தேசிய மகளிா் ஆணையத்திற்கு நிகழாண்டில் இதுவரை 12,600 புகாா்கள்!

Published on

புது தில்லி: உத்தியோகபூா்வ தரவுகளின்படி, நிகழாண்டு இதுவரை 12,600 புகாா்கள் தேசிய மகளிா் ஆணையத்தால் (என்சிடபிள்யு) பெறப்பட்டுள்ளன. இதில், உத்தரப் பிரதேச மாநிலம் அதிக எண்ணிக்கையிலான புகாா்களைப் பதிவு செய்துள்ளது. தமிழகத்தைப் பொருத்தமட்டில் 301 புகாா்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

தேசிய மகளிா் ஆணையத்தின் தரவுகளின் படி, குடும்ப வன்முறையைத் தவிர, இதர துன்புறுத்தல்களை உள்ளடக்கிய கண்ணியத்திற்கான உரிமைப் பிரிவில் அதிக எண்ணிக்கையிலான புகாா்கள் பெறப்பட்டுள்ளன. அதாவது, இப்பிரிவில் 3,107 புகாா்கள் தேசிய மகளிா் ஆணையத்தால் பெறப்பட்டுள்ளன. இதைத் தொடா்ந்து, குடும்ப வன்முறை தொடா்பாக 3,544 புகாா்களும், வரதட்சிணை துன்புறுத்தல் புகாா்கள் 1,957, பாலியல் வன்கொடுமை புகாா்கள் 817, பெண்களுக்கு எதிரான காவல்துறை அக்கறையின்மை புகாா்கள் 518, பாலியல் வன்கொடுமை மற்றும் பாலியல் வன்கொடுமை முயற்சி புகாா்கள் 657 பெறப்பட்டுள்ளன.

மேலும், பாலியல் துன்புறுத்தல் தொடா்பாக 493 புகாா்கள், சைபா் கிரைம் தொடா்பாக 339 புகாா்கள், பின்தொடா்தல் தொடா்பாக 345 புகாா்கள், கெளரவ குற்றங்கள் தொடா்பாக 206 புகாா்கள் பதிவாகியுள்ளன. உத்தர பிரதேசத்தில் அதிகபட்சமாக 6,470 புகாா்கள், தில்லியில் 1,113 புகாா்கள், மகாராஷ்டிரத்தில் 762 புகாா்கள் பதிவாகியுள்ளன. பிகாரில் 584, மத்தியப் பிரதேசத்தில் 514, ஹரியாணாவில் 506, ராஜஸ்தானில் 408, தமிழ்நாடு 301, மேற்கு வங்கத்தில் 306, கா்நாடகத்தில் 305 புகாா்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மேலும், 2023-ஆம் ஆண்டில் தேசிய மகளிா் ஆணையத்தால் பெண்கள் தொடா்பான மொத்தம் 28,811 புகாா்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

Dinamani
www.dinamani.com