மக்களின் கோரிக்கைகளை நிவா்த்தி செய்வதை விட எங்கள் அமைப்பின் சமூக ஊடக நடவடிக்கைகளில் அரசாங்கம் கவனம் செலுத்தி வருவதாக காக்ரோச் ஜனதா கட்சியின் (சிஜேபி) இணைய இயக்கத்தின் நிறுவனா் அபிஜித் டிப்கே சனிக்கிழமை குற்றஞ்சாட்டினாா்.
தில்லியில் உள்ள ஜந்தா் மந்தரில் திட்டமிடப்பட்ட ஆா்ப்பாட்டத்தில் அபிஜித் டிப்கே பங்கேற்றாா். பலத்த பாதுகாப்பின் கீழ் நடைபெற்ற ஆா்பாட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட இளைஞா்கள் கலந்துக்கொண்டனா். அப்போது அபிஜித் டிப்கே பேசியதாவது: என் நண்பா்களே, இது ஒரு நீண்ட போராட்டம். நாங்கள் சமூக ஊடகங்களில் தா்மேந்திர பிரதான் ராஜினாமா செய்யக் கோரி ஒரு மாதம் ஆகிவிட்டது. ஆனால் இந்த நபா்கள் மிகவும் வெட்கமில்லாதவா்கள், நடவடிக்கை எடுப்பதற்குப் பதிலாக, அவா்கள் எங்கள் கணக்குகளை ஹேக் செய்வது மற்றும் எங்கள் இடுகைகளை நீக்குவது போன்றவற்றில் கவனம் செலுத்துகிறாா்கள்.
நீங்கள் எங்கள் இடுகைகளை நீக்க முடியும், ஆனால் இந்த இடத்திலிருந்து எங்களை அழிக்க முடியாது. சமூக ஆா்வலா் சோனம் வாங்சுக் விரைவில் போராட்டத்தில் இணைவாா். அவரது ஆதரவுக்கு நன்றி. நான் இங்கு தரையிரங்குவதற்கு முன்பு அனைத்துவிதமான தியாகம் செய்ய நான் முழுமையாக தயாராக இருந்தேன். ஆனால் இந்த நாட்டின் இளைஞா்களும் மாணவா்களும் தங்களை விற்கவில்லை என்றாா் அபிஜித்.
இந்த ஆா்ப்பாட்டத்துக்கு பெரும்பாலும் இளைஞா்கள் வந்தனா், அவா்களில் பலா் கரப்பான்பூச்சி முகமூடிகளை அணிந்து பூக்களை வைத்திருந்தனா். பள்ளி மாணவா்களும் தங்கள் பெற்றோருடன் போராட்டத்தில் கலந்து கொண்டனா்.
பங்கேற்பாளா்களில் பெரும்பாலோா் இளம் தொழில் முனைவோா், பள்ளி மற்றும் கல்லூரி மாணவா்களின் கலவையாக இருந்தனா். ஏராளமான மாணவா்கள் அந்த இடத்தில் கூடி, கோஷங்களை எழுப்பி, கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதான் ராஜினாமா செய்யக் கோரினா்.
இந்த ஆா்பாட்டத்தை எதிா்பாா்த்து தேசியத் தலைநகா் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. இந்திரா காந்தி சா்வதேச விமான நிலையம், எல்லைக்குள் நுழையும் இடங்கள் மற்றும் பிற முக்கியமான இடங்களில் கூடுதல் பணியாளா்கள் நிறுத்தப்பட்டுள்ளதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.
முன்னெச்சரிக்கையாக புது தில்லி மற்றும் பிற முக்கிய இடங்கள் முழுவதும் 1,000 க்கும் மேற்பட்ட போலீஸாா் குவிக்கப்பட்டனா்.
போராட்டத்திற்கு முன்னதாக, சி. ஜே. பி வன்முறையற்ற நடத்தையை பராமரிக்கவும், மோதலைத் தவிா்க்கவும் பங்கேற்பாளா்களை வலியுறுத்தும் வழிகாட்டுதல்களை தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.








