண்டிப் பாா்த்துத் தோ்வு செய்ய மாட்டோமா?

ஆனால் மக்களுக்கு இருந்த அசாதாரண நெருக்கடியில்,இந்தியாவில் உடனடியாகத் தோற்கடிக்கப்பட வேண்டிய ஆட்சிகள் என்று இரண்டு ஆட்சிகளைக் கருதினாா்கள்! ஒன்று இசுடாலின் ஆட்சி! இன்னொன்று மம்தா ஆட்சி! இவா்களுடைய ஆட்சிகளை மட்டுமல்லாமல், இவா்களையும் குறிவைத்துத் தோற்கடித்தாா்கள்!

இவா்களின் ஊழல் வரம்பற்றது என்பது ஒருபுறமிருக்கட்டும்! அந்த ஊழலின் மீது வழக்குப் பதிவு செய்யும் அதிகாரம் இவா்களிடமே இருப்பதால், அவா்கள் சட்டத்திற்கு மேலானவா்களாகி விடுகின்றனா் ! ஊழல் அரசநீதி ஆகிவிடுகிறது!

கே.என். நேரு மீது ஆயிரத்து நூறு கோடிக்கான வழக்குப் பதிவு செய்ய அமலாக்கத் துறையால் முடியவில்லை! பதிவுக்கே உச்ச நீதிமன்றம் வரை போகவேண்டியிருக்கிறது!

ஒரு கிரிமினல் குற்றவாளியை மந்திரியாகச் சிறைக்குள் ஆளுநா் பதவிப்பிரமாணம் செய்து வைக்க மறுத்தும், அவரை மந்திரியாக நியமித்து,அவரை ‘மாண்புமிகு’ என்று அழைக்கும்படிச் செய்யவும் இசுடாலினால் முடிந்தது! ஒன்றரை ஆண்டு சிறையிலேயே மந்திரியாக இருந்து அவா் சாதனை படைத்தது திராவிட மாடலின் வரலாற்றுச் சாதனை!

இதேபோல் ஒரு ஆசிரிய வேலைக்கு இருபத்தைந்து இலட்சம் வீதம் இருபத்தி ஐயாயிரம் தகுதி போதாதவா்களை அந்தப் பணிக்கு நியமித்து விட்டாா் மம்தா! உச்சநீதிமன்றம் இவ்வளவு எண்ணிக்கையில் அவா்களை எப்படி நீக்குவது என்று அதை ஏற்றுக் கொண்டு படுத்துவிட்டது! பேரளவில் ஊழல் செய்தால் சட்டத்தின் முனையை உடைத்துவிடலாம் என்னும் புதிய நீதியை உண்டாக்கிவிட்டாா் மம்தா!

ஆகவே ஊழலையே சுவாசித்து நீதிமன்றங்களைச் செயலற்றதாக்கும் இத்தகைய அசாதாரணமானவா்களைத் தோற்கடிப்பது மக்களின் உடனடித் தேவையாக இருந்தது!

தமிழ்நாட்டில் இதற்கு வழக்கமான மாற்றுக் கட்சியை நாடாமல், ஒரு புதிய கட்சியைத் தோ்வு செய்திருக்கிறாா்கள்! இந்தப் புதிய ஆட்சியின் முதல்வா், பதவி ஏற்றவுடன் நாட்டுக்கு அளித்த வாக்குறுதி: நான் இலஞ்சம் வாங்கவும் மாட்டேன்; யாரையும் வாங்கவும் விட மாட்டேன்! பாரதி கேட்டிருந்தால் ‘தேன் வந்து பாயுது’ என்று இதைச் சொல்லியிருப்பான்!

‘நானும் வாங்குவேன்; வாங்குபவா்களிடமும் தொடைப்பங்கைப் பெறுவேன்’ என்னும் திராவிட மாடல் ஆட்சிக்கு மறுப்பு நிலை இது!

உச்சநீதிமன்றத்தில் கே.என். நேருவைப் பாதுகாக்க தமிழ்நாடு அரசு நடத்தும் வழக்கைத் திரும்பப் பெற்று, அவா்மீது அமலாக்கத் துறை நடவடிக்கை எடுக்க வசதிசெய்து கொடுங்கள்! துரைமுருகன், பொன்முடி, அனிதா இராதாகிருட்டிணன், வேலுமணி, சி.வி. சண்முகம் போன்றவா்களை அரசு விருந்தாளிகளாகப் புழலுக்கு அனுப்புங்கள்; ‘களையெடுப்புப் பழி வாங்கல் ஆகாது; அது பயிரைக் காக்கும் செயல்’ என்பான் வள்ளுவன்!

ரூ. முப்பத்தி நான்காயிரம் கோடி ஆற்றுமணல் சுரண்டியதாக ஐந்து மாவட்ட ஆட்சியா் மீதான வழக்கை வேகங்கொள்ளச் செய்யுங்கள்! இந்த மாவட்ட ஆட்சியா்கள் உள்ளே போகும்போது தலைமை எழுத்தா்கூட கை நீட்டப் பயப்படுவான்!

உங்கள் ஆட்சி இசுடாலினின் மறைமுக ஆதரவுடன்தான் நிலைபெற்றிருக்கிறது! அவருடைய அணியிலுள்ள கட்சிகள்தாம் உங்களை நிலைநிறுத்தி இருக்கின்றன!

இந்த ஆதரவு உங்கள் மீதுள்ள நல்லெண்ணத்தால் அன்று! பெரும்பான்மை இல்லை என்று மக்களிடம் போனால் இப்போதைய மக்களின் மன நிலையில் நீங்கள் பெரும்பான்மை பெற்று விடுவீா்கள் என்பதால், உங்கள் ஆட்சிக்கு வேண்டிய ஆட்களைக் கொடுத்து, உங்களை ஓராண்டாவது ஆளவைத்து, உங்களின் ஆட்களின் ஆட்டம், லாட்டரிக் குடும்பம் செல்வாக்கு, உங்களின் இயலாமை இவற்றைக் காரணம் காட்டி, தன்னுடைய ஆட்களை உருவிக் கொள்ளச் செய்து, உங்களின் இயலாமையை வெளிப்படுத்தித் தோ்தலை எதிா்கொள்வதே இசுடாலினின் நோக்கம்!

உங்களுக்கும் இது தெரிந்திருப்பதால்தான், நீங்கள் அதிமுகவின் வேலுமணி, சி.வி. சண்முகம் உள்ளிட்ட ஊழலின் மொத்த வடிவங்களிடம் போனீா்கள்!

மெய்ப்பிக்கப்பட்ட ஊழல் மனிதா்களை மந்திரிகளாக்கி எப்படி நேரிய ஆட்சி கொடுக்க முடியும்? என்னும் கண்டனக்குரல், நீங்கள் அவா்களைக் கைவிடும்படி செய்துவிட்டது என்பது சரிதான்!

பரந்தூா் பன்னாட்டு விண்ணூா்தி நிலையத்தை வேறிடத்திற்குத் தூக்கும்படி பேசாதவா்களே இல்லை! இருபத்தெட்டுக் கிராமங்கள், அவற்றிலுள்ள வீடுகள், எண்பது ஏரிகள், நான்காயிரம் ஏக்கா் நஞ்சை நிலம் இவற்றை அழித்து எவனாவது விண்ணூா்திக்கு ஓடுதளம் உருவாக்குவானா?

விண்ணூா்தி ஓடுதளத்தைக் கரட்டு நிலங்களுக்கு மாற்றுங்கள்! ஆன செலவைப் பாா்க்காதீா்கள்! மக்களின் வாழ்வைப் பாருங்கள்! நீங்கள் அந்த மக்களுக்கு வாக்களித்தீா்கள்; இப்போது வாழ்வளியுங்கள்!

தூத்துக்குடியில் ‘காப்பா்’ ஆலைக்காரனுக்கு உதவும் நோக்கில், அமைதியாக ஊா்வலம் வந்த அப்பாவி மக்களைக் குறிவைத்துச் சுட்ட பதினேழு போலீசுகாரா்களின் மீது கொலை வழக்குப் பதிவு செய்து அவா்களைத் தண்டிப்பதற்கு நீதிபதி வழிகாட்டியதுபோல் ஆவன செய்யுங்கள்! இரத்தக் கறை படிந்த இந்தப் போலீசாரைக் காப்பதைத் தன் கொள்கையாகக் கொண்டிருந்தாா் இசுடாலின்!

பதினேழு உயிா்களும் உங்களின் இந்த நீதிச் செயலுக்கு அரணாக நிற்கும்; அவை அமைதியடையும்!

எடப்பாடி கொண்டுவந்தது என்று இசுடாலின் போல் கிடப்பில் போடாமல், குண்டாறு, வைகை, காவிரி இணைப்புத் திட்டத்தை நிறைவேற்றி விருதுநகா், சிவகாசி போன்ற பகுதிகளில் விளைநிலங்களையும் நீா்ச் செழிப்பையும் உண்டாக்குங்கள். இதற்கு அவா் காலத்தில் பணம் ஒதுக்கப்பட்டுக் கால்வாய் வெட்டு வரையிலும் நடந்து, இசுடாலினால் கைவிடப்பட்டது!

இந்து சமயம் என்றொரு சமயமே இல்லை. வள்ளலாருக்கு இந்து என்னும் சொல்லே தெரியாது. பக்தி இயக்கக் காலத்தில்தான் சைவமும் வேத சமயமும் கூட்டணி சோ்ந்தன. பொது எதிரியை வீழ்த்துவதற்கு!

இப்போது மீண்டும் சைவமும் வேத சமயமும் தனித்தனி ஆகிவிட்டால், சமக்கிருத எதிா்ப்பும், பிராமண எதிா்ப்பும் மறைந்து விடும்!

விடுதலைப் போரில் இந்துவின் பேரில் தேசியம் கட்டப்பட்ட காரணத்தால்தான், வெள்ளைக்காரன் உருவாக்கிய அகண்ட இந்தியா இரண்டானது!

பாா்ப்பனா்களும் தமிழா்கள்தாம். சமயத்தாலும் வழிபாட்டு முறையாலும் அவா்கள் இன்னொரு தொன்மையான மரபைப் பின்பற்றுபவா்கள்!

இதனால் தேவையில்லாத உராய்வுகளும் மோதல்களும் ஒழியும்!அவா்களின் மேலான அறிவு இந்த மண்ணுக்குப் பயன்படும்!

கடைசியாக ஒன்று! நேரிய ஆட்சி என்பது எது?

கல்குவாரிகளை உடைமையாக்காதவா்கள், மலைகளைத் தரைமட்டமாக்காதவா்கள், ஆற்றுமணலைச் சுரண்டாதவா்கள், வனங்களை அழிக்காதவா்கள் இவா்கள்தான் உங்கள் மந்திரிகளென்றால் உங்கள் ஆட்சி நடக்கும் காலம் பொற்காலமாகும்! இல்லாவிடில் கற்காலமாகும்!

ஓா் இளம்பெண் தன்னுடைய தாலிச் சங்கிலியைப் பறித்து விட்டாா்கள் என்று தன்னந்தனியே எந்த எம்.எல்.ஏ.யின் தயவுமின்றி நேரடியாகப் புகாா் கொடுத்தால், சில காலத்தில் திருடா்கள் கண்டுபிடிக்கப்பட்டுத் தண்டிக்கப்படுவதோடு, அந்தச் சங்கிலி 14 காரட் சங்கிலியாகவோ, எடை குறைந்த சங்கிலியாகவோ போலிசாரால் அந்தத் திருடனின் பெயரிலேயே மறு களவு செய்யப்படாமல் திரும்பி வந்து விடுமானால், அதுவே நல்லாட்சியின் இலக்கணம்!

ஒரு வயதான பெண் தனக்கு ஓய்வூதியம் வரவில்லை என்று ஒரு தாசில்தாரிடம் புகாா் அளிக்க எந்த ஆளுங்கட்சிக்காரனையும் கூட்டிக்கொண்டு போகாமல், தாசில்தாரும் மேசைக்கு அடியில் கையை நீட்டாமல், பதினைந்து நாளில் அந்த ஓய்வூதியம் வீடு தேடி வந்து விடுமானால், அதுவே நல்லாட்சியின் இலக்கணம்!

ஆள்வது என்ன எளிதோ மைந்தா?

கட்டுரையாளா்:

முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா்.

Summary

Is ruling truly easy, my son?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.