பேரவையில் இன்று பதிலளிக்கிறாா் முதல்வா்!பிளஸ் 1, பிளஸ் 2 துணைத் தோ்வு: அனுமதிச் சீட்டு இன்று வெளியீடு!மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்கள், வட தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புசிங்கப்பெண் அதிரடிப் படையை அழைக்க இலவச தொலைபேசி எண் ‘1091’முதல்வரின் தனிச் செயலராக ஜெகதீஷ் பழனிசாமி நியமனம்!2027 - 28-இல் முதுநிலை டிப்ளோமா மருத்துவப் படிப்புகள் நிறுத்தம்!
/

இது 'க்யூஆர் கோடு' காலம்!

டீ கடை முதல் டாஸ்மாக் வரை, கோயில் அன்னதான நன்கொடை முதல் குடிநீர் வரி வரை யுபிஐ பரிவர்த்தனைதான் இன்று ராஜா.

News image

இது 'க்யூஆர் கோடு' காலம் - பிரதிப் படம்

Updated On :23 ஜூன் 2026, 2:18 am IST

காலம் மாறுகிறது என்பது ஒரு சாதாரண வாக்கியம் அல்ல; அது மனித வாழ்வில் நிரந்தர உண்மை. மனிதன் வாழும் விதமும், உறவுகளின் நிலையும், பொருளாதாரச் செயல்பாடுகளும் காலத்துக்கேற்ப மாறிக் கொண்டே இருக்கின்றன. இந்த மாற்றத்தின் சமீபத்திய முகமாக எண்ம (டிஜிட்டல்) பண பரிவர்த்தனை திகழ்கிறது.

ஆதிகாலத்தில் பண்டமாற்ற முறை தோன்றியது. மலையில் விளைந்த தேனையும் தினையையும் கொண்டுவந்து கொடுத்து மருத நிலத்தில் அவர்கள் அரிசியைப் பெற்றுச் சென்றார்கள். நெய்தல் நிலத்திலிருந்து கடலில் பிடிக்கப்பட்ட மீனைக் கொண்டு வந்து மருத நிலத்தில் கொடுத்து உணவுப் பொருள்களை பெற்றுச் சென்றார்கள். காலங்காலமாக நிலவிய பண்டமாற்றத்துக்குப் பிறகு நாணயங்கள் வந்தன. அதன் அடுத்த பரிமாணமாக காகித நோட்டுகள் புழக்கத்துக்கு வந்தன.

2016-இல் பண மதிப்பிழப்பு வந்த போது, இனிமேல் அனைத்தும் பண அட்டைதான் என்றார்கள். நம்மூரில் இதெல்லாம் எப்படி சாத்தியம்? பூக்கார அம்மாவுக்கு எல்லாம் பண அட்டை தேய்க்கும் மின்னணு இயந்திரம் வாங்கித் தருவார்களா என்று பலர் கேலி செய்தனர். ஆனால், இன்று அந்த பூக்கார அம்மா 'க்யூ ஆர் கோடு' ஒட்டப்பட்ட அட்டையை பூவுக்கு நடுவே வைத்து, 'ஸ்கேன் செய்து விட்டு பூவை எடுத்துக் கொள்ளுங்கள்' என மலர்ச்சியாகச் சொல்கிறார். டீ கடை முதல் டாஸ்மாக் வரை, கோயில் அன்னதான நன்கொடை முதல் குடிநீர் வரி வரை யுபிஐ பரிவர்த்தனைதான் இன்று ராஜா.

என்பிசிஐ-யின் கணக்குப்படி 2025 ஆகஸ்ட் மாதத்தில் மட்டும், இந்தியாவில் ரூ.2,000 கோடியைக் கடந்து யுபிஐ பரிவர்த்தனைகள் நடந்திருக்கின்றன. அதில் தமிழ்நாட்டின் பங்கு முதல் மூன்று இடங்களில் உள்ளது. முக்கிய நகரங்களின் மொத்த வியாபாரக் கடையில் மூட்டை தூக்கும் தொழிலாளிகூட இன்று அதன் கூலியை ஜி-பேயில் வாங்குகிறார். ஒருவகையில் பார்த்தால் இது தொழில்நுட்பத்தின் ஜனநாயகமயமாக்கல். சமூகத்தின் எல்லா அடுக்குகளையும் தொழில்நுட்பம் சென்றடைந்து விட்டதற்கான சான்று. வங்கிக் கணக்கு இல்லாதவர்களுக்குக் கூட இன்று அடிப்படை நிதி சேவைகள் கிடைக்கின்றன. 'எண்ம இந்தியா' என்ற கனவு சாலையோர மனிதரின் கையில் உள்ள 'க்யூ ஆர் கோடாக' உருவெடுத்துள்ளது.

திருப்பதி உண்டியல் காணிக்கை முதல் ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவா வரை எல்லாம் இருந்த இடத்தில் இருந்தே பணம் செலுத்தும் நிலை. கையில் காசு இல்லாமல் கைப்பேசியுடன் வீட்டை விட்டுக் கிளம்பும் இளைஞர்கள்தான் இன்று தமிழகத்தில் அதிகம். நாம் கடந்து வந்த பாதையை 2026-இல் திரும்பிப் பார்த்தால் பணம் என்ற கருத்தாக்கமே மொத்தமாக மாறிப் போயிருக்கிறது. ஒரு காலத்தில் கையில் பணம் இருந்தால்தான் பரிவர்த்தனை சாத்தியம் என்ற நிலை இருந்தது. இன்று இணையவசதியுடன் கூடிய கைப்பேசி இருந்தால் போதும். இந்த மாற்றம் வணிக நிலையங்களை மட்டுமல்ல, நடைபாதை வியாபாரத்தையும் எட்டி உள்ளது.

சின்ன சின்ன பெட்டிக்கடைகளைத் தாண்டி காலணி தைக்கும் தொழிலாளி, இளநீர் வெட்டித் தருபவர், நடைபாதையில் பத்து ரூபாய்க்கு கம்மல் விற்கும் இளைஞர் வரை எல்லோரும் 'க்யூ ஆர் கோடை' பயன்படுத்துகிறார்கள். செல்லும் இடமெல்லாம் இந்த 'க்யூ ஆர் கோடுகள்' தான் கண்ணில் படுகின்றன. நாமும் போகும் இடமெல்லாம் நம் கைப்பேசியில் மிக எளிதாக 'கியூ ஆர் கோடை' ஸ்கேன் செய்து பணத்தை அனுப்பிக்கொண்டே இருக்கிறோம். ஒரு பொருளை வாங்கும்போது பணத்தை கைகளால் எண்ணித் தரும் போக்கு நமக்குள் பாதுகாப்பு உணர்வை ஏற்படுத்தும். பணத்தைப் பார்த்து செலவு செய்ய வேண்டும் எனும் எண்ணம் மிகும். யுபிஐ மூலம் கண்ணுக்குத் தெரியாமல் மற்றொருவருக்கு பணம் கைமாறும்போது செலவும் அதிகரிக்க வாய்ப்பிருக்கிறது.

நம் அம்மாக்கள் காய்கறி வாங்க 100 ரூபாய் எடுத்துச் செலவு செய்யும்போதே மனசு கணக்கு போடும். அதே போல 500 ரூபாய் நோட்டு நம் கைவிட்டுப் போகும்போது ஒரு வலி இருக்கும். யுபிஐ பரிவர்த்தனையில் அந்த வலி இல்லை. 'டிங்' என்ற ஒரு சப்தம் மட்டும் காதில் விழும். பணம் போனதே தெரியாது. யாருக்கு எவ்வளவு கொடுத்தோம் என்பதுதான் கைப்பேசியில் பதிவாகி இருக்கிறதே என மனக்கணக்கில் நிற்காது. இதனால், மாதக் கடைசியில் கணக்கில் இருந்த பணம் எங்கே போனது? என்று ஆராய அந்த செயலியைத் திறந்து பார்க்கிறோம்.

எண்ம பணப் பரிவர்த்தனை அதிகரித்த பிறகு நகர்ப்புற இளைஞர்களின் சராசரி மாதச் செலவு 23% அதிகரித்திருக்கிறது என்று ரிசர்வ் வங்கியின் ஆய்வு தெரிவிக்கிறது. சொமேட்டோ, ஸ்விக்கி, அமேஸானில் 'பே லேட்டர்' வழிமுறை இருப்பதால் இந்த மோகம் இன்னும் அதிகரித்திருக்கிறது. கண்ணுக்குத் தெரியாது செலவாகும் பணம் கடனாக பின்னாளில் மாற வாய்ப்பு இருக்கிறது. கடன் அட்டை கலாசாரத்துக்குப் பயந்த நாம், இப்போது யுபிஐ கலாசாரத்தில் விழுந்து கிடக்கிறோம்.

சரி, வங்கிக் கணக்கில் இருக்கும் நம் பணம் பாதுகாப்பாக இருப்பதாக உணர்ந்த காலம் மலையேறி விட்டது. கைப்பேசியில் பல அதிர்ச்சிகள் அரங்கேறுகின்றன. உங்கள் 'கேஒய்சி'-யை அப்டேட் செய்யுங்கள், அதன் லிங்க்கை கிளிக் செய்யுங்கள் என்று வரும் குறுஞ்செய்தியின் லிங்கை தொட்டால், நம் வங்கிக் கணக்கில் இருக்கும் மொத்த பணமும் உடனடியாகத் திருடப்பட்டு விடுகிறது.

'நான் காவல் துறையிலிருந்து உயர் அதிகாரி பேசுகிறேன், உங்கள் ஆதார் எண் தவறான பண பரிவர்த்தனையில் பயன்படுத்தப்பட்டிருக்கிறது' என்று வரும் கைப்பேசி அழைப்பின்போது சாமானியர்கள் குழப்பமடைந்து 'ஓடிபி' எண்ணைப் பகிர்ந்து விடுகின்றனர். அப்படிச் சொல்வதன் மூலம் அவர்களின் வாழ்நாள் சேமிப்புகூட ஒரு விநாடியில் காணாமல் போய்விடும் வாய்ப்பு உள்ளது. படிக்காத பாமரன் மட்டுமல்ல, படித்த ஐ.டி. நிறுவன ஊழியர்களும் ஏமாறுகிறார்கள். பணத்தைப் பாதுகாக்க நம்முடைய பீரோவுக்கு பூட்டு போட்ட நாம், இப்போது அறிதிறன்பேசிக்கு எப்படி பூட்டு போடுவது? என யோசித்துக் கொண்டிருக்கிறோம்.

இன்றைய தேதியில் இணையவழி பணப் பரிமாற்றம் தவிர்க்க முடியாதது. உலகம் அதை நோக்கித்தான் போகிறது. ஊழலைக் குறைக்க, வரி ஏய்ப்பைத் தடுக்க, ஆவணப்படுத்த, வெளிப்படைத்தன்மை போன்ற காரணங்களால் செயலிகள் அவசியம். மீன் விற்கும் அக்காவும் நவீனமயமாகி இப்படி ஒரு கணக்கு வைத்திருப்பது நல்ல மாற்றம்தான். எப்படி பணம் அனுப்புவது, பெறுவது என அனைவரும் தெரிந்து வைத்திருக்கிறார்களே தவிர, அந்தச் செயலியின் நுட்பத்தையும் நுணுக்கத்தையும் அவர்கள் உணரவில்லை. எண்மக் கல்வி கிராமம்தோறும் சென்றடைய வேண்டும்.

பணி நிறைவு பெற்ற உறவினர் என்னிடம், 'முன்பெல்லாம் என் மகனும் மகளும் ஏதேனும் பொருள் தேவைப்பட்டால் என்னிடம் பணமாகப் பெற்று அந்தப் பொருளை வாங்குவார்கள். அவர்கள் கேட்கும்போது பணத்தை என் கையால் எண்ணி எண்ணி தருவேன். அந்த நேரத்தில் அவர்களுக்கு பணத்தின் அருமையையும் மதிப்பையும் சில வார்த்தைகளில் வெளிப்படுத்த நல்ல வாய்ப்பாக இருக்கும். அவர்கள் நன்றி கலந்த மரியாதையுடன் என்னைப் பார்த்து புன்னகைத்தபடி மகிழ்ச்சியுடன் பெற்றுச் செல்வார்கள். அவர்களுக்கும் எனக்குமான பிணைப்பு ஆழமாகவும் அருமையாகவும் இருந்ததுபோல ஒரு திருப்தி.

ஆனால், இன்று அவர்களின் தேவைக்கு என் இணையத் தொடர்பும் கைப்பேசி செயலியும் போதுமானதாக இருக்கிறது. பத்தாயிரம் ரூபாய் என்றால் எண்ணிக் கொடுக்கும் நேரமாவது அவர்கள் என் அருகில் இருப்பார்கள். இப்போது அப்படி இல்லை. சொடுக்குப் போடும் நேரத்தில் பணம் இடம் பெயர்ந்து விடுகிறது. அவர்கள் எங்கோ வெளியில் இருக்க நான் என்னிடத்திலிருந்து அவர்களின் முகம் பார்க்காமல், வாங்கும் பொருள்களின் கடை முகவரி கேட்காமல், அனுப்பிக் கொண்டே இருக்கிறேன். இதனால், உணர்வுப் பாலம் உடைபட்டு நிற்கிறது என்றார்.

உண்மைதான். இன்று வாட்ஸ்-ஆப்பிலேயே கல்யாண பத்திரிகை அனுப்பி வைக்க, பதிலுக்கு 'கியூஆர் கோடு' மூலமாக மொய்ப்பணம் அனுப்பும் காலமாகிவிட்டது.

இப்போதெல்லாம் கடன்கூட அவரவர் வங்கிக் கணக்குக்குள் வந்து விழுந்து விடுகிறது. பலமுறை ஏறி இறங்கி அலைந்து திரிந்து கைநீட்டி வாங்கிய கடனையே சிலர் சுலபமாக மறந்து விடும்போது, முகம் பார்க்காமல் பெற்றுக்கொள்ளும் கடன் எப்படி நினைவில் தங்கும்? தொலைபேசி எண்கள் நம் நினைவில் இருந்து தொலைந்ததுபோல கைப்பேசி பணப் பரிவர்த்தனைகள் நினைவில் மட்டுமல்ல, மனதிலும் தங்காது.

தொழில்நுட்ப வசதிக்காக ஏற்படுத்தப்பட்ட இந்த முறையால் மனிதத்தையும் வாழ்க்கையையும் சரியாகக் கையாளத் தெரிந்தால் நல்லது. இல்லையென்றால் எல்லாம் இருந்தும் உயிர்ப்பு இல்லாத தலைமுறையாக நாம் மாறி விடுவோம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.