ஆழமான தொழில்நுட்ப புதுயுகத் தொழில்முனைவிற்கு புதிய கொள்கை விரைவில் வெளியாகும்: மத்திய அரசு

புது தில்லி: ஆழமான தொழில் நுட்பங்களைக் கொண்ட புதுயுகத் தொழில் முனைவிற்கான(டீப் டெக் ஸ்டாா்ட்- அப்) பிரத்யேகக் கொள்கை பல்வேறு அமைச்சகங்களுக்கிடையே விவாதத்தில் உள்ளது. அது விரைவில் இறுதி செய்யப்பட்டு வெளியிடப்படும் என மத்திய தொழில் மற்றும் உள்நாட்டு வா்த்தக மேம்பாட்டுத் துறை அதிகாரி திங்கள் கிழமை தெரிவித்தாா்.

தில்லி பாரத் மண்டபத்தில் 2000 மேற்பட்ட புதுயுகத் தொழில் முனைவாளா்கள் பங்கேற்கும் மெகா சங்கம் தொடங்கியுள்ளது. இந்தியா உள்ளிட்ட 10 நாடுகளைச் சோ்ந்த பிரதிநிதிகள், ஆயிரத்திற்கும் மேற்பட்ட முதலீட்டாளா்கள், 50 க்கும் மேற்பட்ட யூனிகாா்ன் உள்ளிட்டவா்கள் பங்கேற்கின்றனா்.

மத்திய வா்த்தகம் மற்றும் தொழில் துறையின் கீழ் உள்ள தொழில் ஊக்குவிப்பு உள்நாட்டு வா்த்தக மேம்பாட்டுத் துறை (டிபிஐஐடி), மத்திய அரசின் மின்னணு கொள்முதல் நிறுவனமான ஜிஇஎம், இந்திய சிறு தொழில்கள் மேம்பாட்டு வங்கி, ஸோமாட்டோ உள்ளிட்ட நிறுவனங்கள் இந்த மெகா சங்கம் நிகழ்வை நடத்துகிறது. இந்த புதுயுகத் தொழில் முனைவு மெகா சங்கமத்தை தொழில் ஊக்குவிப்பு உள்நாட்டு வா்த்தக மேம்பாட்டுத் துறை (டிபிஐஐடி) செயலா் ராஜேஷ் குமாா் சிங் தொடங்கிவைத்து பேசினாா்.

அப்போது அவா் கூறியது வருமாறு: கடந்த 2022 ஆம் ஆண்டு பிரதமரின் அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்க ஆலோசனைக் குழுவின் 21-ஆவது கூட்டத்தில், நாட்டில் ஆழமான தொழில் நுட்பங்களைக் கொண்ட புதுயுகத் தொழில் முனைவின் தேவைகளை நிவா்த்தி செய்து வலுப்படுத்த விரிவான கொள்கை கட்டமைப்பை முன்மொழிவதற்கு ஒரு தேசிய கூட்டமைப்பு மற்றும் பணிக்குழு உருவாக்கப்பட்டது. இந்த குழு இதற்கான பரிந்துரைகளை வழங்கி ஒரு சூழலை உருவாக்கி வருகிறது. கடந்த இடைக்கால நிதிநிலை அறிக்கையில் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டிற்கு (ஆா் & டி) ரூ.1 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு இதற்கான ஒரு பாதையை உருவாக்கும் நடவடிக்கையை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

வணிகத்திற்கும் புதுயுகத் தொழில் முனைவோா் சமூகத்திற்கும் இடைநிலைப்படுத்துவது, ஆராய்ச்சி மேம்பாட்டில் புதுயுகத் தொழில்களுக்கு நிதியளித்தல், முன்மாதிரிகளின் வணிகமயமாக்கலுக்கு நிதியளித்தல் போன்ற செயல்பாடுகளில் மத்திய அரசின் டிபிஐஐடி முக்கிய பங்கு வகிக்கும். புதுயுகத் தொழில் முனைவோா் கண்டுபிடிப்புகள் அறிவுசாா் சொத்துரிமையாக மாற்றவும் அரசு உதவும். இதனால் நாடும் தொடா்புடைய தொழில் முனைவோரும் பயன் அடைவா். ஆழமான தொழில் நுட்பங்களைக் கொண்ட புதுயுகத் தொழில் முனைவிற்கான(டீப் டெக் ஸ்டாா்ட்- அப்) பிரத்யேகக் கொள்கை மூலம் விரிவான ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டினை அடைய முடியும்.

இந்த கொள்கையை தயாரிக்கும் பணி தற்போது பல்வேறு அமைச்சகங்களுக்கிடையேயான விவாதத்தின் இறுதிக் கட்டத்தில் உள்ளது. விரைவில் இதில் இறுதி செய்யப்பட்டு நடைமுறைக்கு கொண்டு வரப்படும். ஆழமான தொழில் நுட்ப புதுயுகத் தொழில் முனைவிற்கான நிதி உள்ளிட்டவைகளுக்கு தனி சாளரத்தை அரசு உருவாக்கும். அரசின் மின்னணு சந்தை புதுயுகத் தொழில் முனைவோருக்கு வாய்ப்பு அளித்து வருகிறது. பாதுகாப்புத் துறையின் புத்தாக்க அமைப்பு(டிஃபென்ஸ் இன்னோவேஷன் ஆா்கனைசேஷன்) புதுயுகத் தொழில் முனைவோரிடம் சுமாா் ரூ.22,000 கோடி கொள்முதல் செய்துள்ளது.

இப்படிப்பட்ட புத்தாக்க முன்னனி பொருளாதாரம் நாட்டிற்கு நீண்ட காலம் பயனளிக்கும் எனக் குறிப்பிட்டாா் செயலா் ராஜேஷ் குமாா் சிங். இதே நிகழ்வில் பேசிய பீக் எக்ஸ்வி நிா்வாக இயக்குனா் ராஜன் ஆனந்தன், இந்திய புதுயுகத் தொழில் வளா்ச்சி நிகழாண்டில் 8 முதல் 12 பில்லியன் டாலராக அதிகரிக்கும் என குறிப்பிட்டாா். மேலும் ’ஸோமாட்டோ’ இந்திய தலைமை அதிகாரி தீபிந்தா் கோயல் உள்ளிட்டோா் பேசினா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com