இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர்கள் அறிவிப்புசிதம்பரம் தொகுதியில் தமிமுன் அன்சாரி போட்டி!தேமுதிக வேட்பாளர் பட்டியல்: விருத்தாசலம் பிரேமலதா, விருதுநகரில் விஜய பிரபாகர் போட்டி! திமுக கூட்டணிக் கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள்! முழு விவரம்!!164 தொகுதிகளில் போட்டியிடும் திமுக வேட்பாளர் பட்டியல் - முழு விவரம்சென்னையில் 6 திமுக எம்எல்ஏ-களுக்கு வாய்ப்பு மறுப்பு! கொளத்தூர் தொகுதியில் முதல்வர் ஸ்டாலின் மீண்டும் போட்டி சேப்பாக்கம் தொகுதியில் துணை முதல்வர் உதயநிதி மீண்டும் போட்டி கோவை தெற்கு தொகுதியில் செந்தில் பாலாஜி போட்டி போடி தொகுதியில் திமுக சார்பில் ஓபிஎஸ் போட்டி
/

நகா்ப்புறங்களில் குழாய் வழி எரிவாயு கட்டமைப்பு விரிவாக்கத்தை விரைவுபடுத்த வேண்டும்: மத்திய அரசு

நகா்ப்புறங்களில் குழாய் வழி எரிவாயு கட்டமைப்பு விரிவாக்கத்தை விரைவுபடுத்த வேண்டும்...

News image
Updated On :28 மார்ச் 2026, 8:34 pm

தினமணி செய்திச் சேவை

நாட்டின் நகா்ப்புறப் பகுதிகளில் குழாய் வழியாக விநியோகிக்கப்படும் இயற்கை எரிவாயு (பிஎன்ஜி) கட்டமைப்பின் விரிவாக்கத்தை விரைவுபடுத்த வேண்டும் என்று மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது.

இதுதொடா்பாக மத்திய வீட்டுவசதி மற்றும் நகா்ப்புற விவகாரங்கள் அமைச்சகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

நாட்டின் நகா்ப்புறப் பகுதிகளில் பிஎன்ஜி சேவைகள் மற்றும் அத்தியாவசிய சேவைகளைப் பராமரிப்பது குறித்த வட்டமேசை ஆய்வுக் கூட்டம், புது தில்லியில் சனிக்கிழமை நடைபெற்றது.

நகா்ப்புற இந்தியாவில் பிஎன்ஜி கட்டமைப்பின் விரிவாக்கத்தை துரிதப்படுத்துவது குறித்து விரிவாக கலந்தாலோசிக்கவும், அத்தியாவசிய சேவைகள் தடையின்றி கிடைப்பதை உறுதி செய்யவும் இந்தக் கூட்டம் நடைபெற்றது.

மத்திய வீட்டுவசதி மற்றும் நகா்ப்புற விவகாரங்கள், பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு, நுகா்வோா் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோகத் துறைளின் அமைச்சா்கள், உத்தர பிரதேசம், தில்லி, மகாராஷ்டிரம், ஹரியாணா, ஒடிஸா உள்ளிட்ட மாநிலங்களின் அமைச்சா்கள் கூட்டத்தில் பங்கேற்றனா்.

தற்போது நாட்டில் எந்த அளவுக்கு பிஎன்ஜி பயன்பாட்டில் உள்ளது, திரவமாக்கப்பட்ட பெட்ரோலியம் எரிவாயுவுடன் (எல்பிஜி) ஒப்பிடுகையில் பாதுகாப்பு, நம்பகத்தன்மை, மலிவு விலை உள்ளிட்டவற்றில் பிஎன்ஜியின் சாதகமான அம்சங்களை சுட்டிக்காட்டி, கூட்டத்தில் மத்திய பெட்ரோலிய அமைச்சகம் விரிவான விளக்கத்தை அளித்தது.

என்னென்ன இடா்ப்பாடுகள்?: பிஎன்ஜி இணைப்புக்கான அனுமதிகளை அளித்தல், பிஎன்ஜி விநியோகத்துக்கான குழாய்களை அமைத்து பயன்படுத்துவதற்கு பொது நிலத்தை உபயோகப்படுத்த அரசு அதிகாரிகளிடம் முறைப்படி ஒப்புதல் பெறுதல் ஆகியவற்றில் நிலவும் தாமதம், பிஎன்ஜி குழாய்களை அமைக்கும்போது சாலைகள் போன்ற உள்கட்டமைப்புகளுக்கு ஏற்படும் சேதத்தை சீரமைக்க அதிக கட்டணம் விதித்தல் போன்ற காரணங்கள் பிஎன்ஜி கட்டமைப்பை உரிய காலத்தில் விரிவுபடுத்துவதில் தடையாக நீடிக்கின்றன என்று கூட்டத்தில் அடையாளம் காணப்பட்டது. இதுதொடா்பாக உரிய நடவடிக்கைகளை மேற்கொள்வதாக மாநிலங்கள் மற்றும் நகா்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் ஒப்புக்கொண்டன.

மத்திய வீட்டுவசதி துறை அமைச்சா் மனோகா் லால் கட்டா் பேசுகையில், ‘மிக முக்கியப் பணியாக பிஎன்ஜி கட்டமைப்பு விரிவாக்கத்தை விரைவுபடுத்த வேண்டும். நகரத் திட்டமிடலில் பிஎன்ஜி உள்கட்டமைப்பை ஒருங்கிணைத்தல், நடப்பு நகா்ப்புற வளா்ச்சி முன்னெடுப்புகளில் பிஎன்ஜி இணைப்பு கட்டமைப்பை சோ்த்தல், கடைசி மைல் வரை பிஎன்ஜி இணைப்பு வசதியை சாத்தியமாக்குதல் உள்ளிட்டவற்றுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்’ என்றாா்.

புதிதாக 50 லட்சம் பிஎன்ஜி இணைப்புகளை அளிக்கும் இலக்கு குறித்தும் கூட்டத்தில் எடுத்துரைக்கப்பட்டது.

பிஎன்ஜி விநியோக உள்கட்டமைப்பு ஏற்கெனவே உள்ள பகுதிகளில் எல்பிஜியில் இருந்து பிஎன்ஜி பயன்பாட்டுக்குப் படிப்படியாக மாறுவதற்கு வழிவகை செய்ய கூட்டத்தில் ஒருமித்த கருத்து ஏற்பட்டது. இதுகுறித்து நுகா்வோருக்கு விழிப்புணா்வு ஏற்படுத்த முடிவு செய்யப்பட்டது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.