/

எங்கே கொண்டு போகிறாய் காலமே?

News image

கோப்புப்படம்.

Updated On :1 ஜூலை 2026, 4:15 am IST

முனைவர் இரா. குறிஞ்சிவேந்தன்

அண்மையில் மறைந்த பிரபல திரையுலகப் பிரமுகரின் உடலைச் சுமந்து வந்த வண்டியிலிருந்து அவ்வுடலை இறக்கிட இயலாதபடி நூற்றுக்கணக்கான கேமரா கருவிகள் முற்றுகையிட்டன. மறைந்த நடிகரின் உடலை ஈக்கள் போல மொய்த்த தனி ஊடகர்களைக் கையெடுத்துக் கும்பிட்ட ஒரு நட்சத்திர நடிகை, "இந்த இடத்தை சர்க்கஸ் ஆக்காதீர்கள், துக்கத்தை வெளிப்படுத்தும் தனிமையைத் தயவு செய்து எங்களுக்குத் தாருங்கள்' என்று கண்ணீருடன் வேண்டினார். ஏனென்றால், அங்கே அஞ்சலி செலுத்த வந்தவர்களுக்கு இணையாக ஆளுக்கொரு கைப்பேசியுடன் "ஊடகர்கள்' நூற்றுக்கணக்கில் கூடியிருந்தனர்.

அச்சு ஊடகங்கள் மட்டுமே செயலாற்றிக் கொண்டிருந்த காலத்தில், பொழுது புலர்வதற்கு முன்பே செய்தித்தாள்களுக்காக அன்றைக்கு மனிதர்கள் காத்திருந்தனர். அந்தச் செய்திகளுக்குள் நிறைந்திருந்த பேருண்மைகள் காலத்தின் சாட்சியங்களாகத் திகழ்ந்தன. களத்தில் செய்தியாளரால் சேகரிக்கப்படும் தகவல்கள், பத்திரிகை அலுவலகத்தின் பல்வேறு படிநிலைகளைக் கடந்து, இறுதியாக கடைந்த தயிரில் திரண்டு நிற்கும் வெண்ணெய் போல பத்திரிகையாசிரியரின் முன் வைக்கப்படும். இப்படித்தான் சார்பும், பொய்யின் சாயலும் படிந்திராத சுத்த சுயம்பிரகாசமாய் செய்திகள் மக்களின் கரங்களை வந்தடைந்தன.

பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் தேசிய இயக்கம் தோன்றி திலகர், காந்தி யுகங்களும், ஆயுதக் குழுக்களும், நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் ஆயுதவழி முன்னெடுப்புகளும் பரந்து விரிந்த இந்தியா முழுமைக்கும் இந்திய விடுதலைவேள்வியை அணையாமல் கொண்டு சேர்த்தது. பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதிப் பகுதி தொடங்கி, விடுதலை பெற்ற காலம் வரை(1947) பிரிக்கப்படாத இந்தியாவிலும், இந்தியாவுக்கு வெளியே உலக அளவிலும் காலனி ஆட்சியின் கொடுமைகளை அறத்தின் துணை கொண்டு நகர்த்திச் சென்றவை, இந்தியப் பத்திரிகையாளர்களின் வலிமை பாய்ந்த எழுத்துகளே.

கேசரி (திலகர்), சுதேசமித்திரன் (சுப்ரமணிய ஐயர்), தி இண்டிபெண்டன்ட் (மோதிலால் நேரு), யங் இந்தியா (மகாத்மா காந்தி) அமிர்தபஜார் பத்திரிகா (சிசிர்குமார் கோஷ்), இந்தியன் எக்ஸ்பிரஸ் மற்றும் தினமணி (ராம்நாத் கோயங்கா) போன்ற பத்திரிகைகள், உலகின் எந்த மூலையிலெல்லாம் இந்தியர்கள் வாழ்ந்தார்களோ அங்கெல்லாம் விடுதலைத்தாகத்தை உருவாக்கிச் சென்றன. எழுத்தையும், எழுதுபவரின் கையிலிருந்த எழுதுகோலையும் தெய்வமாகத் தூக்கி நிறுத்திய மகாகவி பாரதியாரின் சத்தியவாக்குதான் அன்றைய ஊடக உலகின் அடித்தளத்தில் கற்களாகப் பரவிக் கிடந்தன.

தொண்ணூறுகளுக்கு முன்பு, பேரனுபவமும் தெளிந்த நற்சிந்தனையும் வாய்ந்த இந்திய இதழியலாளர்கள் என்று மிகத் துல்லியமாகச் சிலரை நம்மால் அடையாளம் காட்டிவிட முடியும். ஏனென்றால், அந்தப் பத்திரிகையாளர்கள் எவரும் திரைநட்சத்திரங்களைப் பின்தொடர்ந்தவர்கள் இல்லை. மாறாக, அவர்கள் இந்த தேசத்தின் தீர்க்கவியலாப் பிரச்னைகளுக்குத் தீர்வுகளைத் தேடி ஓடியவர்கள்.

எழுபதுகளில் இந்த நாட்டின் மீது நெருக்கடிநிலை திணிக்கப்பட்ட போது, தலைவர்கள் பலரும் தலைமறைவாயினர். நடமாடவே முடியாத அச்சூழலில், ஆயுதம் ஏந்திய காவல் படையினரைப் பேனாமுனை கொண்டு அச்சமின்றி எதிர்த்துக் களமாடியது இந்தியன் எக்ஸ்பிரஸ் போன்ற பத்திரிகைகளே. அன்று அநீதிக்கெதிராக வெடித்த பெரும்புரட்சிகளின் வேர்களிலெல்லாம், அச்சு ஊடகங்கள் வார்த்த அறமருந்துத் துகள்கள் புகைந்து கொண்டிருந்தன. தேசம் தன் நிலையில் இருந்து தளரும் போதெல்லாம் அறமிக்கப் பத்திரிகையாளர்களின் எழுத்துகள் தான் சரிந்த தேசத்தை எடுத்துக் கட்டி நிலைநிறுத்தின.

என்றைக்கு கேமராக்கள் பொருத்தப்பட்ட கைப்பேசிகள், மண்ணில் பிறப்பெடுத்தனவோ அன்றே தனிமனித சுதந்திரத்தின் மீது விலங்குகள் பூட்டப்பட்டு விட்டன. தொழில்நுட்ப யுகம் ஈன்ற கருவிகளின் பெருக்கத்தால், சுயக்கட்டுப்பாடுகள் தளரத் தொடங்கின.

இருநூறு ஆண்டுகளாக உயிரெனப் பின்பற்றப்பட்ட ஊடக அறங்கள் அனைத்தும் கட்டுப்பாடின்றித் திசைக்கொன்றாகப் பறக்கத் தொடங்கின.

கட்சிக்கொன்றாக அவதாரம் எடுத்துள்ள காட்சி ஊடகங்களும், தெருவுக்கு நூறாகப் பெருகி நிற்கும் வலையொளி ஊடகர்களும் தம் மனம் விரும்பும் வகையில் செய்திகளைச் செதுக்கி நடத்துவதே இன்று முடிவுறாத் தொடர்கதைகளாக மாறியுள்ளன.

ஊடக வெளிச்சம் சமூகம் முழுக்கப் பரவுதல் என்பது மகிழ்வான நகர்வே. ஊடகம் என்பது என்பது கலங்கரை விளக்கத்தின் மேல் பொருத்தப்பட்ட ஒளிவிளக்கு ஓய்வின்றி ஒட்டுமொத்தச் சமூகத்தின் மீதும் சுழன்று பாய்ந்திட வேண்டும். ஆனால், மழையின் சாயல் தெறித்தால், புற்றுக்குள் இருந்து ஆயிரக்கணக்கில் புறப்பட்டுப் பறந்து உயிரிழக்கும் புற்றீசல்களாய் பரவுதலால் யாருக்குப் பயன்?

ஊடக உலகம் மட்டுமன்றி, ஒட்டுமொத்தச் சமூகமும் கொடிய பூகம்பத்தில் தலைகீழாகப் புரண்ட பூமி போல் விளம்பரப் பள்ளத்தில் வீழ்ந்து கிடக்கிறது. நகர்ந்து செல்லும் ஒவ்வொரு விநாடியையும் படமாக்க ஆண்களும், பெண்களும் வயது வேறுபாடின்றி இன்று அலைவதைக் காண்கிறோம். வீடுகளும் பொதுவெளிகளும் படப்பிடிப்புத்தளங்களாக மாறி விட்டன. காலையில் எழுவது தொடங்கி, இரவு படுக்கைக்குச் செல்வது வரையிலான எல்லா அசைவுகளும் "ரீல்ஸ்களாக' (குறுங்காணொலிகள்) ஆயிரக்கணக்கில் நாள்தோறும் பாய்ந்து வருகின்றன.

குழந்தைகளின் பிறப்பு, வளர்ப்பு, பள்ளிக்கூடத்தில் குழந்தையின் முதல்நாள், ஆண்டுவிழாக்கள், பிறந்த நாள் கொண்டாட்டங்கள், வாழ்வு, சாவு என்று ஒவ்வொரு நிகழ்வையும் கைப்பேசியில் படம்பிடித்துவிட மனிதர்கள் துடிக்கின்றனர். "அகம்' என்று தமிழ்ச்சமூகம் எதை மறைவாகச் செய்ததோ, அந்த வேலிகள் தகர்க்கப்பட்டு, தேனிலவுகள்கூட தற்போது இலவசக் காட்சிகளாய் சமூகத்தள வெளிகளில் மிதக்கின்றன.

வரலாற்றிலேயே முதன்முறையாக, தன் குழந்தையின் தொப்புள்கொடியை அறுப்பதை பிரசவ அறையிலிருந்து நேரடியாக ஒளிபரப்பி, ஒரு வலையொளிக்காரர் புதுமை செய்தார். இதில் வீட்டில் செல்லப்பிராணிகளை வளர்ப்போர் தனி ரகம். வாசனாதி திரவியங்களில் செல்லப்பிராணியை நீராட்டுதல், சாமானியர்கள் நினைத்தும் பார்க்கவியலாத விலை கொண்ட உணவுகளைப் பிராணிகளுக்கு ஊட்டுதல், பிள்ளைகள் தனியறைகளிலும் பிராணிகள் பெற்றோர்களுடனும் குளிரூட்டப்பட்ட அறைகளில் உறங்கிடும் காட்சிகள் என்று பல கலிகாலக் காணொலிகள் ஆவணங்களில் பதிவாகி வருகின்றன.

கொலைகள் முதல் பாலியல் வன்கொடுமைகள் வரை அனைத்தையும் கைப்பேசியில் பதிவு செய்து, அவற்றைச் சமூகத்தளங்களில் பகிரும் குரூர மனிதர்கள் என்று இந்த உலகம் பரந்து விரிந்துள்ளது. மின்மினிப்பூச்சிகள் போல் ஒவ்வொரு நாளும் ஆயிரக்கணக்கில் பிரசவமாகும் ஐந்து நிமிஷ "ரீல்ஸ்' மோகவலைக்குள் சிக்குண்ட இளைஞர்களால், சான்றோர்களின் உரைகள், ஆசிரியர்களின் கற்பித்தல்கள், பெற்றோர்களின் புலம்பல்கள் என்று எதற்கும் செவிசாய்க்கப் பிடிப்பதில்லை. இத்தொழில்நுட்பப் புரட்சியால் ஒருசில நன்மைகள் விளைகிறதெனினும், பெருவானத்தின் மூலைகளில் ஆங்காங்கே மின்னி அவை மறைந்து விடுகின்றன.

ஆழிப்பேரலை போல் ரசனைகளை அடித்துத் தள்ளிவிட்டு, கண்களுக்கும் விரல்களுக்குமிடையே கைப்பேசிகள் இன்று ஓட்டப்பந்தயம் நடத்திக்கொண்டுள்ளன. காலங்களைத் தொலைத்த பிறகு, கருவிகளால் திணிக்கப்பட்ட செவிகளாலும் உதடுகளாலும் "சேற்று வயலாடி நாற்று நட ஆசை, மீன் பிடித்து மீண்டும் ஆற்றில் விட ஆசை' என்று பாடுவதில் ஏதேனும் பொருள் உள்ளதா?

நெருக்கடி நிறைந்த இன்றைய இயந்திரவாழ்வில், பாதுகாக்கப்பட வேண்டிய பண்புகளில் "தனிமனித சுதந்திரம்' முதற்படியில் உள்ளது. திரையில் ஒளிரும் நட்சத்திரங்களின் தனிமனித சுதந்திரத்தைப் படமெடுத்துச் சமூகத்தில் பரவச்செய்வதும் ஒரு தேசத்தின் நாகரிகப்போக்கை அடியோடுச் வெட்டிச்சாய்த்திடும் கோடரி என்றுணர்தல் வேண்டும்.

நம் நாடு என்றில்லாமல் உலக அளவில் நட்சத்திரங்களைத் துரத்திச் செல்லுதல் ஒரு பெருந்தொற்றாகப் பரவி வருகிறது. மேற்குலகில் விளையாட்டு வீரர்களையும் எழுத்தாளர்களையும் துரத்திச் செல்லும் காட்சிகளை ஊடகங்கள் இன்றும் காட்டுகின்றன... இவ்வாறானதொரு துரத்தலில்தான், பிரிட்டன் மேனாள் இளவரசி டயானா விபத்துக்குள்ளாகி உயிரிழந்தார்.

செய்தித்திரட்டல் என்னும் போர்வையில் திரைப்பிரபலங்களின் துக்கவீடுகளுக்குள் நுழையும் கேமராக்கள், சக திரைநட்சத்திரங்களின் அழுகையையும் கண்ணீர்த்துளிகளையும் படமாக்கி வியாபாரம் செய்வது அத்துக்கத்தைக் காட்டிலும் துயரமானது. இன்னொருவரின் கண்ணீரில் உயிர் வளர்ப்பதற்கு என்ன பெயர் சூட்டலாம்?

கட்டுரையாளர்:

பேராசிரியர்

அயல்நாட்டு தமிழ்க் கல்வித் துறை

தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.