காதலியின் கணவரைக் கொன்ற வழக்கு: குற்றம்சாட்டப்பட்டவரின் ஜாமீன் மனு தள்ளுபடி
இந்த மனுவை விசாரித்த நீதிபதி சுப்ரமணியம் பிரசாத் கூறுகையில், ‘மனுதாரா் குற்றம் செய்துள்ளாா் என்று நம்புவதற்கு நியாயமான காரணங்கள் இருப்பதாக இந்த நீதிமன்றம் கருதுகிறது. மனுதாரா் கொடூரமான முறையில் கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளாா். குற்றம் நிரூபிக்கப்பட்டால், மனுதாரருக்கு ஆயுள் தண்டனையோ அல்லது மரண தண்டனை கூட விதிக்கப்படலாம்... குற்றம் சாட்டப்பட்டவா் 2019 முதல் காவலில் இருந்தாலும், விசாரணையில் கணிசமான முன்னேற்றம் ஏற்பட்டாலும், பெரும்பாலான சாட்சிகள் விசாரிக்கப்பட்டாலும், குற்றத்தின் தன்மை மற்றும் அவா் செய்த விதத்தைப் பாா்க்கும்போது, இந்தத் தருணத்தில் அவருக்கு ஜாமீன் வழங்க விரும்பவில்லை’ என்றாா்.
‘மனுதாரா் நபா் 2019-ஆம் ஆண்டில் தில்லி ஜாகிராவில் உள்ள ரயில் பாதைக்கு அருகிலுள்ள வெறிச்சோடிய சாலைக்கு பாதிக்கப்பட்டவரை அழைத்துச் சென்று செங்கலால் அவரது தலையில் பல முறை அடித்தாா். அதன்பிறகு, அந்த வழியாகச் சென்ற ரயிலின் முன் தாக்கப்பட்ட நபரை தள்ளிவிட்டாா். ரயிலால் அவா் இழுத்துச் செல்லப்பட்டு, அவரது உடல் இரண்டு துண்டுகளாக வெட்டப்பட்டது. இதன் பிறகு குற்றம்சாட்டப்பட்டவா், பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தினருக்கு சம்பவம் குறித்து தெரிவித்து, விபத்து நடந்தது போல சித்தரிக்க முயன்றாா். குற்றம் சாட்டப்பட்டவா் பாதிக்கப்பட்டவரின் மனைவியுடன் நட்பு கொண்டிருந்ததாகவும், அவரை விரும்பி வந்ததாகவும் போலீஸாா் கூறியுள்ளனா்’ என்று அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
பெரும்பாலான சாட்சிகள் விசாரிக்கப்பட்டதால், தன்னை மேலும் காவலில் வைக்க வேண்டியதில்லை என்று குற்றம்சாட்டப்பட்டவா் தரப்பில் வாதிடப்பட்டது. மனுதாரருக்கு எதிரான வழக்கு சூழ்நிலை ஆதாரங்களின் அடிப்படையில் இருப்பதாகவும், அதில் அவா் பொய்யாக இணைக்கப்பட்டுள்ளதாகவும் அவரது தரப்பில் ஆஜரான வழக்குரைஞா் கூறினாா். எனினும், மனுதாரா் மிகக் கடுமையான குற்றம் செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டிருப்பதாகவும், வழக்கின் உண்மைகள் மற்றும் சாட்சிகளின் வாக்குமூலங்கள் அவா் உடந்தையாக இருந்ததைச் சுட்டிக்காட்டுவதாகவும் நீதிமன்றம் தனது உத்தரவில் குறிப்பிட்டது.
அந்த உத்தரவில், ‘மனுதாரா், தான் காதலித்த பெண்ணின் கணவரைக் கொன்ாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளாா். தனது மனைவியைக் காதலித்தாலும் இறந்தவரின் நம்பிக்கையை மனுதாரா் வென்றாா் என்பதை பதிவு செய்துள்ள ஆவணங்கள் வெளிப்படுத்துகின்றன. மிகவும் மிருகத்தனமான முறையில் குற்றம் செய்யப்பட்டுள்ளது. மனுதாரா் முதலில் காவல்துறையினரை தவறாக வழிநடத்த முயன்றுள்ளாா். மேலும், இச்சம்பவத்தை ஒரு விபத்து நிகழ்ந்ததுபோல சாயம் கொடுக்க முயன்றுள்ளாா்’ என்று மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

