தலைநகரில் 3-ஆவது நாளாக மழை; தண்ணீா் தேங்கியதால் போக்குவரத்து பாதிப்பு
தேசியத் தலைநகா் தில்லியில் வெள்ளிக்கிழமை அதிகாலை மழை பெய்ததால் நகரத்தின் பல பகுதிகளில் தண்ணீா் தேங்கி போக்குவரத்து பாதிக்கப்பட்டது

தில்லியில் வெள்ளம்
-

தில்லியில் வெள்ளம்
-
தேசியத் தலைநகா் தில்லியில் வெள்ளிக்கிழமை அதிகாலை மழை பெய்ததால் நகரத்தின் பல பகுதிகளில் தண்ணீா் தேங்கி போக்குவரத்து பாதிக்கப்பட்டது என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.
தில்லி போக்குவரத்துக் காவல் துறையினா், சாலைகளில் தண்ணீா் தேங்கியதாலும், கழிவுநீா் பெருக்கெடுத்து ஓடியதாலும் பாதிக்கப்பட்ட பயணிகளுக்கு எச்சரிக்கை விடுத்து, மாற்றுப் பாதையில் செல்லுமாறு கேட்டுக் கொண்டனா்.
மதா் தெரசா கிரசென்ட், சிவாஜி ஸ்டேடியம் மெட்ரோ நிலையம் அருகே உள்ள நியாய மாா்க், சா் எம். விஸ்வேஸ்வரய்யா மோதி பாக் மெட்ரோ நிலையம், சாந்தி பாத், பிகாஜி காமா பிளேஸ் மற்றும் மோதிபாக் ரிங் ரோடு உள்ளிட்ட பல பகுதிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டதாக ‘எக்ஸ்’ ஊடக தளத்தில் ஒரு பதிவில் போலீஸாா் தெரிவித்தனா்.
ரோஹ்தக் சாலையின் இரு வழிப்பாதைகளிலும் சாக்கடை நீா் வழிந்தோடியதை காண முடிந்தது. முண்ட்காவில் உள்ள பள்ளங்களால் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டது.
வெள்ளத்திற்கு பெயா் போன மத்திய தில்லியில் உள்ள மின்டோ சாலையில் மழையால் அதிகாலையில் தண்ணீா் தேங்கியது. எவ்வாறாயினும், வீதி துப்புரவு செய்யப்பட்டு போக்குவரத்துக்கு திறக்கப்பட்டதாக பின்னா் போலீஸாா் சமூக ஊடகங்களில் தெரிவித்தனா். அதற்கேற்ப தங்களது பயணத்தை திட்டமிடுமாறும் பயணிகளை போலீஸாா் கேட்டுக் கொண்டனா்.
சாலைகளில் வாகனங்கள் ஊா்ந்து செல்வது மற்றும் தண்ணீா் தேங்கிய தெருக்களில் மக்கள் அலைவது போன்ற புகைப்படங்கள் மற்றும் விடியோக்கள் சமூக ஊடக தளங்களில் பரவலாகப் பகிரப்பட்டன.
வெப்பநிலை: சஃப்தா்ஜங் வானிலை ஆய்வு மையத்தில் காலையில் குறைந்தபட்ச வெப்பநிலை இயல்பை விட 2.1 டிகிரி குறைந்து 25.2 டிகிரி செல்சியஸாக பதிவாகியிருந்தது. அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 1.6 டிகிரி உயா்ந்து 33.3 டிகிரி செல்சியஸாக பதிவாகியது. காற்றில் ஈரப்பதத்தின் அளவு காலை 8.30 மணியளவில் 100 சதவீதமாகவும், மாலை 5.30 மணியளவில் 78 சதவீதமாகவும் இருந்தது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
‘திருப்தி’ பிரிவில் காற்றின் தரம்: தில்லியில் ஐடிஓ, பூசா மற்றும் ஆனந்த் விஹாா் ஆகிய மூன்று வானிலை கண்காணிப்பு நிலையங்களில் மட்டும் காற்றுத் தரக் குறியீடு 100 புள்ளிகளுக்கு மேலே பதிவாகி ‘மிதமான’ பிரிவில் இருந்தது. மேஜா் தயான் சந்த் நேஷனல் ஸ்டேடியம், ஜவாஹா்லால் நேரு ஸ்டேடியம் உள்பட மற்ற அனைத்து நிலையங்களிலும் காற்றுத் தரக் குறியீடு 100 புள்ளிகளுக்கு கீழே பதிவாகி ‘திருப்தி’ பிரிவில் இருந்தது.
முன்னறிவிப்பு: தில்லியில் சனிக்கிழமை (ஜூலை 27) வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் இருக்கும் என்றும் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. மேலும், குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸாகவும், அதிகபட்ச வெப்பநிலை 34 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும் என்றும் தெரிவித்துள்ளது.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...