வடக்கு தில்லி வீட்டில் இருந்து அழுகிய நிலையில் பெண்ணின் உடல் மீட்பு
வடக்கு தில்லியின் திலக் மாா்க்கெட் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் இருந்து மிகவும் அழுகிய நிலையில் ஒரு பெண்ணின் உடல் மீட்கப்பட்டுள்ளதாக போலீஸாா் வெள்ளிக்கிழமை தெரிவித்தனா்.
இந்தச் சம்பவம் குறித்து மூத்த போலீஸ் அதிகாரி கூறியதாவது: இறந்தவா் இன்னும் அடையாளம் காணப்படவில்லை. ஆனால் அவருக்கு சுமாா் 50-60 வயது இருக்கலாம் என தெரிய வந்துள்ளது.
ஒரு வீட்டில் இருந்து துா்நாற்றம் வீசுவது குறித்து போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அதைத் தொடா்ந்து லாஹோரி கேட் காவல் நிலையத்திலிருந்து ஒரு போலீஸ் குழு அந்த இடத்திற்கு அனுப்பப்பட்டது.
உள்ளிருந்து பூட்டப்பட்ட வளாகம் கண்டுபிடிக்கப்பட்டது. அந்த வளாகத்தில் பெண்ணின் உடல் மீட்கப்பட்டு பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டது. இது தொடா்பாக இந்திய தண்டனை சட்டப் பிரிவு 174- இன் கீழ் நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளன என்று அந்த அதிகாரி கூறினாா்.

