ஒரு நண்பரின் வீட்டில் மருமகளுடன் ஒத்துப்போக முடியவில்லை. திருமணமாகி 12 ஆண்டுகள் ஓடிவிட்டன. மனவருத்தமும், சண்டையும் தொடர்கிறது. அப்படியே காலத்தை ஓட்டிக் கொண்டிருந்தார்கள். தற்போது அந்த மருமகள், மாமனார் மற்றும் கணவர் மீது காவல் துறையில் வரதட்சிணைப் புகார் கொடுக்கப் போவதாகக் கூறுகிறார். அத்துடன் விடவில்லை- இன்னும் ஒரு படி அதிகம் போய் சமூக ஊடகங்களில் புகார் செய்வேன் என்று மிரட்டுகிறார். காவல் துறைக்குப் போனால் போகட்டும்; தங்கள் தரப்பு நியாயத்தை விளக்கலாம், ஒன்றும் பயமில்லை என்று தெம்பாக இருந்தவர்கள் தற்போது பயந்து கிடக்கிறார்கள். அந்தப் பெண், ஏதாவது ஏடாகூடமாக செய்துவிட்டால், அவமானமாகி விடுமே என்று அஞ்சுகிறார்கள்.
இளம் பெண்கள் மட்டுமல்ல, சில வயதானவர்கள்கூட "சமூக ஊடகத்துக்குப் போவேன், உன்னை அசிங்கப்படுத்துவேன்' என்று மிரட்டிக் கொண்டிருக்கிறார்கள். இதில் வயது வித்தியாசமோ, அந்தஸ்தோ பார்ப்பதில்லை. ஊடகத்தில் பதிவிடுவது அவர்களுக்கு எளிதாக இருக்கிறது. பின்விளைவுகள் குறித்து சிந்திக்காமல் தானும் அசிங்கப்பட்டு, குடும்பத்தினரையும் அசிங்கப்படுத்துகிறார்கள். இது அவர்கள் கையில் எடுத்துக் கொண்டுள்ள ஆபத்தான ஆயுதம். தங்களுக்கு ஏற்படும் பிரச்னைகள், மன உளைச்சல்கள் குறித்துப் பதிவிடும் பழக்கம் கணிசமாக அதிகரித்து வருகிறது.
காவல் துறையில் புகார் அளித்துவிட்டுக் காத்திருப்பதைவிட சமூக ஊடகங்களில் பதிவிட்டால் உடனடியாக கவனத்தை ஈர்க்கும், தீர்வு கிட்டும் என்று எண்ணுகிறார்கள். ஒரு தனி மனிதரின் புகாரை லட்சக்கணக்கான மக்கள் பகிர்ந்து அதற்கு ஆதரவு நல்கும் போது வெற்றி பெற்று விடலாம் என்று நினைக்கிறார்கள். காவல் துறை, ரயில்வே மற்றும் அரசுத் துறைகள் சமூக ஊடகப் புகார்களைக் கண்காணிக்க தனி குழுக்களை அமைத்துள்ளதால் பல வழக்குகளில் விரைவான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
நம் மக்கள் சமூக வலைதளங்களை எதற்குப் பயன்படுத்துகிறார்கள்? நல்லவர்களை, அவச்சொல்லுக்கு அஞ்சுபவர்களை, தன்மானம் பெரிது என்று வாழ்பவர்களை மிரட்டுவதற்குப் பயன்படுத்துகிறார்கள். எனவே, அவதூறு வழக்குக்கு பயந்து நடுங்கிக்கொண்டிருக்கிறார்கள். விட்டுக் கொடுத்து விடுகிறார்கள் அல்லது பணிந்து போகிறார்கள்.
நாம் எப்போதும் நமக்காக வாழ்வதில்லை. ஊர் என்ன சொல்லும்? என்பதுதான் நம் கவலை. நாலு பேர் பாராட்ட வேண்டும், நாலு பேர் பழி சொல்லக்கூடாது என்பது நமக்கு மிகவும் முக்கியம். ஊரில் நற்பெயருடன் வாழ்பவர்கள், "மீடியா'க்களைக் கண்டு அஞ்சுகிறார்கள். அவர்களின் இந்தப் பயம்தான் மிரட்டுபவர்களின் மூலதனம். குடும்பத்து அங்கத்தினர்கள் எதிரிகளா என்ன?.
வீடு என்பது வெறும் கட்டடம் அல்ல, அது ஓர் உணர்வு; அன்பும், அமைதியும் தவழும் இடம்; அங்கே ஆழ்ந்த புரிதல் இருக்க வேண்டும். சின்னச்சின்ன கோபங்கள், மனக்குறைகள், நீர்க்குமிழி போல சட்டென மறைந்துவிட வேண்டும். வீட்டு உறுப்பினர்களை அவரவர் குறை நிறைகளுடன் ஏற்றுக்கொண்டு அனுசரித்துப் போக வேண்டும். ஒரு பெண்ணுக்கு அவள் புகுந்த வீட்டில் தாங்கொணாத கொடுமை நடக்கிறது என்றால் பொறுத்துப் போகத் தேவையில்லை. குட்டக்குட்ட குனிய வேண்டிய அவசியம் இல்லை. நீதிமன்றம் போய் விவாகரத்து பெற்றுக் கொள்ளலாம். ஆனால், சின்னச்சின்ன பிரச்னைகளை வெளி உலகுக்கு வெளிச்சம் போட்டுக் காட்ட வேண்டிய அவசியம் என்ன?.
ஒரு நல்ல மனிதரைப் பற்றி ஊடகங்களில் அவதூறு செய்தி வந்தால் அந்த நபர் கூனிக் குறுகிப் போவார். வீட்டுக்குள் முடங்கிப் போவார். அதேசமயம் அவர் பக்கத்து நியாயம் நிலைநாட்டப்பட்டதை ஊடகங்கள் சொல்லுவதில்லை.
பெண் வீட்டார் எளிதாக வரதட்சிணைக் கொடுமை, வீட்டுப் பெரியவர்கள் பாலியல் சீண்டல் என்ற ஆயுதங்களைக் கையில் எடுத்துக்கொள்கிறார்கள். பிள்ளை வீட்டாரும் பெண்ணின் நடத்தை குறித்து அவதூறு பரப்புகிறார்கள். ஆக, ஒருவருக்கு மற்றவர் சளைத்தவர் இல்லை. ஒருவர் மீது சேற்றை வாரி இறைக்கிறோம் என்றால் நம் கரங்களிலும் சேறு படியும் என்பதை மறந்துவிடுகிறார்கள். புகார் என்ற பெயரில் தனி நபர்களை குறிவைத்துத் தாக்குவதும், அநாகரிகமான வார்த்தைகளால் திட்டுவதும் அதிகரித்து வருகிறது. குடும்பப் பிரச்னைகளை நான்கு சுவர்களுக்குள் பேசித் தீர்த்துக் கொள்ளாமல் பொது வெளியில் கொண்டு வருவதால் மனக்கசப்புகள் அதிகமாகி, விரோத மனப்பான்மை வந்து விடுகிறது. அதற்குப் பிறகு அங்கே சமாதானம் என்ற நிலைக்கு வழியில்லை.
பெண்கள் கண்ணீருடன் பதிவிடும் போது பொய் அரியாசனம் ஏறி அமர்ந்து விடுகிறது. மெய் மெüனமாகி விடுகிறது. வீட்டில் நடக்கும் சிறு வாக்குவாதம், சண்டை உரையாடல் ஆகிய அனைத்தையும் சில பெண்கள் ரகசியமாக கைப்பேசியில் பதிவு செய்து வைத்துக் கொள்கிறார்கள். வயதானவர்களுக்கு இந்த சூட்சுமம் தெரியாது; ஆகவே அவர்கள் கோபத்தில் வார்த்தைகளைக் கொட்டி விடுகிறார்கள், அந்த வார்த்தைகள் பின்னர் அவர்களுக்கு எதிராக சாட்சி சொல்கின்றன.
சமூக ஊடகங்கள் மிகவும் வலிமையானவை. பதிவிட்ட உடனேயே ஆயிரக்கணக்கானவர்களை சென்றடையும். அவற்றை நல்ல நோக்கத்துக்காகப் பயன்படுத்தலாம்; சமூக விழிப்புணர்வை ஏற்படுத்தலாம்.
நம் திறமையை வெளிப்படுத்த ஊடகங்கள் ஒரு மேடையாக இருக்கின்றன. சமூக ஊடகங்கள் நமக்குப் பிடிக்காதவர்களை அவமானப்படுத்த உள்ள தளம் கிடையாது; அக்கிரமங்களைப் பகிரலாம்; ஆனால் நல்லோரை நடுங்கச் செய்வது இழி செயல்.
இன்றைய இயந்திரத்தனமான வாழ்க்கையில் உண்மையான மகிழ்ச்சியும், உள்ளார்ந்த உறவும் ஒருசில குடும்பங்களில் மட்டுமே காணப்படுகிறது. குடும்ப உறுப்பினர்களிடையே இருக்கும் பிடிவாதம், "தான்' என்ற எண்ணம், குறை கூறும் குணம் ஆகியவையே மனக் கசப்புக்கு அடிப்படை. குடும்பம் என்பது வெறும் மனிதர்களின் கூட்டமைப்போ அல்லது ஒரே கூரையின் கீழ் வாழும் அமைப்போ அல்ல. அது ஒரு மனிதனின் ஆன்மாவுக்கு புகலிடம் தரும் இடம். ஒற்றுமையும் மகிழ்ச்சியும் தானாக வந்துவிடாது. ஒரு நந்தவனத்தை தினமும் நீரூற்றி பராமரிப்பதுபோல குடும்பத்தையும் பராமரிக்க வேண்டும்.
உணர்வுகளை மதித்தல், சொற்களில் நிதானம், தனிமனித சுதந்திரம், அங்கீகாரம், பாராட்டு, வெகுமதி, விட்டுக் கொடுத்து அனுசரித்துப் போதல், மன்னிக்கும் குணம், தவறுகளை இதமாக சுட்டிக் காட்டும் பக்குவம், பெருந்தன்மை ஆகிய அனைத்தும் குடும்ப அமைதிக்கு முக்கியமானவை. குடும்ப ஒற்றுமை எப்போதும் ஒரே நேர்கோட்டில் பயணிப்பதில்லை. அது சில ஏற்ற - இறக்கங்களைக் கொண்டது. மரங்கள் வெளியே தனித்து தெரிந்தாலும் அவற்றின் வேர்கள் பூமிக்கு அடியில் பிணைந்திருக்கும். அவ்வாறு தனித் தனியாக வசித்தாலும் "நம் குடும்பம்' என்ற பிணைப்பு இருக்கவேண்டும்.
மருமகனை, மருமகளை சல்லடை போட்டுத் தேர்வுசெய்து நாம் விரும்பித்தான் நம் வீட்டுக்கு அழைத்து வருகிறோம். அதற்குப் பின் ஏன் மனக் கசப்பும் வெறுப்பும்? பெரியவர்கள் கொஞ்சம் விட்டுக் கொடுத்துப் போகலாம்; தவறில்லை. சிறியவர்கள் அந்த குடும்பத்துக்கு ஏற்ப தங்களை மாற்றிக்கொள்ளலாம். குரலற்றவர்களின் குரலாக சமூக ஊடகங்கள் விளங்குகின்றன. பாதிக்கப்பட்ட பெண்கள் அல்லது ஆண்கள் தங்களுக்கு நேரும் வன்முறைகளை பொதுத் தளங்களில் பதிவிடுவதன்மூலம், அது உடனடியாக பலரின் கவனத்தை ஈர்க்கிறது.
சமூக ஊடகங்களில் புகார் அளிப்பது சில சமயம் ஆபத்துகளை ஏற்படுத்தலாம். ஆத்திரம் கொண்டு புகார் அளித்தவரை கடுமையாக தாக்கலாம். அநாகரிகமான விமர்சனங்களை எதிர்கொள்ள நேரிடும். குடும்ப வன்முறைக்கு எதிராக நிறைய சட்டங்கள் உள்ளன. ஆனாலும், பழி வாங்குவதற்காகவே அதிகம் பேர் சமூக ஊடகங்களை நாடுகிறார்கள். பல வழக்குகளில் சம்பவ இடத்திலேயே இல்லாத கணவனின் வயதான பெற்றோர், திருமணமாகி தள்ளி வாழும் சகோதரிகள் போன்றோரும் வழக்கில் சேர்க்கப்பட்டு கடும் மன உளைச்சலுக்கு உள்ளாகின்றனர். குற்றம் நிரூபிக்கப்படுவதற்கு முன்பே கணவர்- மனைவி குடும்பத்தின் பெயர் கெட்டுப்போகிறது. பொய் வழக்குகள் அதிகரிக்கும்போது உண்மையைக் கண்டறிய கால தாமதம் ஏற்படுகிறது. வரதட்சிணை தடுப்புச் சட்டம் தவறாக பயன்படுத்தப்படுவதை நீதிபதிகள், "சட்ட பயங்கரவாதம்' என்றுகூட வர்ணித்துள்ளனர்.
இணையதளத்தில் வீசப்படும் பொய் குற்றச்சாட்டுகள், ஒரு குடும்பத்தையே உயிருடன் கொல்லும் வல்லமை வாய்ந்தது. ஒரு பெண்ணின் கண்ணீருக்குக் காரணமானவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். ஆனால், பொய்யாகப் புனைவுக் கதைகளைக் கூறக் கூடாது. தொழில்நுட்பம் மனிதர்களை இணைக்க வேண்டுமே தவிர, அவர்களின் வாழ்க்கையைச் சிதைக்கக் கூடாது. சட்டம் தன் கடமையைச் செய்யும் என்ற நம்பிக்கையுடன் பாதிக்கப்பட்டவர்கள் இருக்க வேண்டும். அவர்களுக்குத் தேவைப்படுவது நீதியே தவிர, சமூகத்தின் ஏளனப் பார்வைகள் அல்ல. ஒரு பொய்யை உருவாக்குவதற்கு சில விநாடிகள் போதும்; ஆனால், அந்தப் பொய்யால் இழந்த கெளரவத்தையும், நிம்மதியையும் மீட்டெடுக்க ஒரு குடும்பத்துக்கு ஓர் ஆயுள் போதாது. நம் விரல்கள் தொடும் திரை இன்னொருவரின் வாழ்க்கையைச் சிதைக்காமல் இருக்கட்டும்.
கட்டுரையாளர்:
பேராசிரியர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சமூக ஊடகங்களில் அவதூறு: இளைஞா் மீது வழக்கு

சொல்லப் போனால்... ஜென் ஸீக்களும் பூமர்களும்!

எங்கே கொண்டு போகிறாய் காலமே?

விழித்துக் கொள்! அன்றே தமிழன் மூலம் பாடம் எடுத்த விஜய்!
விடியோக்கள்

காவல் மரணம்; யாரையும் காப்பாற்றும் நோக்கமில்லை! அமைச்சர் நிர்மல் குமார் | TVK

இறுதிச் சுற்றில் மீண்டும் ஆர்ஜென்டினா: சண்டைக்களமாக மாறிய ஆடுகளம்! | FIFA | FIFA World Cup 2026 |

Ravindran Duraisamy interview | விஜய் அரசை அண்ணாமலை விமர்சிக்காதது ஏன்? | TVK | CM Vijay | Annamalai



