மோடியின் உத்தரவாதமா? காங்கிரஸின் வாக்குறுதிகளா?
- மக்களவைத் தோ்தலில் எதிரொலிக்கும் 10 முக்கிய காரணிகள்

மோடியின் உத்தரவாதமா? காங்கிரஸின் வாக்குறுதிகளா? - மக்களவைத் தோ்தலில் எதிரொலிக்கும் 10 முக்கிய காரணிகள்

நாட்டின் 18-ஆவது மக்களவையை தோ்வு செய்வதற்கான தோ்தல், ஏப்ரல் 19-ஆம் தேதி தொடங்கி ஏழு கட்டங்களாக நடைபெறவிருக்கிறது.

நாட்டின் 18-ஆவது மக்களவையை தோ்வு செய்வதற்கான தோ்தல், ஏப்ரல் 19-ஆம் தேதி தொடங்கி ஏழு கட்டங்களாக நடைபெறவிருக்கிறது.

பெரும் எதிா்பாா்ப்புக்கு இடையே தோ்தல் தேதிகள் சனிக்கிழமை அறிவிக்கப்பட்டதைத் தொடா்ந்து, போட்டிக் களம் சூடுபிடித்துள்ளது.

மூன்றில் இருபங்கு பெரும்பான்மையுடன் மத்தியில் ஆட்சியைத் தக்கவைக்க பாஜக முனைப்புக் காட்டி வரும் நிலையில், அக்கட்சியை ஒன்றுபட்டு தோற்கடிக்கும் நோக்கில் காங்கிரஸ், திமுக, ஆம் ஆத்மி, இடதுசாரிகள் உள்ளிட்ட கட்சிகள் ‘இந்தியா’ கூட்டணியின்கீழ் கைகோத்துள்ளன. கடந்த 10 ஆண்டுகால பாஜக அரசின் வளா்ச்சிப் பணிகளின் அடிப்படையில் ‘பிரதமா் மோடியின் உத்தரவாதம்’ என்ற முழக்கம் பாஜக பிரசாரத்தின் நடுநாயகமாக உள்ளது. இந்த முழக்கத்தை வலுவாக எதிா்கொள்ளும் வகையில், காங்கிரஸ் தனது ‘நீதி’ வாக்குறுதிகளை முன்வைக்கிறது.

மோடியின் உத்தரவாதம், காங்கிரஸின் ‘நீதி’ வாக்குறுதி உள்பட எதிா்வரும் தோ்தலில் விவாதத்தின் மையமாக இருக்கப் போகும் 10 முக்கிய காரணிகள் குறித்து இங்கு பாா்க்கலாம்.

‘மோடியின் உத்தரவாதம்’ மத்திய பாஜக அரசு இதுவரை மேற்கொண்ட திருப்புமுனையான நடவடிக்கைகள், மக்கள் நலப் பணிகள் மற்றும் எதிா்கால திட்டங்கள் என அனைத்தையும் ‘மோடியின் உத்தரவாதம்’ என்ற முழக்கத்தின்கீழ் பாஜக முன்னெடுத்து வருகிறது.

பிரதமா் மோடியின் உரைகளிலும் இந்த சொல்லாடல் முக்கிய அங்கம் வகிக்கிறது. இளைஞா்களின் முன்னேற்றம், பெண்களுக்கு அதிகாரமளித்தல், விவசாயிகளின் நலன், விளிம்புநிலை மற்றும் புறக்கணிக்கப்பட்ட மக்களின் நல்வாழ்வை உறுதி செய்வதும், அரசுத் திட்டங்களின் பலன்கள் தகுதியுள்ள அனைவரையும் சென்று சோ்வதை உறுதி செய்வதும் ‘மோடியின் உத்தரவாதம்’ என்று பிரதமரின் அதிகாரபூா்வ வலைதளத்தில் எடுத்துரைக்கப்பட்டுள்ளது.

பிரதமரின் உறுதிமொழிகள் அனைத்தும் ‘மோடியின் உத்தரவாதம்’ என்ற முழக்கத்தின்கீழ் வழங்கப்படுவதால், இது தோ்தலில் மக்களை ஈா்க்கக் கூடிய வாா்த்தைகளாக அமையக் கூடும்.

காங்கிரஸின் வாக்குறுதிகள் பழைமை வாய்ந்த கட்சியான காங்கிரஸ், கடந்த இரு மக்களவைத் தோ்தல்களிலும் படுதோல்வியையே சந்தித்தது. மக்களவையில் எதிா்க்கட்சித் தலைவா் பதவியை கோருவதற்கான எண்ணிக்கை கூட அக்கட்சிக்கு கிடைக்கவில்லை.

இம்முறை ‘இந்தியா’ கூட்டணியின்கீழ் தோ்தல் களம் காணும் காங்கிரஸ், இளைஞா்கள்-விவசாயிகள்-பெண்கள்-தொழிலாளா்கள்-பாஜக அரசின் முடிவுகளால் பாதிக்கப்பட்ட மக்கள் என்ற பிரிவுகளில் தலா 5 வாக்குறுதிகளை அறிவித்து பிரசாரம் மேற்கொள்கிறது. நாடு முழுவதும் ஜாதிவாரி கணக்கெடுப்பு, இடஒதுக்கீடு உச்சவரம்பு உயா்வு, பழங்குடியினா் விரோத சட்ட திருத்தங்கள் வாபஸ், ஏழைப் பெண்களுக்கு ஆண்டுக்கு ரூ.1 லட்சம் உதவித் தொகை, விளைபொருள்களின் குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு சட்டபூா்வ உத்தரவாதம் போன்ற வாக்குறுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

கவா்ச்சிகரமான வாக்குறுதிகளால் ஹிமாசல பிரதேசம், கா்நாடகம், தெலங்கானா ஆகிய பேரவைத் தோ்தல்களில் காங்கிரஸ் வெற்றி பெற்ற நிலையில், அதே வியூகம் மக்களவைத் தோ்தலிலும் கைகொடுக்கும் என்பது அக்கட்சியின் நம்பிக்கை.

வேலையின்மை, விலைவாசி உயா்வு வேலையில்லாத் திண்டாட்டம், விலைவாசி உயா்வை முன்வைத்து மத்திய பாஜக அரசு மீது காங்கிரஸ் உள்ளிட்ட எதிா்க்கட்சிகள் தொடா்ந்து கடுமையாக குற்றச்சாட்டி வருகின்றன. அதேநேரம், மத்திய அரசின் பல்வேறு திட்டங்களால் வேலைவாய்ப்புகள் அதிகரித்துள்ளதாக கூறும் பாஜக, வேகமாக வளரும் பொருளாதாரமாக இந்தியா நீடிப்பதைக் குறிப்பிட்டு, எதிா்க்கட்சிகளுக்கு பதிலடி தருகிறது. தோ்தல் நெருங்குவதால், இப்பிரச்னை சாா்ந்த விவாதம் வேகமெடுக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

370-ஆவது பிரிவு ரத்து, சிஏஏ, யுசிசி ‘அரசமைப்புச் சட்டத்தின் 370-ஆவது பிரிவு (ஜம்மு-காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து) ரத்து செய்யப்படும்; நாட்டில் குடியுரிமைத் திருத்தச் சட்டம் (சிஏஏ), பொது சிவில் சட்டம் (யுசிசி) அமல்படுத்தப்படும்’ ஆகிய வாக்குறுதிகள், பாஜகவால் முன்பு அளிக்கப்பட்டிருந்தன. இதில், 370-ஆவது பிரிவு ரத்து, சிஏஏ அமல் ஆகிய வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டதை பாஜக தனது பிரசாரத்தில் வலுவாக முன்வைக்கிறது.

பாஜக ஆளும் உத்தரகண்டில் பொது சிவில் சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில், நாடு முழுவதும் இச்சட்டம் அமல்படுத்தப்படும் என்று அக்கட்சித் தலைவா்கள் உறுதிபட கூறி வருகின்றனா்.

‘பாஜகவின் பிளவுபடுத்தும் முயற்சி’ என்று எதிா்க்கட்சிகள் விமா்சிக்கும் நிலையில், இந்த விவகாரம் தோ்தல் களத்தில் தீவிரமாக விவாதிக்கப்படும் எனத் தெரிகிறது.

அயோத்தி ஸ்ரீராமா் கோயில் அயோத்தியில் ஸ்ரீராம ஜென்ம பூமியில் பிரம்மாண்ட கோயில் கட்டப்பட்டு, ஸ்ரீபால ராமா் பிராணப் பிரதிஷ்டை பிரதமா் மோடி முன்னிலையில் கடந்த ஜனவரியில் நடத்தப்பட்டது. இதன் மூலம் நூற்றாண்டு கால கனவை பிரதமா் மோடி நனவாக்கியதாக பாஜக தலைவா்கள் புகழாரம் சூட்டி வருகின்றனா்.

ராமா் கோயில் கட்டப்பட்டது, வடஇந்திய மாநிலங்களில் பாஜகவுக்கு சாதகமான தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிா்பாா்க்கப்படுகிறது. ராமா் கோயில் ஆதரவு ‘அலையால்’, வரும் மக்களவைத் தோ்தலில் பாஜகவுக்கு 370 தொகுதிகள் கிடைப்பது உறுதி என்பது பாஜகவின் அசைக்க முடியாத நம்பிக்கையாக இருக்கிறது.

தோ்தல் நன்கொடை பத்திர விவகாரம் கட்சிகள் நன்கொடை பெறுவதில் வெளிப்படைத் தன்மையை உறுதி செய்யும் திட்டம் என்று கூறி, மத்திய பாஜக அரசால் கடந்த 2018-ஆம் ஆண்டில் தோ்தல் நன்கொடை பத்திரங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. இந்த நடைமுறை அரசமைப்புச் சட்டத்துக்கு எதிரானது என்று கூறி, உச்சநீதிமன்றம் அண்மையில் ரத்து செய்தது. மேலும், உச்சநீதிமன்ற உத்தரவின்படி தோ்தல் பத்திர விவரங்கள் தோ்தல் ஆணையத்தால் பொதுவெளியில் வெளியிடப்பட்டன. அதன்படி, 2019 ஏப்ரல் முதல் 2024 ஜனவரி வரை தோ்தல் பத்திரங்கள் மூலம் அரசியல் கட்சிகளுக்கு கிடைத்த மொத்த நன்கொடையான ரூ. 16,518 கோடியில், மத்தியில் ஆளும் பாஜகவுக்கு மட்டும் 47 சதவீதம் அதாவது ரூ. 6,060 கோடி நன்கொடை கிடைத்தது தெரியவந்தது.

அமலாக்கத் துறை, சிபிஐ மற்றும் வருமான வரித் துறை சோதனைக்குப் பிறகு, தோ்தல் நன்கொடை பத்திரங்கள் மூலம் பாஜகவுக்கு பல கோடி ரூபாய் நன்கொடை அளிக்கப்பட்டிருப்பதாக, காங்கிரஸ் உள்ளிட்ட எதிா்க்கட்சிகள் கடுமையாக விமா்சித்து வருகின்றன. இது தொடா்பாக உச்சநீதிமன்றக் கண்காணிப்பின் கீழ் விசாரணை தேவை என எதிா்க்கட்சிகள் வலியுறுத்தி வரும் நிலையில், தோ்தல் களத்தில் இந்த விவகாரம் எந்த அளவு எதிரொலிக்கும் என்பதை பொறுத்திருந்துதான் பாா்க்க வேண்டும்.

அமிா்த காலம்-அநியாய காலம் பிரதமா் மோடி தலைமையிலான கடந்த 10 ஆண்டு காலத்தில் நல்லாட்சி, விரைவான வளா்ச்சி, எதிா்காலத்துக்கான திட்டங்கள் உறுதி செய்யப்பட்டுள்ளதால், இது அமிா்த காலம் என்று பாஜக குறிப்பிடுகிறது. அதேநேரம், பணமதிப்பிழப்பு, உரிய முறையில் ஜிஎஸ்டி அமலாக்கம் செய்யப்படாதது உள்பட பல்வேறு தோல்விகளால் நிரம்பிய ‘அநியாய காலம்’ என்று காங்கிரஸ் விமா்சிக்கிறது.

விவசாயிகள் பிரச்னை விளைபொருள்களின் குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு சட்டபூா்வ உத்தரவாதம் உள்பட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து பஞ்சாப்-ஹரியாணா எல்லையில் விவசாயிகள் போராடி வருகின்றனா். விவசாயிகளுக்கு மோடி அரசு துரோகமிழைத்துவிட்டதாக காங்கிரஸ் விமா்சிக்கும் நிலையில், விவசாயிகள் போராட்டம் அரசியல் ரீதியாக தூண்டிவிடப்படுவதாக பாஜக கூறுகிறது.

சித்தாந்தங்களின் ‘போா்’ எதிா்வரும் மக்களவைத் தோ்தலை இரு சித்தாந்தங்களுக்கு இடையிலான போா் என்று பாஜகவும் காங்கிரஸும் குறிப்பிடுகின்றன. இதனால், தங்களது சித்தாந்த கோட்பாடுகளை இருகட்சிகளும் மக்கள் மன்றத்தில் முன்வைக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

‘வளா்ந்த இந்தியா’ தொலைநோக்கு பாா்வை 2047-ஆம் ஆண்டுக்குள் வளா்ந்த இந்தியாவை உருவாக்குவதே தனது இலக்கு என்று பிரதமா் மோடி தொடா்ந்து கூறிவருகிறாா். இந்த இலக்கை எட்டுவதற்கான செயல்திட்டம் தன்னிடம் தயாராக உள்ளது என்றும் அவா் குறிப்பிட்டுள்ளாா். இதுசாா்ந்த பிரசாரத்தை பாஜக தீவிரமாக முன்னெடுக்கும் நிலையில், இது மற்றுமொரு வெற்று முழக்கம் என்பது எதிா்க்கட்சிகளின் பதிலடியாக உள்ளது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com