தமிழக அமைச்சரவையில் காங்கிரஸ்: மகிழ்ச்சி அளிக்கிறது - ப.சிதம்பரம்அமைச்சரவையில் எந்தத் துறை அளித்தாலும் மகிழ்ச்சி: கிரிஷ் சோடங்கர்தமிழக அமைச்சரவையில் காங்கிரஸ்: அரசியல் நிகழ்வு அல்ல, உணர்வு! - மாணிக்கம் தாகூர்நீர்நிலைகளில் வண்டல் மண் எடுத்துச்செல்ல விவசாயிகளுக்கு அனுமதி!தவெக அமைச்சரவையில் காங்கிரஸின் ராஜேஷ் குமார், விஸ்வநாதனுக்கு அமைச்சர் பதவி! டிஜிபி வெங்கடராமன் உள்பட 15 ஐபிஎஸ் அதிகாரிகள் மாற்றம்!கேரளத்தில் சில்வர் லைன் அதிவேக ரயில் வழித்தட திட்டம் ரத்து தமிழகத்தின் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டை தாண்டி வெப்பநிலை பதிவு!
/

ஊழல் ஒழிப்பு - தொலைநோக்கு கடமை!

இது எந்த உழைப்பும் இல்லாமல், எந்தத் தொழிலும் செய்யாமல் அரசியல் அதிகாரத்தால் மட்டுமே சேர்க்கப்படும் திருட்டுப் பணம்.

News image
Updated On :20 மே 2026, 3:37 am IST

இது எந்த உழைப்பும் இல்லாமல், எந்தத் தொழிலும் செய்யாமல் அரசியல் அதிகாரத்தால் மட்டுமே சேர்க்கப்படும் திருட்டுப் பணம். வேறுவகையில் சொல்வதென்றால், ஓர் அட்டையானது உடலில் ஒட்டிக் கொண்டு, மனித ரத்தத்தை விருப்பம் போல உறிஞ்சிக் குடித்து முடிப்பதைப் போன்ற ஒரு ரகசிய செயல்பாடு. இந்த மனித அட்டைகள் குவித்த பணத்தின் அளவை யாராலும் அளவிட்டுக் கூற முடியாது. அதை நினைத்தால் தலை சுற்றுகிறது. மயங்கி விழுந்து விடுவோமோ என்ற எண்ணம் வந்து விடுகிறது. ஒருக்கால் இதன் மதிப்பு அரசு சொத்தின், மொத்த மதிப்பை விட கூடுதலாக கூட இருக்கக் கூடும்.

ஊழலும் லஞ்சமும் ஒரு பெரும் திருட்டு. பல ஆண்டுகளாக கண்ணுக்கு தெரியாமல், இந்தத் திருட்டு விநாடிக்கு விநாடி நடைபெற்று வருகிறது. சிறு திருட்டு, கண்டுபிடிக்கப்படுகிறது. பெருந்திருட்டு யாருடைய கவனத்துக்கும் வராமலேயே அரண்மனைகளால் மூடி மறைக்கப்பட்டு விடுகின்றன. இது குற்றம் என்று அனைவருக்கும் தெரிகிறது. இதை பொதுவெளியில், பேசுவற்கு ஆள்கள் இல்லை; மேடை இல்லை; விவாதம் இல்லை. ஆனால், இந்த ஊழலை மையப்படுத்தித்தான் இன்றைய தேர்தல் அரசியல் சென்று கொண்டிருக்கிறது.

ஊழல், லஞ்சம், என்பது பிறர் உழைப்பை திருடுதல் என்பதை, உலகில் பல நாடுகள் ஏற்றுக் கொண்டு அவற்றுக்கு எதிரான கடும் சட்டங்களை உருவாக்கியுள்ளன. இதை நமது நாட்டில் அவ்வளவாக பொருட்படுத்துவது இல்லை. சீனாவில் அரசு நிதியை அதிக அளவில் கையாடல் செய்தாலோ, பெரிய அளவில் லஞ்ச புகார்களின் சிக்கிக் கொண்டாலோ அவர்கள் எவ்வளவு செல்வாக்குப் பெற்றிருந்தாலும் அது குறித்து கவலை கொள்வதில்லை. அவர்களது சொத்துகள் அனைத்தும் பறிமுதல் செய்யப்படுகின்றன. மரண தண்டனை வரை, பல்வேறு தண்டனைகள் அவர்களுக்கு வழங்கப்படுகின்றன.

சீன ராணுவ வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில் அண்மையில் ஒரு தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இரண்டு முன்னாள் பாதுகாப்பு அமைச்சர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இதை நமது நாட்டில் கற்பனை செய்துகூடப் பார்க்க முடியுமா? இவர்கள் லஞ்சம் பெற்றதாகக் குற்றஞ்சாட்டப்பட்டு, இடைநீக்கத்துடன் கூடிய மரண தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

உலகில் மிகக் குறைவான ஊழலை கொண்டிருக்கக் கூடிய நாடு சிங்கப்பூர். இங்கு குறைந்த அளவில் லஞ்சம் பெற்றாலும், ஐந்து முதல் ஏழு ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை. ஐக்கிய அரபு அமீரகம் ஊழல் செய்பவர்களுக்கு கடுமையான தண்டனையை வழங்குகிறது. அமெரிக்காவில் நிறுவனங்கள் செய்யும் ஊழலுக்கு 20 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்கப்படுகிறது. வியத்நாம், இந்தோனேஷியா போன்ற நாடுகளில் ஊழல் செய்பவர்களுக்கு மரண தண்டனை வழங்கும் சட்டமும் அமலில் உள்ளது.

எப்போதுமே பெருச்சாளிகள் தின்று அழித்ததைவிட சேதப்படுத்தியவை மிகவும் கூடுதலாகவே இருக்கும். இவை ஜனநாயகக் கட்டுமானத்தையே ஓட்டை போட்டு, அழகிய ஜனநாயக மாளிகையில் பல்வேறு பதுங்குக் குழிகளை அமைத்து வைத்திருக்கின்றன. நமது நாட்டின் அரசு அலுவலகங்களில் திரும்பிய இடமெல்லாம் பெருச்சாளிகளுக்கு பாதுகாப்பான பதுங்கு குழிகள்.

ஊழலும், லஞ்சமும் ஏற்படுத்தியுள்ள சமூக விளைவுகளை கூர்ந்து நோக்க வேண்டும். இது வெறும் பண இழப்பு மட்டுமல்ல. இது மானுடத்தின் பெரும் துயரம். எத்தனை கோடி மக்களுக்கு, நிம்மதியற்ற மன நிலையைக் கொடுத்து விடுகிறது. மன விரக்தியையும், சோர்வையும் தந்து விடுகிறது. சுதந்திர இந்தியாவுக்கு பேரழிவு ஊழல், லஞ்சத்திலிருந்துதான் தொடங்கியிருக்க வேண்டும். இதையெல்லாம் நான் இங்கு குறிப்பிடுவதற்கு ஒரு காரணம் உண்டு.

புதிதாகப் பொறுப்பேற்றுள்ள விஜய் அரசியலுக்கு தமிழக வாக்காளர்களில் 1.72 கோடி பேர் வாக்களித்திருக்கிறார்கள். இவர்களில் பெரும்பான்மையினருக்கு வேட்பாளர் யார் என்று தெரியாது. அவர்களுடைய தகுதி என்னவென்று தெரியாது. அவர்கள் என்ன செய்யப் போகிறார்கள் என்பதைப் பற்றி எல்லாம் யோசித்துப் பார்க்கவில்லை. ஒரு மாற்றம் வேண்டும்; ஊழலற்ற ஒரு ஜனநாயக வாழ்க்கை வேண்டும் என்பதற்கான தீராத வேட்கையுடன் வாக்களித்திருக்கிறார்கள்.

நான் அறிந்தவரை, ஒடுக்கப்பட்டவர்கள், எந்த வசதியும் இல்லாத சாதாரண எளியவர்கள் அதிக எண்ணிக்கையில் கொண்ட சட்டப்பேரவையாக இது அமைந்திருக்கிறது. வசதியில்லாத ஒருவரால் சட்டப்பேரவைக்கு வரமுடியும் என்ற நிலை உருவாகியிருக்கிறது. இதற்கு முன்னர் இத்தகைய ஒரு நிலை தமிழக ஜனநாயகத்தில் நிகழ்ந்ததே இல்லை. இந்திய அரசியலில் மற்ற மாநிலங்களிலும்கூட நடந்திருக்க வாய்ப்பில்லை. மக்களின் வாக்களிப்பில், இந்தத் தலைகீழ் மாற்றத்துக்குக் காரணம் என்ன?

மற்ற காரணங்களைவிட, தேர்தல் அரசியலால் சமூகத்தில் வளர்ந்துள்ள தீமைகள்தான் அடிப்படை காரணமாகத் தெரிகிறது. இதில் ஏழை மக்களின் கோபம் முக்கியமானது. இது ஒரு சமூக கோபம். உலகில் நிகழ்ந்த புரட்சிகள் அனைத்துக்கும் இந்த சமூகக் கோபம் ஓர் அடிப்படைக் காரணம் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். இதை இனம் கண்டு கொள்வது எளிதானதல்ல. இது நேரம் பார்த்து, காத்திருந்து சில மாயங்களை நிகழ்த்திக் காட்டி விடுகிறது. கடந்தகால மக்களின் இந்த வரலாற்றைப் புதிதாக பொறுப்பேற்றுள்ள இன்றைய அரசு கணக்கில் கொள்ள வேண்டும்.

அரசியலில் நேர்மை என்பது உடலின் உயிரைப் போன்றது. இன்றைய அரசியல் அனைவரையும் நடைப்பிணமாக்கிக் கொண்டிருக்கிறது. பொதுவாக அதிகாரங்கள், எப்படியோ குற்றப் பின்னணிகளுடன் சம்பந்தப்பட்டிருக்கிறது. மக்களுடன் சம்பந்தப்பட்டதாக இல்லை. மக்களுக்குப் பொறுப்பானவர்கள் என்ற அடிப்படையான எண்ணம் இப்போது தேர்ந்தெடுக்கப்பட்ட ஒவ்வொருவருக்கும் ஏற்பட வேண்டும். ஆட்சிப் பொறுப்பை ஏற்கும் அமைச்சர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்கள் தங்களின் சொத்துகளைப் பகிரங்கமாக அறிவித்து,. "அரசியல் அதிகாரத்தில் நான் சொத்து சேர்க்கவில்லை' என்பதை அடிக்கடி மக்களுக்கு தெரிவிக்க வேண்டும்.

இதைப் போல, நமது அரசு இயந்திரம், சில நூற்றாண்டுகளுக்கு முன்பு பிரிட்டிஷ் ஆட்சியில் உருவாக்கப்பட்டவை. இதில் பல மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன என்பது உண்மைதான். ஆனால், அதன் ஊழலும், அதிகார திமிரும் இன்னமும் அதிலிருந்து போகாமல் அப்படியே இருந்து கொண்டே இருக்கிறது. அதிகாரிகள் செய்யும் தவறுகள் ஓர் அரசின் உயர் நோக்கங்களை எங்கோ ஒரு படுகுழியில் கொண்டு போய் தள்ளிவிடுகிறது. தனிமனித ஆணவப் போட்டி, திரைமறைவு சூழ்ச்சி, ஆட்சியாளர்களை மக்களைப் பார்க்க விடாமல் கண்கட்டி வைக்கும் தந்திரங்கள் கோட்டைக்குள் கொடிகட்டிப் பறக்கிறது. புதிய அரசுக்கு இது குறித்த சரியான கவனம் வேண்டும்.

இயற்கை வளங்களில் நடைபெறும் கொள்ளைதான் அரசியலில் அதிர்ச்சி தரும் கொள்ளை. இதில் ஆற்று மணலில் மட்டும் ஆண்டுக்கு ரூ. 10,000 கோடி முதல் ரூ. 20,000 கோடி வரை கொள்ளை நடைபெறலாம் என்று பல்வேறு விவரங்கள் கிடைத்துள்ளன. கல்குவாரிகளால் ஏற்படும் வருவாய் இழப்பு இதை விடவும் கூடுதலாகத் தெரிகிறது. இந்த பணக் குவியலை மீட்டெடுத்தால், கடனிலிருந்து மீளமுடியும். தமிழ் மக்களின் வாழ்க்கையில் எத்தனையோ வியத்தகு முன்னேற்றங்களைச் செய்ய முடியும். இதை உத்தரவில் நிறைவேற்றும் செயலாக நான் கருதவில்லை. இதற்கு ஒரு குறிப்பிட்ட காலம் தேவைப்படும். ஆனால், அரசு இந்த தொலைநோக்கு கடமையை உடனடியாகச் செய்ய வேண்டும்.

சாலைகள், பாலங்கள், கட்டடங்கள், பேருந்துகள் என்று எதிலும் தரம் இல்லை. இந்தத் தரமற்ற செயல்பாட்டுக்கான பின்புலத்தை ஆராய்ந்து பார்க்க வேண்டும். இதிலுள்ள கூட்டுக் கொள்ளை யாராலும் கண்டறிந்து கொள்ள முடியாத நரித் தந்திரங்களைக் கொண்டது. இதில் நமக்கு கிடைக்கும் தகவல்கள் பெரும் அதிர்ச்சியைத் தருவதாகவே இருக்கிறது.

ஒப்பந்தத் தொகையில் 30% முதல் 40% முன்பணமாக பெற்றுக் கொண்டு விடுகிறார்கள். நிழல் உலகம் ஒன்று, இதை ஒருங்கிணைத்து அமைச்சர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்கள் என்று அனைவருக்கும் லஞ்சத் தொகையை நேர்மையுடன் பிரித்துக் கொடுத்து விடுவதாகக் கூறப்படுகிறது. இதில் நேர்மை மிகுந்த அரசியல்வாதிகள், அரசு உயர் அதிகாரிகள் படும்பாடு பெரும் திண்டாட்டமாகி விடுகிறது. இதனால், மனம் பாதிக்கப்பட்ட பலரை நான் அறிவேன்.

ஆட்சி அதிகார கோட்டைகளில் கட்டப்படும் கட்டுமானங்கள், பல நேரங்களில் விலை போய்விடுகிறது. மக்கள் கட்டுமானங்கள் என்றுமே, அப்படி இருப்பது இல்லை. மக்களின் சிவில் சமூக செயல்பாடுகளில் ஆட்சியாளர்கள் நம்பிக்கை வைக்க வேண்டும். இதற்கு ஸ்விட்சர்லாந்து நாட்டை மிகச் சிறந்த எடுத்துக்காட்டாக கூற முடியும். அரசை முழுமையாகக் கண்காணிக்கும் முழு உரிமையையும் அந்த நாட்டு அரசமைப்புச் சட்டம் அந்த மக்களுக்கு வழங்கியுள்ளது.

இன்றைய அரசுக்கு ஊழலையும் லஞ்சத்தையும் எதிர்கொள்வது ஒரு புயலை, சுனாமியை எதிர்கொள்வதைப் போன்ற நெருக்கடியாகக்கூட இருக்கலாம். ஆனால், மக்கள் ஒரு மகா சமுத்திரம். அவர்களால் எந்த சுனாமியையும் புயலையும் அமைதிப்படுத்திவிட முடியும். ஆனால், அவர்களை இருளில் வைத்திருக்கக் கூடாது. அவர்கள் இருக்கும் இடத்தில் வெளிச்சத்தைப் பொருத்தி வைக்க வேண்டும். அந்த வெளிச்சம், சமூக விழிப்புணர்வும், பங்கேற்பு ஜனநாயகமும் ஆகும். அதற்கான புறச் சூழலை புதிய அரசு உருவாக்கித் தரும் என்று நம்புகிறேன்.

கட்டுரையாளர்:

மூத்த தலைவர்,

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.