சித்ரூபன்
சுந்தரேசன் வேட்டியில் சற்று கிழிந்த பகுதி வெளியே தெரியாதவாறு மறைத்துக் கட்டிக் கொண்டார். அந்த இளைஞன் ஆங்காங்கே கிழிந்திருந்த ஜீன்ஸ் பேன்ட்டை விரும்பி அணிந்து கொண்டான். அவர் நீண்ட தலைமுடியை அவிழ்த்து குடுமியை இறுக்கமாக முடிந்து கொண்டார். அவன் கேசத்தை 'பன்' வடிவில் சுருட்டி ரப்பர் பேண்ட் போட்டுக் கொண்டான். வயோதிகர் 'ஹியரிங் எய்ட்' இயந்திரத்தைச் செவிகளில் பொருத்திக் கொண்டார். இளைஞன் 'ப்ளூ-டூத் இயர் பட்ஸை' இரண்டு காதிலும் செருகிக் கொண்டான்.
இருவரும் தத்தமது வீட்டிலிருந்து கிளம்பி அம்பத்தூர் திருவேங்கட நகர் பூங்காவில் நடைப்பயிற்சிக்காக நுழைந்தனர். பார்க்கின் உள்ளே ஈசான மூலையிலிருந்த சிமென்ட் பெஞ்ச் அருகில் இரண்டு தலைமுறைகளும் சந்தித்துக் கொண்டன.
'ஹேப்பி நியூ இயர் அங்கிள்... எப்படி இருக்கீங்க?' என்று கை குலுக்கினான் அந்த யுவன். தன்னுடைய அப்பா சாயலில் இருப்பதால், அவனுக்கு சுந்தரேசன் மீது ஒருவிதமான வாஞ்சை.
'புத்தாண்டு வாழ்த்துகள். புது வருஷத்துல இன்னிக்குத்தான் பார்க்கறோம் இல்ல...'
அவருக்கும் முதல் சந்திப்பிலேயே அவ்விளைஞனைப் பிடித்திருந்தது. 'கொஞ்ச நாளா உன்னைக் காணோமே?'
'எக்ஸாம்க்குப் படிச்சிட்டிருந்தேன். அதனால வரமுடியலை...'
'உன்கிட்ட ஒண்ணு கேக்கணும்னு நினைச்சேன்.' என்றவாறே சிமென்ட் இருக்கையில் அமர்ந்த சுந்தரேசனின் நெருக்கத்தில் அவனும் உட்கார்ந்தான்.
'இந்த வாட்ஸப்புல தெனமும் வர்ற மெúஸஜ், படங்கள் எல்லாம் அடுத்த நாள் தானாவே மறைஞ்சு போற மாதிரி சில பேர் வெச்சிருக்காங்களே... எனக்கும் அப்படிச் செஞ்சு குடேன்...' என்று மொபைலை நீட்டினார்.
'அந்த 'டைமர்' செட் பண்ணிட்டா முக்கியமான தகவல்களும் காணாமப் போயிடும் அங்கிள்... பரவாயில்லையா?'
'இதுக்கு மேல வாழ்க்கையில எனக்கு எதுவுமே பிரதானம் இல்லப்பா...' என்றார் வெறுமையாக. அறுபத்தாறு வயசாயிடுச்சு. வியாதி வந்து படுக்காம போய்ச் சேரணும். அது ஒண்ணுதான் பாக்கி!'
'யாராவது அவங்களோட விலாசம், அக்கவுன்ட் நம்பர்... இந்த மாதிரி எதாவது அனுப்பியிருப்பாங்க. எல்லாமே மறைஞ்சுடும்...'
'எனக்குத் தேவையானது எல்லாம் உடனே இங்க பதிவாயிடும்' என்று தலையைக் காண்பித்தார் சுந்தரேசன்.
'அந்தக் காலத்துல டன்லப் ஃபேக்டரில நான்
டெலிபோன் ஆபரேட்டரா இருந்தப்போ... நூற்றுக்கணக்கான ஆளுங்க, ஆபீஸ்... எல்லாரோட நம்பரும் மனப்பாடமா தெரியும்.'
'சூப்பர் அங்கிள்...'
'வேலையிலயிருந்து ரிடையரான பிறகு அம்மன் கோயில்ல குருக்களா இருந்தேன். வழக்கமா அர்ச்சனை பண்ண வர்றவங்களோட பேரு, கோத்ரம், நட்சத்திரம் எல்லாத்தையும் ஞாபகத்துலருந்தே சொல்லுவேன்.'
'கம்ப்யூட்டரை விட உங்க மெமரி அதிகமா இருக்கும் போல...'
'அது எனக்கு வரம் இல்ல... சாபம். இப்போ பழைய விஷயங்களை மறக்க முடியாம தவிக்கிறேன். பொதுவா வயசானவங்களுக்கு அல்ஸைமர் வியாதியினால பழசெல்லாம் மறந்துடும்னு சொல்வாங்க. எனக்கு என்னடான்னா அந்தக் காலத்து சமாசாரங்கள் எல்லாம் பசுமையா நினைவுல இருக்கு.'
'இந்தாங்க...' என்றவாறே அவருடைய செல்போனைத் திருப்பிக் கொடுத்தான். 'இனிமே உங்களுக்கு வர்ற ஃபார்வேர்ட்ஸ், ஆடியோ, போட்டோ எல்லாம் இருபத்து நாலு மணி நேரத்துக்குப் பிறகு தானாவே அழிஞ்சுடும்.'
'தேங்க்ஸ்' என்றார் சுந்தரேசன். 'வீட்டுல 'டெஸ்க்டாப்' வெச்சிருக்கேன். கூகுள்ல அடிக்கடி 'ஸ்டோரேஜ் ஃபுல்'னு எச்சரிக்கை வந்துட்டேயிருக்கு...'
'உங்க சிஸ்டம்ல தேவையில்லாத பழைய ஃபைல்ஸ், வீடியோ எல்லாத்தையும் டெலீட் பண்ணிடுங்க. நிறைய 'ஸ்பேஸ்' கிடைக்கும்' என்ற வாலிபன் அதற்கான வழிமுறையை விளக்கினான்.
'சரிப்பா... அப்படியே செஞ்சுடறேன்' என்றார். 'நாம இந்த பார்க்ல அடிக்கடி மீட் பண்றோம். ஆனா, உன்னைப் பத்தி நான் எதுவுமே கேட்டதில்லை. வீடு எங்கே? அப்பாம்மா என்ன பண்றாங்க?'
'வீடு பக்கத்துலதான். அம்மாவோட இருக்கேன். நான் படிச்சது எல்லாம் இங்கதான்..' என்று கிழக்குத் திசையைக் காண்பித்தான். 'எங்கப்பா அம்பத்தூர் எஸ்டேட்டுல வேலை பார்த்துட்டிருந்தாரு...'
'நீ என்ன செய்யறே?'
'ஆடிட்டர்கிட்ட வொர்க் பண்றேன். அம்பத்தூர் ஓ.டி. பக்கத்துல ஆபீஸ்...'
'அப்படியா... என் ஃப்ளாட் இந்தத் தெருவுலயே தான் இருக்கு.'
அந்த சமயம் அவனுடைய கைப்பேசி ஒலிக்கவே, 'ஒரு நிமிஷம் அங்கிள்...' என்றவாறு பேசிக்கொண்டே நகர்ந்து செல்ல, சுந்தரேசன் நடைப்பயிற்சியைத் தொடர ஆரம்பித்தார்.
மனித மனம் போல அங்குமிங்குமாக அல்லாடும் ஊஞ்சல், புத்தாண்டுத் தீர்மானத்திற்காக பாய் விரித்து யோகாசனம் செய்பவர்கள், வாழ்வின் ஏற்ற இறக்கங்களைப் பிரதிபலிக்கும் 'ஸீ-ஸா' கருவி, பூத்துக் குலுங்கும் பெயர் தெரியாத செடி கொடிகள், பங்குச் சந்தைக் குறியீட்டை நினைவுறுத்தும் சறுக்கு மரம், எஜமானர்களை இழுத்துக் கொண்டு வாக்கிங் செல்லும் நாய்கள் என்று பூங்காவில் எல்லாவற்றையும் அவதானித்துக் கொண்டே சென்றார்.
சுந்தரேசனைப் பார்த்து, 'குட்மார்னிங்.' என்று சிரித்தபடியே ஒருவர் அரை டிராயருடன் எதிர்ப்புறமாக நடந்து செல்ல, இவர் முகத்தில் எந்தச் சலனமுமின்றி கடந்து போனார்.
தொலைபேசி உரையாடலை முடித்துவிட்டு வந்த இளைஞன், ' என்ன அங்கிள்... யாரோ விஷ் பண்ணாங்க... உங்க ஃப்ரெண்டா?' என்றான்.
'கம்பெனியில என் கூட சூப்பர்வைஸரா வேலை பண்ணவரு. அந்தாளைக் கண்டாலே எனக்குப் பிடிக்காது.' என்றார் வெறுப்பாக.
'எதாவது பிரச்னையா?'
'அது பழைய கதை. எங்க ஆபீஸ்ல மீனாட்சின்னு ஒரு பொண்ணு இருந்தாங்க. ரொம்ப அழகு. நாங்க ஒருத்தரை ஒருத்தர் நேசிக்க ஆரம்பிச்சோம். கல்யாணம் பண்ணிக்கிற எல்லைக்குப் போயிட்டோம். இந்த ஆளு இல்லாததையும் பொல்லாததையும் சொல்லி அவ மனசை கலைச்சுட்டார்...'
'ஏன் அப்படிப் பண்ணாரு?'
'இவருக்கு ரொம்ப நாளாவே மீனாட்சி மேல ஒரு கண்ணு. அடைய முடியலைங்கற ஏக்கம், பொறாமை. ஒரு நாள் கேன்டீன்ல என்னைப் பத்தி தரக்குறைவா அவங்ககிட்ட பேசினதை என் காதால கேட்டேன். அவங்களும் என்ன ஏதுன்னு தீர விசாரிக்காம வேற ஒருத்தரைக் கல்யாணம் பண்ணிட்டு வேலையை விட்டே நின்னுட்டாங்க...'
கேட்டுக் கொண்டே வந்த இளைஞன் அவருடைய நடைக்கு ஏற்றவாறு தன் வேகத்தைக் குறைத்துக்கொண்டான்.
'இன்னொரு பொண்ணு கூட என் வாழ்க்கையைப் பகிர்ந்துக்க இஷ்டமில்லை. பிரம்மச்சாரியாவே இருந்துட்டேன். அன்னிக்கு இந்தாளு சொன்ன வார்த்தைகள் என் மனசுல ஆழமாப் பதிஞ்சிடுத்து...'
'இது எப்பவோ நடந்ததுதானே?'
'ஆமா... எத்தனை காலம் ஆனாலும் சிலரோட பேச்சை மறக்க முடியாதுப்பா. 'நாவினால் சுட்ட வடு'ன்னு திருவள்ளுவரே சொல்லியிருக்கார். ரொம்ப வருஷத்துக்குப் பிறகு பார்க்ல இந்த மனுஷனைப் பாக்கும் போதெல்லாம் அந்தச் சம்பவம் ஞாபகத்துக்கு வருது.' என்றவாறே புங்கை மரத்தடியில் நிழலுக்காக ஒதுங்கினார் சுந்தரேசன்.
'சரி அங்கிள். கொஞ்சம் ரெஸ்ட் எடுங்க. நான் ரெண்டு ரவுண்ட் சுத்திட்டு வரேன்.' என்று துரித நடையைத் தொடர்ந்தான் அந்த யுவன்.
ஒரு அடுக்ககத்தின் தரைத்தளத்தில் வசிக்கும் சுந்தரேசன் காலண்டரில் முந்தைய தினத்தின் தாளைப் பிசிறில்லாமல் கிழித்து தொட்டியில் வீசினார். டிசம்பரில் தனக்கு வந்த தபால்களையும், முடிந்துபோன கல்யாணப் பத்திரிகைகளையும், குப்பையோடு சேர்த்தார். சென்ற வாரம் மருத்துவமனையில் ரத்தக்கொதிப்புச் சிகிச்சைக்குப் பணம் கட்டின ரசீதையும், மருந்தக பில்களையும் கசக்கி எறிந்தார். ஃப்ரிட்ஜில் இருந்து காலாவதியான மாத்திரைகளைத் தூக்கிப் போட்டார். அவ்வப்போது பழங்குப்பைகள் எதுவும் வீட்டில் சேராமல் பார்த்துக் கொள்வது அவர் வழக்கம்.
கடந்த இரண்டு மாதங்களாக வாங்கிய செய்தித்தாள்களையும், பத்திரிகைகளையும் பழைய பேப்பர் கடையில் போடுவதற்காகப் பையில் திணித்தார். சிறியதாகிப் போன தனது உடைகளை அபார்ட்மென்ட்ஸ் காவலாளிக்குக் கொடுக்கலாமென்று அதையும் எடுத்துக் கொண்டு வாசல் நோக்கிச் சென்றார்.
மாடியிலிருந்து இறங்கி வந்த ஃபிளாட் உரிமையாளர், சுந்தரேசனைப் பார்த்து, 'ஹலோ...' என்று புன்னகைத்தார். இவர் காதில் விழாத மாதிரி பார்வையை வேறுபக்கம் திருப்பிக் கொண்டார். ஏழெட்டு வருடங்களுக்கு முன்னர் நடந்த அசோஸியேஷன் பிரச்னையில் இருவருக்கும் மனத்தாங்கல் ஏற்பட்டது. குடித்தனக்காரர்களைத் தனக்கெதிராகத் தூண்டிவிட்டதனால் அவரிடமும் முகம் கொடுத்துப் பேசுவதில்லை.
சுந்தரேசன் மிகவும் மென்மையான விஷயங்களுக்குக் கூடச் சுருங்கிப் போய் விடுவார். அந்தச் சுபாவத்தினால் அவர் மனதில் சில நபர்கள் மீது விரோதம் படர்ந்து விடுகிறது. எப்பொழுதோ நடந்த சம்பவங்களை மறக்க முடியாமல், சம்பந்தப்பட்டவர்களை மன்னிக்க மனமில்லாமல் தவித்துக் கொண்டிருந்தார்.
தன்னைச் சொற்களாலும் செயல்களாலும் காயப்
படுத்திய உறவினர், நண்பர்கள், அக்கம்பக்கத்தார் மீதான பகைமையை ஆண்டுக்கணக்கில் தக்க வைத்துக் கொண்டிருந்தார். அந்த மனிதர்கள் பின்னர் சகஜமாகப் பழகினாலும், தன்னுடைய மனத்தடைகளிலிருந்து சுந்தரேசனால் மீள முடியவில்லை. அதுவே அவருடைய இயல்பு என்றாகிப் போனது.
கட்டடத்தின் பிரதான வாயிலில் அவர் கொடுத்த பழைய சட்டைகளைப் பெற்றுக்கொண்ட வாட்ச்மேன், 'தேங்க்ஸ், சார்!' என்றான்.
'தேவையில்லாத சாமான்கள் கொஞ்சம் இருக்கு. அப்புறமா தரேன். எல்லாத்தையும் கொளுத்திடு' என்ற சுந்தரேசன் கையில் பையுடன் சோழம்பேடு சாலையிலுள்ள காயலான் கடை நோக்கிச் செல்ல ஆரம்பித்தார்.
அடுத்த ஞாயிற்றுக்கிழமை காலை வழக்கம் போல பூங்காவில் நடைப்பயிற்சி மேற்கொண்டிருந்த சுந்தரேசனின் கண்கள் அந்த இளைஞனைத் தேடின. தனக்கும் காலாகாலத்தில் திருமணமாகி ஒரு மகன் பிறந்திருந்தால் இப்போது ஏறத்தாழ இளைஞனை வயதிருக்கலாம் என்று எண்ணிக்கொண்டார்.
அம்பத்தூர் ஸ்டேஷன் மார்க்கமாகச் செல்லும் ரயில் வண்டிகளின் ஓசை அவ்வப்போது காதில் விழுந்தது. பார்க்கின் பின்புறம் உள்ள மகப்பேறு மருத்துவமனையில் குழந்தைகளின் அழுகை சப்தம் ராக
மாலிகையாகக் கேட்டது.
'ஹாய் அங்கிள்...' என்ற குரலால் திரும்பிப் பார்த்தார். அவ்விளைஞன் சிரித்தபடியே சுந்தரேசனை நெருங்கினான்.
'வாப்பா... வாரத்துக்கு ஒரு முறைதான் உன்னைப் பார்க்க முடியுது...'
'தெனமும் வரணும்னு ஆசைதான். 'ஸிஏ' பண்ணிட்டிருக்கேன். அதுக்கே நேரம் சரியா இருக்கு.'
'அது சரி, வாட்ஸப்ல ஏதோ ஸ்டேட்டஸ் போட்டிருந்தியே, 'மிஸ் யூ டாட்'னு... உன் ஜாடையில ஒருத்தரோட படமும் இருந்தது.'
'ஆமா அங்கிள்... இன்னிக்கு எங்கப்பா நினைவு நாள்.'
'எப்போ காலமானாரு?'
'நாலு வருஷத்துக்கு முன்னாடி ஆக்ஸிடென்ட்ல போயிட்டார்.'
'அடக்கடவுளே... என்னாச்சு?' என்றவாறே நடக்கும் பாதையிலிருந்து விலகி அரச மரத்தின் கீழ் நின்றார் சுந்தரேசன்.
'அன்னிக்கு காலையில அம்பத்தூர் ஓ.டி. பஸ் ஸ்டாப்கிட்ட பஸ்சை பிடிக்க ரோடை கிராஸ் பண்ணாரு. அப்போ டாக்ஸி மோதி அங்கேயே இறந்துட்டாரு...'
'ஐயயோ... அந்த கார்காரனைப் பிடிச்சீங்களா?'
'ம்... டிராபிக் கான்ஸ்டபிள் வந்து கேஸ் புக் பண்ணார். ஸ்டேஷன்ல அந்த டிரைவர் எங்ககிட்ட கெஞ்சினான். 'உங்கப்பா திடீர்னு குறுக்கால வந்துட்டாரு. சடேன் பிரேக் போட்டும் பிரயோசனம் இல்ல. கோர்ட்டு, வழக்குன்னு போனா என் எதிர்காலம் பாழாயிடும். லைசென்ஸை பிடுங்கிடுவாங்க. டிராவல்ஸ் கம்பெனியில எனக்கு வேலை போயிடும். என்னை நம்பி பொண்டாட்டியும் ரெண்டு புள்ளைங்களும் இருக்காங்க'ன்னு அழுதான்...'
'அப்புறம்... என்னாச்சு?'
'எங்களுக்கு பரிதாபமா இருந்தது. யோசிச்சுப் பார்த்தோம். எங்கப்பாவோட தலைவிதி அன்னிக்கு சாகணும்னு இருக்கு. பாவம் அவன் என்ன பண்ணுவான். மன்னிச்சு விட்டுடலாம்னு அம்மா சொன்னாங்க. எனக்கும் சரின்னு தோணிச்சு. அதனால போலீஸ் கம்ப்ளெய்ன்ட்டை வாபஸ் வாங்கிட்டேன்...'
'அந்தாள்கிட்ட நஷ்ட ஈடு ஏதாவது கேட்டீங்களா?'
'பணத்தை வெச்சுட்டு என்ன பண்ணப் போறோம் அங்கிள்... போன அப்பாவை திரும்பி வாங்க முடியுமா?'
'அது வேற விஷயம்ப்பா...'
'எங்கம்மா தமிழ் ஆசிரியர். எதுக்கெடுத்தாலும் ஒரு திருக்குறளை உதாரணம் காட்டிப் பேசுவாங்க. அந்தச் சமயத்துல கூட, 'பொறுத்தல் இறப்பினை என்றும்'னு ஆரம்பிக்கற ஏதோ ஒண்ணைச் சொல்லி மனசை தேத்திட்டாங்க. அது எனக்கு முழுசா தெரியலை. நமக்குக் கெடுதல் செஞ்சவங்க மேல இருக்கற கோபத்தை மறந்து அவங்களை மன்னிச்சுடணும்னு அதுக்கு அர்த்தம் சொன்னாங்க...'
'கிரேட்!' என்று அவன் தோளில் தட்டிக்கொடுத்தவாறே நடக்கத் தொடங்கினார்.
அவனது வயதுக்கு மீறிய பக்குவமான வார்த்தைகளும், முதிர்ச்சியான செயல்களும் சுந்தரேசன் மனதில் பலமான தாக்கத்தை ஏற்படுத்தின. அற்ப காரணங்களுக்காக வருடக்கணக்கில் சிலர் மீது காழ்ப்புணர்ச்சியைத் தேக்கி வைத்திருக்கும் தன்னையும், தந்தையின் மறைவுக்கே காரணமான ஒருவனை மன்னித்து விட்ட அந்த வாலிபனையும் ஒப்பிட்டுக் கொண்டே சென்றார். இறைவன் அவன் வடிவில் தனக்கு உபதேசித்ததாகத் தோன்றியது. தன்னிடம் மண்டிக்கிடக்கும் கோபதாபங்களையும், வன்மத்தையும் எரித்து விடத் தீர்மானித்தார்.
'திடீரென்று ஞாபகம் வந்தவராய் பல மாசங்களா உன்னை இங்க பார்க்கறேன். இதுவரைக்கும் உன் பேரைக் கேட்கணும்னு தோணவேயில்ல...' என்றார்.
'சாமிநாதன் அங்கிள்' என்றான் அவன்.
பொருத்தமான பெயர்தான் என்றெண்ணிக் கொண்டார். அவருடைய குலதெய்வக் கோயிலான திருவேரகம் நினைவுக்கு வந்தது.
அப்போது தன்னுடன் 'டன்லப்'பில் பணிபுரிந்த மேற்பார்வையாளர் 'ஜாக்கிங்' செய்தவாறே எதிரில் வருவதைக் கண்டதும் சுந்தரேசன் புன்னகைக்கத் தொடங்கினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
ஜெய்சங்கர் - நான் சந்தித்த பிரபலங்கள் - 58
ஸ்ரீதர் - நான் சந்தித்த பிரபலங்கள் - 56

கொட்டாவி விடும்போது மூளையில் என்ன நடக்கும்? ஓர் அதிர்ச்சி ரிப்போர்ட்!
பச்சைப்பட்டு பரிவட்டம்
விடியோக்கள்

கோவை சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொ**! என்ன நடந்தது? ஐ.ஜி. பேட்டி | Kovai girl case

டிராகன் க்ளிம்ப்ஸ் விடியோ வெளியீடு!

வலசை பறவைகள்... பயிற்சி பெற்ற வனத்துறையினர் | Kodiyakkarai Bird Sanctuary | Forest officers| Bird researcher


