சிபிஎஸ்இ 12-ஆம் வகுப்பு விடைத்தாள் மறுமதிப்பீடுக்கு 56,000 விண்ணப்பங்கள்புதிய இயக்கம்: நாளை அறிவிக்கிறாா் அண்ணாமலைஇந்தியா உள்பட 54 நாடுகள் மீது 12.5% கூடுதல் வரி: அமெரிக்க வரித்தக பிரதிநிதி பரிந்துரைதமிழகத்தில் இன்று பள்ளிகள் திறப்பு: முதல் நாளிலேயே பாடநூல்கள் விநியோகிக்க உத்தரவுமத்திய அரசின் கோதுமை கொள்முதல் 3.5 கோடி டன்னாக அதிகரிப்புஇலங்கை மாணவா்களுக்கு இந்தியா கல்வி உதவித் தொகைகடந்த 2025-26 நிதியாண்டில் அதானி குழுமம் ரூ.1.53 லட்சம் கோடி மூலதன முதலீடுவாக்குப் பதிவு அதிகரிப்பு மக்களின் நம்பிக்கையின் அடையாளம்: தலைமைத் தோ்தல் ஆணையா்15 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் எச்சரிக்கைஜூன் 5-இல் தமிழக அமைச்சரவைக் கூட்டம்!
/

ஆகச் சிறந்த குழந்தைகளை உருவாக்குவோம்!

செல்லம் கொடுத்து அவர்களைக் கெடுக்காமல் எதையும் சரியான விகிதத்தில் கொடுக்க வேண்டும்.

News image

கோப்புப்படம் - EPS

Updated On :4 ஜூன் 2026, 6:05 am IST

நம் பேரக்குழந்தைகள், நம்மை விட அதிபுத்திசாலிகளாக இருக்கிறார்கள். அவர்களுடைய அறிவுத்திறன் முந்தைய தலைமுறைகளைவிட எப்படி மாறுபட்டு உள்ளது என்பது இன்று உலக அளவில் விவாதிக்கப்படும் முக்கியமான ஒன்று. கடந்த இருபதாம் நூற்றாண்டு முழுவதும், ஒவ்வொரு புதிய தலைமுறைக்கும் சராசரி ஐ.க்யூ. புள்ளிகள் அதிகரித்துக்கொண்டே வந்தன. இதற்கு நல்ல ஊட்டச்சத்து, மேம்பட்ட கல்வி மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சி ஆகியவை காரணமாக கூறப்பட்டது. நம் காலத்தில், பள்ளிப் படிப்பைத் தவிர வேறு எதையும் கற்றுக்கொள்ள ஆர்வமோ, வசதியோ, வாய்ப்போ இருந்தது இல்லை. மதிப்பெண்களுக்காக பெற்றோர் நம்மை நெருக்கவில்லை. தேர்வுகள் நம்மை பயமுறுத்தியது இல்லை. நம் பெற்றோருக்கு எத்தகைய பதற்றமும் மன அழுத்தமும் இருந்தது இல்லை.

நாம் இயல்பாக நம் போக்கிலேயே வளர்ந்தோம். உணவு, உடை, கல்வி என எதற்கும் அவர்கள் அலட்டிக் கொண்டதில்லை. ஒரு வீட்டில் நான்கு அல்லது ஐந்து குழந்தைகள் இருந்த காரணத்தால் எந்த ஒரு குழந்தையின் மீதும் தனிப்பட்ட கவனமோ, கூடுதல் அக்கறையோ காட்டியதில்லை. கூட்டுக் குடும்பத்தில் வளர்ந்தோம். வசதி படைத்தவர்களின் வீட்டுப் பிள்ளைகள் மட்டுமே இசை, நடனம் என்று கற்றுக் கொண்டார்கள். அது குறித்து பிற பெற்றோர் அலட்டிக் கொண்டதில்லை; பொறாமைப் பட்டதில்லை.

குழந்தை வளர்ப்பு சுமையாக இருந்தது இல்லை. தற்போது, குழந்தைகள் படிப்புடன் பல்வேறு கலைகளையும் கற்றுக் கொள்கிறார்கள். நண்பரின் குழந்தைகளுக்கு, பத்து மற்றும் ஒன்பது வயது. படிப்பில் படுசுட்டி. ஹிந்தியில் பிரவீன் தேர்வை எழுதப் போகிறார்கள். பாட்டு, கராத்தே பிரெüன் பெல்ட், அபாகஸ், யோகா என்று பலவற்றையும் கற்றுக் கொண்டு வருகிறார்கள். நம்மை விட இக்கால குழந்தைகள் பல்துறை வித்தகர்களாக இருக்கிறார்கள். நாம் ஒரே ஒரு பட்டம் பெற்றுவிட்டு அதுவே சாதனை என்று செம்மாந்து இருக்க, இந்தக் குட்டிகள் சகலகலா வல்லவர்களாக இருக்கிறார்கள். அவர்களின் அறிவின் பரப்பும், வீச்சும் அதிகம். எதையும் எளிதாகக் கற்றுக் கொள்கிறார்கள்.

குழந்தைகளின் தொழில்நுட்ப அறிவும், கைப்பேசியை இவர்கள் கையாளும் திறனும், நமக்கு வியப்பைத் தருகிறது. இவர்கள் திரையை வேடிக்கை பார்க்கும் நுகர்வோராக இல்லாமல் அதைத் தங்கள் விருப்பப்படி இயக்கும் வல்லுநர்களாக மாறி விட்டார்கள். புதிய செயலிகளை தாங்களே பதிவிறக்கம் செய்து கொள்கிறார்கள். புதிய அறிதிறன் பேசியை எப்படி இயக்குவது என்பதை சில நிமிஷங்களில் கண்டறிந்து விடுகிறார்கள். சில குழந்தைகள் தாங்களே யூடியூபில் எதையாவது பதிவேற்றுகிறார்கள். தங்களுக்கென சேனல்கூட வைத்துள்ளார்கள்.

இரண்டு வயது குழந்தைகள்கூட யூடியூபில் தனக்குப் பிடித்த கார்ட்டூனை தேடி எடுத்துப் பார்க்கிறார்கள். எதை அழுத்த வேண்டும் என்று அவர்கள் தெரிந்து வைத்திருக்கிறார்கள். நாம் பேட்டர்ன் அல்லது பாஸ்வேர்ட் வைத்துக் கொண்டால்கூட அதைக் கூர்ந்து கவனித்து எடுத்து விட்டு விடுகிறார்கள். பள்ளிப் பாடத்திட்டங்களும் அவர்கள் வயதுக்கு அதிகம்தான் என்றாலும் படித்து விடுகிறார்கள். இக்கால ஐந்தாம் வகுப்பு குழந்தைக்கு அக்காலப் பட்டதாரிகளால் சொல்லிக் கொடுக்க முடியாது. அவ்வளவு கடினமாக இருக்கிறது.

பள்ளித் தேர்வுகளுக்கும் படித்துக் கொண்டு பல்வேறு கலைகளையும் கற்றுக்கொண்டு கைப்பேசியிலும் கேம்ஸ் விளையாடிக் கொண்டு சர்க்கஸ்காரர்கள் போல் பேலன்ஸ் பண்ணுகிறார்கள். இந்தப் பிள்ளைகளின் அறிவு வளர்ச்சி முந்தைய தலைமுறைகளைவிட மிக வேகமாகவும் முற்றிலும் மாறுபட்ட பரிமாணத்திலும் உள்ளது. இத்தகைய சுட்டித்தனமும் கெட்டிக்காரத்தனமும் கொண்ட இந்த தலைமுறை குழந்தைகளை கண்ணாடிப் பாத்திரத்தைக் கையாள்வதைப்போல மிகவும் கவனத்துடன் கையாள வேண்டும்.

நாம் பெற்றோர்களுக்கு பயந்து வளர்ந்தோம். நமக்கு என்ன ஆசை?, என்ன விருப்பம்? என்பதையெல்லாம் பெற்றோர் தெரிந்து கொண்டதே இல்லை. நமக்கும் கேட்கத் தெரியவில்லை. அப்பா என்ற ஆளுமைக்குப் பயந்தே வாழப் பழக்கினாள் அம்மா. தற்போது பயமின்றி வளர்கிறார்கள். பெற்றோருடன் வாதாடுகிறார்கள்; மறுத்துப் பேசுகிறார்கள்; எதிர்க்கிறார்கள். காரணம், வீட்டுக்கு ஒன்று அல்லது இரண்டு குழந்தைகள் மட்டுமே இருப்பதால் செல்லமும் கவனிப்பும் அதிகம். நாம் பத்து வயதில் அரசியலைக் கண்டோமா? தேர்தலைக் கண்டோமா? இன்று இத்தனை விவரமாக இருக்கிறார்கள். பத்து வயது பையன் 234 தொகுதிகள் என்று சொல்லுகிறான். இத்தனை புத்தி கூர்மையும், திறமையும், நேர்வழியிலும், ஆக்கபூர்வமான வழியிலும் செல்ல வேண்டுமென்பதில் பெரியவர்கள் கவனத்துடன் இருக்க வேண்டும். இக்காலக் குழந்தைகளிடம் "குழந்தைமை' இல்லை. முதிர்ச்சி இருக்கிறது.

இவர்களின் அபாரமான ஆற்றல் தவறான அல்லது பயனற்ற வழிகளில் சிதறவிடாமல் அதை நெறிப்படுத்தி ஆக்கபூர்வமான அறவழியில் செலுத்தினால் ஆகச்சிறந்த ஒழுக்கமான அறிவார்ந்த சமூகம் உருவாகும்.

அண்மைக்காலமாக, உறவினர் மற்றும் நண்பர்கள் வீட்டு குழந்தைகள் சிலரின் போக்கைக் கண்டு விசனம் ஏற்படுகிறது. தான் நினைத்தது உடனே நடக்க வேண்டும், கேட்டது உடனே கிடைக்க வேண்டுமென்ற பிடிவாதம் அதிகரித்துள்ளது. எதற்கும் பொறுமை கிடையாது. சட்டென சலித்துக் கொள்கிறார்கள். அவர்கள் பார்க்க விரும்பும் இடம், உடுத்தும் உடை, உண்ணும் உணவு என அனைத்திலும் அவர்களின் அடமும் பிடிவாதமும்தான் வெற்றி பெறுகிறது. பெரியவர்கள் சொல் அம்பலம் ஏறுவதில்லை. பிள்ளைகள் ஆட்டுவிக்கும் பொம்மைகளாக பெற்றோர்கள் மாறிவிட்டார்கள்.

உணவகங்களிலும், கடைகளிலும்கூட அவர்களின் தேர்வே ஏற்றுக்கொள்ளப்படுகிறது. உணவகங்களில், ஆர்டர் போட்டு விடுகிறார்கள். சாப்பிட முடியவில்லை என்றால் மீதியை பேக் பண்ணி வாங்கி வருகிறார்கள். வீட்டுக்கு வந்து அதைச் சாப்பிடுவதில்லை; வீசி எறிகிறார்கள். உணவு வீணாவது குறித்துக் கவலைப்படுவதில்லை. இன்னொரு சம்பவம்} சாலையில் ஒரு ஆட்டோவில், தாயும் அவளின் சிறு பெண்ணும் பயணம் செய்து கொண்டிருந்தார்கள். குளிர்பானத்தைக் குடித்து விட்டு அந்தக் குடுவையை அச்சிறுமி ஆட்டோவில் இருந்து வெளியே வீச அது இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த ஒருவரின் முகத்தை தாக்க, அவர் நிலைகுலைந்து வண்டியுடன் கீழே விழுந்துவிட்டார். ஆட்டோ போய்விட்டது. அந்தச் சிறுமியின் பொறுப்பற்ற செயலை அந்தத் தாய் கண்டித்தாரா என்பது தெரியவில்லை.

நண்பரின் பேரன் பத்தாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தான். அவன் விருப்பப்படிதான் அந்த வீடு இயங்கும்.

எதிலும் அவன் முடிவே இறுதியாக இருக்கும். அவனை "படி' என்று யாரும் சொல்லக்கூடாது. கோபப்படுவான். எந்நேரமும் கைப்பேசியிலேயே மூழ்கி இருப்பான். அது சலித்துப் போனால் கொஞ்சம் பாடம் படிப்பான். இறுதித் தேர்வின் போதும் அவன் மாறவில்லை. மதிப்பெண்கள் அதற்கு ஏற்ற மாதிரிதான் வந்தது. "படி' என்று சொல்லப் பயப்படும் பெற்றோர் எப்படி கண்டிப்பார்கள்? தாத்தா} பாட்டி வீட்டுக்கு முன்பெல்லாம் கதை கேட்க வருவார்கள். தற்போது நம் கைப்பேசியில் விளையாடத்தான் ஆர்வமாக வருகிறார்கள். கதை கேட்க விருப்பமில்லை. ஏன் பிள்ளைகளைக் கண்டிக்க முடியவில்லை? காரணம், பாசம் மற்றும் பயம். வீட்டை விட்டுப் போய்விடுவானோ அல்லது ஏதாவது செய்து கொண்டு விடுவானோ என்று அச்சப்படுகிறார்கள். நம் பலவீனம் பிள்ளைகளுக்குத் தெரியும்.

இந்தப் புத்திசாலி குழந்தைகளை, அறிவும் ஆற்றலும் மிகுந்த பிள்ளைகளை, வெட்டிக்கொண்டு வா என்றால் கட்டிக்கொண்டு வரக் கூடிய திறமை உள்ளவர்களை நாம்தான் நெறிப்படுத்தத் தவறிவிடுகிறோம். கனிவையும், கண்டிப்பையும் சம அளவில் காட்ட வேண்டும். இடிப்பாரை இல்லாத மன்னனே கெடும் எனும் போது பிள்ளைகள் என்ன ஆவார்கள்? தேவையற்ற பிடிவாதங்களுக்குப் பணியக் கூடாது. "இல்லை' என்பதை, "முடியாது' என்பதை தாங்கிக்கொள்ள அவர்களைப் பழக்க வேண்டும்.

மறுப்பு சொல்லும்போது கொஞ்சம் அழுவார்கள்; அழட்டும். கேட்டவுடன் கிடைத்து விட்டால் அதற்கு மதிப்பு இல்லை. ஒரு பொருளுக்காக ஏங்கி, தவித்து, அழுது, புலம்பி காத்திருக்கட்டும். அதன்பிறகு கிட்டும் பொருளின் மதிப்பை உணர்வார்கள். பணத்தின் அருமை தெரியாமல் வளர்கிறார்கள். நாம் அப்படி வளர்க்கிறோம். பணம் சம்பாதிப்பது எவ்வளவு கடினமான செயல் என்பதைப் புரிய வைக்க வேண்டும். ஒவ்வொரு காசிலும் பெற்றோரின் உழைப்பு இருக்கிறது என்பதை சொன்னால் வளர்ந்த குழந்தைகள் புரிந்து கொள்வார்கள்.

செல்லம் கொடுத்து அவர்களைக் கெடுக்காமல் எதையும் சரியான விகிதத்தில் கொடுக்க வேண்டும். பிறரை மதிப்பது, உதவி செய்வது போன்ற நற்பண்புகளை பெற்றோரிடம் இருந்து அவர்கள் கற்றுக் கொள்வார்கள். அதற்கான பிள்ளையார் சுழியை வீடுதான் முதலில் போட வேண்டும். ஒரு சிற்பத்தை செதுக்குபவர் வேண்டாத பகுதிகளை வெட்டி வெட்டி எறிவார். அதன்பிறகு கல்லுக்குள் ஒளிந்திருக்கும் சிற்பத்தை வெளிக்கொணர்வார். அதேபோல நாமும் நம் குழந்தைகளிடம் உள்ள சின்னச்சின்ன வேண்டாத குணங்களைக் கலைந்துவிட்டால் அவர்கள் ஆகச்சிறந்த குழந்தைகளாக மிளிர்வார்கள்.

கட்டுரையாளர்:

பேராசிரியர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.