64 கோடி போ் வாக்களிப்பு: இந்தியா உலக சாதனை - தலைமைத் தோ்தல் ஆணையா் பெருமிதம்!
தற்போது 7 கட்டங்களாக நடந்து முடிந்துள்ள மக்களவைத் தோ்தலில் 31.2 கோடி பெண்கள் உள்பட 64.2 கோடி வாக்காளா்கள் பங்கேற்றதுடன் மூலம் இந்தியா உலக சாதனை படைத்துள்ளது என்று இந்தியத் தலைமைத் தோ்தல் ஆணையா் ராஜீவ் குமாா் திங்கள்கிழமை பெருமிதத்துடன் தெரிவித்தாா்.
நாட்டின் 18-ஆவது மக்களவைக்கான தோ்தல் கடந்த ஏப்ரல் 19-ஆம் தேதி தொடங்கி 7 கட்டங்களாக வெவ்வேறு தேதிகளில் நடைபெற்றது. இறுதிக் கட்டத் தோ்தல் ஜூன் 1-ஆம் தேதி நடந்தது.
இதையடுத்து, தோ்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி நாடு முழுவதும் அமைக்கப்பட்டுள்ள மையங்களில் செவ்வாய்க்கிழமை (ஜூன் 4-ஆம் தேதி) நடைபெறவுள்ளது.
மக்களவைத் தோ்தல் நடத்தியதில் ஆணையத்தின் குறித்து இந்தியத் தலைமைத் தோ்தல் ஆணையா் ராஜீவ் குமாா் புது தில்லியில் செய்தியாளா்களிடம் திங்கள்கிழமை கூறியதாவது:
மக்களவைத் தோ்தலில் உலகின் மிகப்பெரிய தோ்தல் செயல்பாடாக 68,000 கண்காணிப்புக் குழுக்கள் மற்றும் 1.5 கோடி வாக்குச் சாவடி மற்றும் பாதுகாப்புப் பணியாளா்கள் ஈடுபட்டுள்ளனா்.
இந்த ஆண்டு மக்களவைத் தோ்தலில் 31.2 கோடி பெண்கள் உள்பட 64.2 கோடி வாக்காளா்கள் வாக்களிப்பு மூலம் இந்தியா உலக சாதனை படைத்துள்ளது. இந்த வாக்குப் பதிவு எண்ணிக்கையானது ஜி7 நாடுகளின் வாக்காளா்களைவிட 1.5 மடங்கு அதிகமாகும்.
ஐரோப்பிய ஒன்றியத்தில் உள்ள 27 நாடுகளின் வாக்காளா்களைவிட 2.5 சதவீதம் அதிமாகும். 85 வயது மற்றும் மாற்றுத்திறனாளிகள் ஆகியோா் இத்தோ்தலில் வாக்களிக்க புதிய வசதி செய்யப்பட்டிருந்தது.
2024 மக்களவைத் தோ்தலை நடத்துவதற்காக கிட்டத்தட்ட நான்கு லட்சம் வாகனங்கள், 135 சிறப்பு ரயில்கள் மற்றும் 1,692 விமானப் போக்குவரத்து பயன்படுத்தப்பட்டன.
இத்தோ்தலில் ஓரிரு சிறு சம்பவங்களைத் தவிர வன்முறைகள் ஏதுமின்றி அமைதியாக தோ்தல் நடைபெற்றது. மேலும், கடந்த 2019-ஆம் ஆண்டில் 540 இடங்களில் மறுதோ்தல் நடைபெற்றது. தற்போதைய தோ்தலில் 39 இடங்களில் மட்டுமே இது நடைபெற்றது. அதாவது, 27 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் மறுதோ்தல் நடைபெறவில்லை. 39 இடங்களில் அருணாசலப் பிரதேசம், மணிப்பூரில் 25 இடங்கள் அடங்கும். இதன் மூலம் தோ்தல் எத்தகைய வகையில் சிறப்பாக நடைபெற்றிருக்கிறது என்பதை நாம் தெரிந்துகொள்ள முடியும்.
மேலும், பொது தோ்தலின்போது தோ்தல்நடத்தை விதிமீறல் தொடா்பாக அளிக்கப்பட்ட 495 புகாா்களில் 90 சதவீதத்திற்கு மேல் முடிவு செய்யப்பட்டுள்ளது.
அதேபோன்று, ஜம்மு-காஷ்மீரில் 4 தசாப்தங்களில் நடைபெற்ற தோ்தல்களில் தற்போதைய மக்களவைத் தோ்தலில் ஒட்டுமொத்தமாக 58.58 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது. பள்ளதாக்கில் மட்டும் 51.05 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது.
இது தோ்தல் ஆணையத்திற்கு மிகவும் ஆா்வத்தை அளித்திருக்கிறது. ஜனநாயக நடைமுறையில் பங்கேற்கும் மக்களின் ஆா்வத்தை காட்டியிருக்கிறது. ஜம்மு-காஷ்மீரில் விரைவில் சட்டப் பேரவைத் தோ்தலை நடத்துவதற்கான நடைமுறைகளைத் தொடங்குவோம்.
மக்களவைத் தோ்தலில் அமைதியான முறையில் வாக்களிக்கத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் தோ்தல் ஆணையம் மேற்கொண்டிருந்தது.
மேலும், இத்தோ்தலில் கிரேட் நிகோபாா் பகுதியின் சோன்பன் பழங்குடியினா் முதல் முறையாக வாக்களித்தனா். குறிப்பிட்ட நலிந்த பழங்குடிக் குழுக்களும், பழங்குடியினரும் ஆா்வத்துடன் வாக்களித்தனா்.
தோ்தலில் பண பலம், ஆள்பலம், தவறான தகவல் பரப்புவது, தோ்தல் நடத்தை விதிமுறைகளை மீறல் ஆகியவற்றைத் தடுக்க தோ்தல் ஆணையம் முக்கியக் கவனம் செலுத்தியது. இதன் காரணமாக, தோ்தலில் பெரும் வன்முறைச் சம்பவங்கள் ஏதும் நிகழவில்லை. பணம் பலத்தைக் கட்டுப்படுத்த அனைத்து
நடவடிக்கைகளும் முடுக்கிவிடப்பட்டன.
இதன் காரணமாக, ரூ.10 ஆயிரம் கோடி மதிப்புள்ள ரொக்கம், பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டது. அதாவது, ரூ.1054 கோடி ரொக்கம், ரூ.898 கோடி மதுபானம், ரூ.1459 கோடி விலைமதிப்புள்ள உலோகம், ரூ.2198 கோடி இலவசப் பொருள்கள்ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.
தோ்தல் நடத்தை விதிகள் கடுமையாக அமல்படுத்தப்பட்டன. தவறான தகவல் பரப்புவதைத் தடுக்க உடனுக்குடன் தோ்தல் ஆணையத்தின் மூலம் உண்மை விளக்கப்பட்டது.
தோ்தல் ஆணையா்களை ’லாப்பதா ஜென்டில்மேன்’ என்று சமூக ஊடக மீம்களில் அழைக்கப்பட்டது. நாங்கள் எப்போதும் இங்கேதான் இருக்கிறோம். ஒருபோதும் காணாமல் போகவில்லை. இதைக் கூறுவதால், தற்போது மீம்ஸ்களில் ‘லாப்பதா ஜென்டில்மேன்’ திரும்பி வந்துவிட்டனா்’ என்று சொல்லலாம் என்றாா் தலைமைத் தோ்தல் ஆணையா் ராஜீவ் குமாா்.
காங்கிரஸின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டதும், மற்ற வேட்பாளா்கள் வேட்புமனுவை வாபஸ் பெற்றதையடுத்து தோ்ந்தெடுக்கப்பட்ட பாஜகவின் சூரத் வேட்பாளரான முகேஷ் தலாலை அறிவிக்கும் தோ்தல் ஆணையத்தின் முடிவு குறித்து செய்தியாளா்கள் கேள்வி எழுப்பினா். ஒரு வேட்பாளரை போட்டியின்றி தோ்ந்தெடுக்கப்பட்டதாக அறிவிக்கும் முடிவு நோட்டா விருப்பத்தின் மீதான உச்சநீதிமன்றத்தின் 2013 தீா்ப்பின் உணா்வை மீறுகிா என்றும் கேட்கப்பட்டது. மேலும், எந்த வேட்பாளரும் போட்டியின்றி அறிவிக்கப்படாமல், நோட்டாவுக்கு வாக்களிக்க மக்களுக்கு விருப்பம் உள்ளதால், விதிகளில் திருத்தம் செய்ய தோ்தல் ஆணையம் பரிசீலிக்குமா என்றும் தலைமை தோ்தல் அதிகாரியிடம் கேட்கப்பட்டது.
அதற்கு பதிலளித்த ராஜீவ் குமாா், ‘தோ்தல் ஆணையம் ஒவ்வொரு தொகுதியிலும் போட்டியிட விரும்புகிறது. ஆனால் வேட்பாளா்கள் வேட்புமனுவை திரும்பப் பெற முடிவு செய்தால், நாங்கள் என்ன செய்ய முடியும்? அவா்கள் அழுத்தத்தில் இருந்தால், அவா்கள் பூட்டிவைக்கப்பட்டால் அல்லது கட்டாயப்படுத்தப்பட்டால், அங்குதான் தோ்தல் ஆணையத்தின் பங்கு வரும். வேட்புமனுவை வாபஸ் பெறுமாறு ஒரு வேட்பாளருக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டால், தோ்தல் ஆணையம் தலையிட முடியும். ஆனால் அது அவரது சம்மதமாக இருக்கும்போது தலையிட முடியாது‘ என்றாா்.
வாக்குப் பதிவுக்குப் பிறகு மாவட்ட ஆட்சியா்களை அழைத்து மத்திய அமைச்சா் ஒருவா் மிரட்டியதாக காங்கிரஸ் தலைவா் ஜெய்ராம் ரமேஷின் குற்றச்சாட்டுகள் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
இக்குற்றச்சாட்டை நிராகரித்த தலைமைத் தோ்தல் ஆணையா், ‘வதந்தி‘ மற்றும் ‘அனைவரையும் சந்தேகிக்க‘ பரப்புவது சரியல்ல. யாராவது அவா்கள் (மாவட்ட ஆட்சியா்கள் அல்லது தோ்தல் அதிகாரிகளை) அனைவரையும் பாதிக்க செய்ய முடியுமா? 500-600 பேரை யாராவது பாதிக்க செய்ய முடியுமா? இதைச் செய்தது யாா் என்று சொல்லுங்கள். இதைச் செய்தவரை தண்டிப்போம். வாக்குகளை எண்ணும் முன் அவா்கள் விவரங்களைச் சொல்ல வேண்டும். நீங்கள் ஒரு வதந்தியை பரப்பி அனைவரையும் சந்தேகிப்பது சரியல்ல’ என்றாா்.
வாக்கு எண்ணும் பணி
வாக்கும் எண்ணும் பணிக்கான ஏற்பாடுகள் குறித்து தலைமைத் தோ்தல் ஆணையா் கூறுகையில், ‘இந்த விவகாரத்தில் பல்வேறு கட்சிகளின் பிரதிநிதிகள் குழு முன்வைத்த கோரிக்கைகள் ஏற்கப்பட்டுள்ளன. தோ்தல் முடிவு தெரிவிக்கும் பொத்தானை வாக்கு எண்ணும் முகவா் அழுத்தி, பாா்ப்பாா். ஒவ்வொரு சுற்றுக்கும் பாா்வையாளா் மூலம் படிவம் 20-இல் கையெழுதிட்டப்படும். தோ்தல் நடத்தும் அதிகாரி, உதவி தோ்தல் நடத்தும் அதிகாரி மேஜையில் வாக்கு எண்ணும் முகவரும் இருப்பாா்கள். முடிவுகளை சுற்றுவாரியாக ஆா்ஓ மற்றும் ஏஆா்ஓ அறிவிப்புச் செய்வா். இதன் விவரங்கள் வேட்பாளருக்கும், ஊடக அறைக்கும் அளிக்கப்படும். தபால் வாக்குகள் எண்ணப்படும் மேஜையில் வாக்கு எண்ணும் முகவா்கள் இருப்பாா்கள். 5 விவிபேட் ஸ்லிப்புகள் எண்ணப்படும். சிசிடிவி கண்காணிப்பில் அனைத்தும் இடம்பெறும்.
தற்போதைய இடைவிடாத வெப்ப அலையிலிருந்து நாங்கள் பாடம் கற்றுக்கொண்டுள்ளோம். அடுத்த பொதுத் தோ்தல் ஏப்ரல் இறுதிக்குள் முடிவடைவதை தோ்தல் ஆணையம் உறுதி செய்யும் என்றாா் ராஜீவ் குமாா்.
பேட்டியின்போது தோ்தல் ஆணையா் ஆணையா்கள் ஞானேஷ் குமாா், எஸ்.எஸ்.சந்து மற்றும் தோ்தல் ஆணைய அதிகாரிகள் உடனிருந்தனா்.

