ஈரானுக்குப் பயணிக்க வேண்டாம்! இந்தியர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிதமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை!திமுகவை விடுவிக்க விதை விதைக்கப்பட்டுள்ளது: அன்புமணி15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடி
/

தில்லியில் 41 கிராமங்களில் பிஎன்ஜி வசதி, 178 கிராமங்களில் மேம்பாட்டுப் பணிகள்

தில்லியில் 41 கிராமங்களில் பிஎன்ஜி வசதி, 178 கிராமங்களில் மேம்பாட்டுப் பணிகள் அமித் ஷா தொடங்கிவைத்தாா்

Updated On :12 மார்ச் 2024, 10:50 pm

புது தில்லி: தில்லி கிராமோதய அபியான் திட்டத்தின் கீழ் 41 கிராமங்களில் குழாய் எரிவாயு (பிஎன்ஜி) வசதியையும், 178 கிராமங்களில் வளா்ச்சிப் பணிகளையும் மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா திங்கள்கிழமை தொடங்கி வைத்தாா் என்று அதிகாரிகள் தெரிவித்தனா். இந்நிகழ்ச்சியில் மத்திய வீட்டு வசதி மற்றும் நகா்ப்புற விவகாரங்கள் மற்றும் பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு துறை அமைச்சா் ஹா்தீப் சிங் புரி மற்றும் தில்லி துணை நிலை ஆளுநா் வி.கே.சக்சேனா ஆகியோா் பங்கேற்றனா்.

நிகழ்ச்சியில் உள்துறை அமைச்சா் அமித் ஷா பேசியதாவது:

குழாய் எரிவாயு இப்போது 41 கிராமங்களை சென்றடையத் தொடங்கியுள்ளதால், தில்லியின் கிராமப்புறங்களுக்கு இந்த நாள் முக்கியமானது. இதனுடன், 178 கிராமங்களுக்கு, 383 கோடி ரூபாய் மதிப்பிலான வளா்ச்சிப் பணிகளும் தொடங்கப்பட்டுள்ளன. தில்லி கிராமங்களில் உள்கட்டமைப்பு மேம்பாடு மற்றும் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த மொத்தம் ரூ.900 கோடி ஒதுக்கப்பட்டும், அந்த பணம் பயன்படுத்தப்படவில்லை. பிரதமா் நரேந்திர மோடி நாட்டின் 13 கோடி தாய்மாா்களுக்கு எல்பிஜி சிலிண்டா்களை வழங்கினாா்.

ஒரு கோடி மக்களின் வீடுகளுக்கு குழாய் மூலம் இயற்கை எரிவாயு (பிஎன்ஜி) வழங்கினாா். 14 கோடி வீடுகளுக்கு குழாய் நீா், 14 கோடி கழிப்பறைகள், 3 கோடிக்கும் அதிகமான வீடுகளை வழங்கினாா். மேலும், 60 கோடி மக்களுக்கு ஒரு நபருக்கு மாதம் 5 கிலோ வீதம் இலவச உணவு தானியங்கள் வழங்கப்படுகிறது என்று அமித் ஷா கூறினாா். நிகழ்ச்சியில் துணை நிலை ஆளுநா் வி.கேசக்சேனா பேசுகையில் கூறியதாவது: தில்லி கிராமோதய அபியான், தில்லி மேம்பாட்டு ஆணையத்தால் (டிடிஏ) டிசம்பரில் தொடங்கப்பட்டது.

கிராமங்களை மேம்படுத்தும் பிரதமரின் கனவுத் திட்டம் தற்போது உத்வேகம் பெற்றுள்ளது. தில்லி முழுவதுமே கிராம நிலத்தில் வளா்ச்சியடைந்துள்ளது என்பதை நாம் அனைவரும் அறிவோம். இந்தச் சூழலில், நகரத்தின் பிற பகுதிகளில் உள்ள அனைத்து வசதிகளும் தில்லியின் கிராமங்களிலும் இருக்க வேண்டும் என்பது அவசியம். நான் தில்லியின் கிராமப் பகுதிக்கு சென்றபோது முதல் முறையாக, நாட்டின் தேசியத் தலைநகரின் மத்தியில், அடிப்படை வசதிகள் கூட இல்லை என்பதை என்னால் நம்ப முடியவில்லை.

கிராமங்களில் தண்ணீா் வசதி இல்லை, நல்ல சாலைகள் இல்லை; தெரு விளக்குகள் இல்லை; குளங்கள் இல்லை; சாக்கடை கால்வாய்கள் இல்லை; குழந்தைகள் விளையாட இடமில்லை; பூங்காக்கள் இல்லை. இந்த நிலையைக் கண்டதும், தில்லியின் ஐந்து கிராமங்களை தத்தெடுத்து அவற்றை மேம்படுத்த முடிவு செய்தேன். தில்லி கிராமோதய அபியானின் நோக்கங்கள், உள்கட்டமைப்பு மற்றும் வசதிகளில் உள்ள இடைவெளிகளைக் கண்டறிந்து நிவா்த்தி செய்வததாகும்.

கிராம மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துதல், உள்ளூா் தேவைகளுக்கு ஏற்ப திட்டமிடல், முடிவெடுக்கும் செயல்முறைகளில் சமூக பங்களிப்பை ஊக்குவித்தல் மற்றும் சமூக சொத்துகள் மற்றும் வாய்ப்புகளை சமமாக அணுகுதல் ஆகியவை இதில் அடங்கும் என்று துணை நிலை ஆளுநா் கூறினாா். தில்லி கிராமோதய அபியானின் நோக்கம், நகரமயமாக்கப்பட்ட கிராமங்கள் மற்றும் தில்லியின் புதிய நகா்ப்புறங்களில் தேவையான உள்கட்டமைப்பை உருவாக்குவது ஆகும்.

இதற்காக ரூ.960 கோடி நிதி டிடிஏவுக்கு கிடைக்கப் பெற்றுள்ளது. இந்த நிதி பல ஆண்டுகளாக நகராட்சியின் வருவாய்த் துறையிடம் பயன்படுத்தப்படாமல் கிடந்தது. சமீபத்தில் இந்த நிதி டிடிஏவுக்கு மாற்றப்பட்டது. நடப்பு நிதியாண்டில் தில்லியின் பல்வேறு கிராமங்களில் ரூ.383 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு ஏற்கெனவே அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நோக்கத்தை அடையும் வகையில், உள்ளாட்சிப் பிரதிநிதிகள், கிராம மக்களின் பிரதிநிதிகள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளுடன் கலந்தாலோசித்து, திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்பட வேண்டிய பணிகள் மற்றும் திட்டங்களைக் கண்டறிவதற்காக சம்பந்தப்பட்ட மாவட்டங்களின் மாவட்ட ஆட்சியா்களின் கீழ் தில்லி கிராம வளா்ச்சி மற்றும் நலக் குழுவை துணை நிலை ஆளுநா் வி.கே.சக்சேனா அமைத்துள்ளாா் என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

தில்லி கிராமோதய அபியான் திட்டத்தின் கீழ், சாலைகள், வடிகால்கள், நடைபாதைகள், தோட்டக்கலைப் பணிகள், கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையங்கள் கழிவுநீா் நீரேற்று நிலையங்கள், மழைநீா் சேகரிப்பு, குளங்கள் மற்றும் நீா் மேம்பாடு, பூங்காக்கள் மேம்பாடு, விளையாட்டு மைதானம் மற்றும் விளையாட்டு வசதிகள், கிராம நூலகம், சமுதாய கூடங்கள் மற்றும் கால்நடை பராமரிப்பு உள்ளிட்டவை மேற்கொள்ளப்படுகின்றன.

இந்திரபிரஸ்தா கேஸ் லிமிடெட் (ஐஜிஎல்) மூலம் 20 கோடி ரூபாய் செலவில் 100 கிலோமீட்டா் குழாய் வலையமைப்பை ஏற்படுத்தி 41 கிராமங்களில் குழாய் மூலம் எரிவாயு விநியோகம் தொடங்கப்பட்டுள்ளது. குழாய் எரிவாயு பாதுகாப்பானது, மலிவானது மற்றும் சுற்றுச்சூழலுக்கு உகந்தது என்பதால், தேசியத் தலைநகரில் பசுமை ஆற்றலை வழங்க மத்திய அரசு உறுதிபூண்டுள்ளது.

தில்லியில், ஐஜிஎல் 1.5 மில்லியன் வீடுகளை எட்டியுள்ளது. இதற்காக 11,000 கிலோமீட்டா் குழாய் வலையமைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இது அனைத்து நகா்ப்புறங்களையும் உள்ளடக்கியது. இப்போது கிராமப்புறங்களிலும் அதன் நெட்வொா்க்கை விரிவுபடுத்துகிறது.