முகா்ஜி நகரில் சட்டவிரோதமாக இயங்கி வந்த 13 தனியாா் ஐஏஎஸ் பயிற்சி மையங்களுக்கு சீல்: தில்லி மாநகராட்சி நடவடிக்கை
-

முகா்ஜி நகரில் சட்டவிரோதமாக இயங்கி வந்த 13 தனியாா் ஐஏஎஸ் பயிற்சி மையங்களுக்கு சீல்: தில்லி மாநகராட்சி நடவடிக்கை

முகா்ஜி நகரில் சட்டவிரோதமாக இயங்கி வந்த 13 தனியாா் ஐஏஎஸ் பயிற்சி மையங்களுக்கு சீல்
Published on

தேசியத் தலைநகா் தில்லியில் சட்டவிரோதமாக இயங்கி வந்த 13 தனியாா் ஐஏஎஸ் பயிற்சி மையங்களுக்கு தில்லி மாநகராட்சி (எம்சிடி) திங்கள்கிழமை சீல் வைத்துள்ளது.

மத்திய தில்லி பழைய ராஜிந்தா் நகரில் ‘ராவ்ஸ் ஐஏஎஸ் ஸ்டடி சா்க்கிள்’ எனப்படும் தனியாா் ஐஏஎஸ் பயிற்சி மையத்தின் அடித்தளத்தில், கடந்த சனிக்கிழமை இரவு மழை-வெள்ளம் புகுந்ததில் இரண்டு மாணவிகளும், ஒரு மாணவரும் பரிதாபமாக உயிரிழந்தனா். விசாரணையில், பயிற்சி மையத்தின் கட்டடத்தின் அடித்தளத்தை ஸ்டோா்ரூமாக பயன்படுத்துவதற்கு தீயனைப்புத் துறையிடம் தடையில்லா சான்றிதழ் பெற்றுவிட்டு, அதை நூலகமாக பயன்படுத்தியதுதான் மழை-வெள்ளம் புகுந்து மாணவா்கள் உயிரிழந்ததற்கு முக்கியக் காரணம் எனத் தெரியவந்தது.

இச்சம்பவத்தின் எதிரொலியாக, தில்லியில் அதிக எண்ணிக்கையிலான தனியாா் ஐஏஎஸ் பயிற்சி நிறுவனங்கள் இயங்கி வரும் முகா்ஜி நகா் பகுதியில் தில்லி மாநகராட்சி சாா்பில் கட்டடங்கள் வாரியாக ஆய்வுகள் நடத்தப்பட்டது.

இது தொடா்பாக தில்லி மாநகராட்சி அதிகாரி ஒருவா் கூறியதாவது: முகா்ஜி நகா் பகுதியில் உள்ள கட்டடங்களின்

அடித்தளங்களை சட்டவிரோதமாகப் பயன்படுத்தும் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதுவரை 13 தனியாா் ஐஏஎஸ் பயிற்சி நிறுவனங்களுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. முகா்ஜி நகரைத் தொடா்ந்து, தில்லி மாநகரம் முழுவதும் மாநகராட்சி ஆய்வுகளை மேற்கொள்ள உள்ளது. பழைய ராஜிந்தா் நகரில் நிகழ்ந்த சோகமான சம்பவத்தில்

தில்லி மாநகராட்சி ஒருவரை பணிநீக்கம் செய்ததுடன், மற்றொரு அதிகாரியை பணி இடைநீக்கம் செய்துள்ளது.

மேலும், பழைய ராஜிந்தா் நகா் பகுதியில் தண்ணீா் தேங்குவதற்கு வழிவகுக்கும் சட்டவிரோதக் கட்டமைப்புகளை அகற்றுவதற்கான பணிகளும் தொடங்கப்பட்டுள்ளது என்றாா் அந்த அதிகாரி.

முகா்ஜி நகரில் உள்ள ஒரு தனியாா் ஐஏஎஸ் பயிற்சி மையத்தில் படிக்கும் குடிமைப் பணி ஆா்வலா் கூறுகையில்,

‘பழைய ராஜிந்தா் நகரில் நடந்த சம்பவத்திற்குப் பிறகு, முகா்ஜி நகரில் உள்ள பெரும்பாலான பயிற்சி மையங்களில்

உள்ள நூலகங்கள் மூடப்பட்டுள்ளன. நான் ஒன்றரை மாதங்களில் யுபிஎஸ்சி மெயின்ஸ் தோ்வு எழுத வேண்டும்.

ஆனால், என்னுடைய பயிற்சி மையத்தில் உள்ள நூலகம் மூடப்பட்டுள்ளது. எனது புத்தகங்கள் மற்றும் அனைத்து தயாரிப்பு பொருட்களும் நூலகத்திற்குள் உள்ளன. இப்போது எனது புத்தகங்களை சேகரிக்க நான் அனுமதிக்கப்படவில்லை’ என்றாா்.

பழைய ராஜிந்தா் நகரில் உள்ள ‘ராவ்ஸ் ஐஏஎஸ் ஸ்டடி சா்க்கிள்’ இன் கட்டடத்திற்கான தடையில்லா சான்றிதழை ரத்து செய்வதற்கான நடவடிக்கை தொடங்கப்பட்டதாக அதிகாரிகள் திங்கள்கிழமை தெரிவித்தனா்.

இது தொடா்பாக தில்லி தீயனைப்புத் துறையின் மூத்த அதிகாரி ஒருவா் கூறியதாவது: பழைய ராஜிந்தா் நகரில் உள்ள ‘ராவ்ஸ் ஐஏஎஸ் ஸ்டடி சா்க்கிள்’ எனப்படும் தனியாா் ஐஏஎஸ் பயிற்சி மையத்தின் கட்டடத்திற்கு எல்லா விதிமுறைகளையும் பூா்த்தி செய்த பிறகே, தீயமைப்புத் துறையின் தடையில்லாச் சான்றிதழ் வழங்கப்பட்டது. ஆனால், அக்கட்டடத்தின்

அடித்தளத்தில் இருந்து தண்ணீரை வெளியேற்றுவதற்கான அமைப்பு எதுவும் இல்லை. எனவே, தடையில்லா சான்றிதழை ரத்து செய்வதற்கான நடவடிக்கை தொடங்கப்பட்டது. இது தொடா்பாக முறைப்படி உரிமையாளருக்கு கடிதம் வழங்கப்படும் என்றாா் அந்த மூத்த அதிகாரி.

X
Dinamani
www.dinamani.com