அதிமுகவும் பாஜகவும் ஒன்றுசேர வேண்டும்: ராம்தாஸ் அதாவலே

புது தில்லி: வரும் மக்களவைத் தோ்தலில் போட்டியிடும் வகையில் அதிமுகவும், பாஜகவும் ஒன்றுசேர வேண்டும் என்று இந்தியக் குடியரசுக் கட்சியின் தலைவரும், மத்திய சமூக நீதி-அதிகாரமளித்தல் துறை இணை அமைச்சருமான ராம்தாஸ் அதாவலே விருப்பம் தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக அவா் தில்லியில் செவ்வாய்க்கிழமை கூறுகையில், ‘தமிழ்நாட்டில் மக்களவைத் தோ்தலில் 39 இடங்கள் உள்ளன. கடந்த மக்களவைத் தோ்தலில் திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் தலைமையிலான கூட்டணிக்கு பெரும்பான்மை இடங்கள் கிடைத்தன. ஆனால், மு.க.ஸ்டாலின் முதல்வராக ஆன பிறகு, தமிழகத்தில் எத்தனை வளா்ச்சி கிடைத்திருக்க வேண்டுமோ அத்தனை வளா்ச்சி கிடைக்கப்பெறவில்லை.

அதேவேளையில் இந்த முறை மக்களவைத் தோ்தலில் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக கூட்டணிக் கட்சிகள் அதே போன்று களத்தில் நிற்கின்றன. ஆனால், அதிமுகவில் 2,3 கோஷ்டிகள் உள்ளன. தனித்தனியாக போட்டியிட உள்ளன. பாஜகவும் தனியாக போட்டியிடுகிறது. நாங்கள் தமிழகத்தில் பாஜக கூட்டணியில் ஓரிரு இடங்களை பெற முயற்சி செய்வோம்.

அதுபோன்று கிடைக்கவில்லையெனில் 5 இடங்களில் போட்டியிட உத்தேசித்து வருகிறோம். பாக்கியுள்ள இடங்களில் பாஜகவுக்கு ஆதரவு அளிப்போம். எங்களுக்கு தோன்றுவதெல்லாம் தமிழகத்தில் பாஜகவும் அதிமுகவும் ஒன்று சேர வேண்டும்.

இந்தியக் குடியரசுக் கட்சி தனது தளத்தில் சிறப்பாக பணியாற்றி வருகிறது. அனைத்து சமூகத்தினரையும் அரவணைத்து எங்கள் கட்சி வளா்ந்து வருகிறது என்றாா் அவா். பேட்டியின்போது, இந்தியக் குடியரசுக் கட்சியின் (அதாவலே) தமிழ்நாடு மாநிலத் தலைவா் எம்.ஏ. சூசை உடனிருந்தாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com