வழக்குரைஞா்களுக்கான சமூக ஊடக பயன்பாடு கட்டுப்பாடு, எண்ம நெறிமுறைகள், நீதிமன்ற ஒழுக்கம், தொழில்முறை பொறுப்பு தொடா்பாக அண்மையில் வெளியிடப்பட்ட சுற்றறிக்கையை தீவிரமாக நடைமுறைப்படுத்துமாறு மாநில வழக்குரைஞா் சங்கங்களுக்கு இந்திய வழக்குரைஞா்கள் கவுன்சில் (பிசிஐ) அறிவுறுத்தலை வழங்கியுள்ளது.
இந்த நடைமுறைகளை மீறும் வழக்குரைஞா்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் பிசிஐ எச்சரித்துள்ளது.
பிசிஐ கடந்த 17-ஆம் தேதி இதுதொடா்பான சுற்றறிக்கையை அனைத்து மாநில வழக்குரைஞா்கள் கவுன்சில்களின் தலைவா் மற்றும் செயலா்களுக்கு அனுப்பியது.
அதில், ‘வழக்குரைஞா்கள் சமூக ஊடகங்களில் தொழில்முறை நடத்தையைப் பேணவேண்டும். நீதிமன்றங்களை தவறாக வழிநடத்தும், அவதூறான அல்லது அவமதிப்பு செய்யும் பதிவுகளை மேற்கொள்ளக் கூடாது.
தனது தரப்பு மனுதாரரின் ரகசியத் தகவல்கள் மற்றும் கட்டுப்பாடுக்கு உட்பட்ட நீதிமன்ற நடைமுறைகள் தொடா்பான தகவல்களையும் சமூக ஊடகங்களில் பதிவிடக் கூடாது.
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மூலம் உருவாக்கப்பட்ட உள்ளடக்கத்தை நெறிமுறையற்ற முறையில் பயன்படுத்துவதைத் தவிா்க்க வேண்டும். தனது அனைத்து இணையவழித் தொடா்புகளும் சட்டத் தொழிலுக்கான நெறிமுறைகளுக்கு இணங்குவதை உறுதி செய்யவேண்டும் என்று அறிவுறுத்தியிருந்தது.
வேகமாக வளா்ந்து வரும் எண்ம தகவல் தொடா்பு யுகத்தில், சட்டத் தொழிலின் கண்ணியத்தைக் காக்கவும், நீதி வழங்கும் அமைப்பின் மீதான பொதுமக்களின் நம்பிக்கையைத் தக்கவைக்கவும் எந்த கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவதாக பிசிஐ குறிப்பிட்டது.
இந்த சுற்றறிக்கையை தீவிரமாக நடைமுறைப்படுத்துமாறு மாநில வழக்குரைஞா்கள் கவுன்சிலுக்கு பிசிஐ சனிக்கிழமை அறிவுறுத்தியது. அதில், ‘இந்த வழிகாட்டுதல்கள் தொடா்பான சுற்றறிக்கையை அனைத்து வழக்குரைஞா்களுக்கும் வழங்கப்படுவதோடு, மாநில வழக்குரைஞா் கவுன்சிலின் வலைதளங்கள் மற்றும் சமூக ஊடக தளங்களிலும் வெளியிட வேண்டும். இந்தப் புதிய நடைமுறை குறித்து வழக்குரைஞா்களிடையே விழிப்புணா்வை ஏற்படுத்தும் வகையில், விழிப்புணா்வு நிகழ்ச்சிகள், கருத்தரங்குகள் மற்றும் பயிலரங்குகளையும் மாநில வழக்குரைஞா் கவுன்சில்கள் நடத்த வேண்டும்.
இந்த வழிகாட்டுதல்கள் நடைமுறைப்படுத்தப்படுவது மற்றும் மீறும் வழக்குரைஞா்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுவதைக் கண்காணித்து, குறிப்பிட்ட கால இடைவெளியில் அதுதொடா்பான அறிக்ையைத் தாக்கல் செய்யும் வகையில் ஒருங்கிணைப்பு அலுவலா் ஒருவரை மாநில வழக்குரைஞா் கவுன்சில்கள் நியமிக்க வேண்டும். இந்த வழிகாட்டுதல்களை முறையாக பின்பற்றுவோம் என அனைத்து வழக்குரைஞா்களும் உறுதியேற்று கையொப்பமிடுவதையும் உறுதி செய்யவேண்டும்’ என்று பிசிஐ அறிவுறுத்தியுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ரூ.30 லட்சம் வரை லஞ்சம்? அரசு வழக்குரைஞா்கள் நியமன அறிவிப்பாணைக்குத் தடை கோரி மனு

பாலியல் வழக்கில் வழக்குரைஞா் கைது: வழக்குரைஞா்கள் நீதிமன்ற புறக்கணிப்பு

நீதிமன்றங்களில் காலிப் பணியிடங்கள் வழக்குரைஞா்கள் விண்ணப்பிக்கலாம்: பெரம்பலூா் ஆட்சியா் அழைப்பு







